ADVERTISEMENT

கேரள போலீசால் கொல்லப்பட்ட தமிழர்! -என்கவுண்ட்டர் சர்ச்சை!

01:22 PM Nov 18, 2020 | rajavel

ADVERTISEMENT

பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது அந்த என்கவுண்ட்டர். கேரளா மாநில வயநாடு மலைப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினரும் விவசாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வயநாட்டின் மீன்முட்டி அருவிக்காடு இயற்கை கொஞ்சும் வனப் பகுதிகளை நக்ஸலைட்டுகள் என்னும் மாவோயிஸ்ட்களின் சரணாலயம் என்று வர்ணிக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தலைமறைவு வாழ்க்கைக்காக வருகிற நக்ஸலைட்கள், இந்தப் பாதுகாப்பான பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்களாம். விவசாய மலையகத் தொழிலாளர்களின் உரிமை மீட்புப் போராட்டங்களை, இங்கு வரும் நக்சலைட்டுகள்தான் தூண்டுகிறார்கள் என்கிற கோபம் கேரள அரசுக்கு எப்போதுமே உண்டு.

ஒடுக்கப்படும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களையும் மலையக விவசாயத் தொழிலாளர்களையும் தொடர்ந்து போராட வைத்து, தனியார் எஸ்டேட்டுகளுக்கும் அரசாங்கத்திற்கும் தலைவலியை உண்டாக்கி வந்தனர். இந்த நிலையில் வனத்துறையினரால் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்ட மலைவாழ் பழங்குடியினர், இவர் களின் தைரியத்தில் அவர்களை எதிர்த்து மோதலிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இதனால் கடுப்பான பினராய் விஜயனின் சி.பி.எம் அரசு. நக்சல்களைக் களையெடுக்க ஆன்ட்டி டெரரிஸ்ட் ஸ்குவாட் எனப்படும் "தண்டர் போல்ட் அதிரடிப் படையை' உரு வாக்கியது. மேலும், அவர் களுக்கு ராணுவத்திற்கு இணையான ஆயுதங்களையும் கொடுத்து பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்ஃபார்மர்களின் உதவியோடு, தண்டர் போல்ட், மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டான புதுக்கோட்டை வேல்முருகன் வயநாடு பகுதியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வேல்முருகன், தமிழக க்யூ பிராஞ்ச்சால் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர். கடந்த 2007-ல் பெரியகுளம் முருகமலை வனப் பகுதியில் நக்சலைட் கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவலால் அப்போதைய மாவட்ட எஸ்.பி. சுதாகர் டீம், அவர்களை வளைக்க முயன்றது. ஆனால், புதுக்கோட்டை வேல்முருகன் என்பவர் உள்ளிட்ட ஏழு நக்சலைட்கள் தப்பியுள்ளனர். அவர்கள், கொடைக்கானல், பெருமாள்மலை வனப்பகுதியில் இருப்பதையறிந்த போலீஸ் டீம் அவர்களை 2008-ல் சுற்றி வளைத்தது. நவீன் பிரகாஷ் என்ற நக்சலைட் கொல்லப்பட்டார். அங்கிருந்த வேல்முருகன் உள்ளிட்ட மூன்று நக்சலைட்கள் கைதுசெய்யப் பட்டனர். கைதான வேல்முருகன் மற்றும் அவரது சகாக்களுக்கு 2010-ல் ஜாமீன் கிடைக்க, வெளியே வந்தவர்கள் அப்படியே தலைமறைவாகிவிட்டார்கள்.

இந்த வேல்முருகன் டீமைப் பிடிக்க முடியாத தமிழக க்யூ பிராஞ்ச், அவர்களைப் பற்றிய தகவல்களை கேரள தண்டர் போல்ட்டிடம் கொடுக்க, அவர்கள் அப்போதே வேல்முருகனைக் குறிவைத்துவிட்டார்கள். தமிழக க்யூ பிராஞ்சும், அவர்களைத் தேடப்படும் குற்றவாளியாக 2016-ல் அறிவித்தது. கூடவே, வேல்முருகன் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு என் றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இன்ஃபார்மர் கொடுத்த தகவலின் படி, வயநாடு மீன் முட்டி அருவிக்கரை கிராமப் பகுதியைக் கடந்த 3-ந் தேதி அதி காலையில் முற்றுகையிட்ட தண்டர்போல் டீம், வேல்முருகன் டீமை நெருங்கியது. அப்போது ஏற்பட்ட மோதலில் காலை 9 மணியளவில் வேல்முருகன் கொல்லப் பட்டதாகவும், மற்றவர்கள் காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் தண்டர் போலால் அறிவிக்கப்பட்டது. ஆனால் சம்மந்தப் பட்ட ஏரியாவாசிகளோ, அதி காலை 6 மணியளவில் துப்பாக் கிச் சூடு நடந்தது என்கிறார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகனின் உடலைப் பெற கேரளா சென்ற அவரது வயதான தாயார் கண்ணம்மாள், மகனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். பாதுகாப்பு காரணமாக வேல்முருகனின் உடல், அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மறுநாள், வேல்முருகனின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத் தில் பொது மக்களின் அஞ்சலிக்குப் பின்பு எரியூட்டப்பட்டது.

இதற்கிடையே, கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்த அம்மாநில காங்கிரஸ் தலைவரான முல்லாப்பள்ளி ராமச்சந்திரன், ""வேல்முருகன் போலீசா ரால் திட்டமிட்டு சுடப்பட்டு என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார். வேல்முருகன் உண்மையில் அப்பாவி. வறுமையில் வாடிய பரிதாபத்துக்குரிய ஏழை. அவரை இவர்கள் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் போலீஸை நோக்கிச் சுட்டதாகச் சொல்வது பொய். வேல்முருகனுக்கு மன்னிப்புக் கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கலாம்''’என்று பகிரங்கமாகவே கேரள அரசைக் குற்றம் சாட்டினார்.

அவரிடம் பத்திரிகையாளர்கள், ""நீங்கள் கூட்டுறவுத் துறையின் அமைச்சராக இருந்தவர். உங்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட வறுமை காரணமாகத் தானே பலர் நக்சலைட்டானார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்களே?''’என்று கேள்வி எழுப்ப, சைலண்டாகிவிட்டார் ராமச்சந்திரன்.

எனினும், என்கவுண்டர் செய்யப் பட்ட ஒரு மாவோயிஸ்டுக்கு, நல்லவர் என்று சான்றிதழ் கொடுத்து, அரசைக் குற்றம் சாட்டும் அவரது பேட்டி, கேரள அரசியலில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கேரளப் பகுதியில் தமிழர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமிருந்து கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளது.

-பரமசிவன் & சக்தி
படங்கள் : ப.இராம்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT