ADVERTISEMENT

காஷ்மீர் பற்றியெரியப் போகிறதா???

05:59 PM Jun 22, 2018 | kamalkumar

தீவிரவாதியான தனது மகனை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது என்பதைக் கேள்விப்பட்டார் ஒரு காஷ்மீர் தாய். கொஞ்சம் கூட கலங்கவில்லை, அவர் முகத்தில் சந்தோஷம் பொங்கியது. ஒரு துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதுதான் காஷ்மீரின் இன்றைய நிலை. ஒருவரை சுட்டுக் கொன்றால் ஒன்பது பேர் தீவிரவாதி ஆகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, காஷ்மீரில் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஷ்மீர் மாநிலம் தீப்பிழம்பாக மாறும் என்று ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதுதான் காஷ்மீரின் உண்மையான நிலைமை. காஷ்மீரில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு அமைத்த முதல் நாளில் இருந்தே அந்த அரசை மக்கள் ஏற்கவில்லை. இப்போது அது முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே என்கிறார்கள் மக்கள். ஆனால், மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் விடுத்திருந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக காஷ்மீரே வெறிச்சோடியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமே அரிதாக இருந்தது.

பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களான ஜீலானி, மிர்வைஸ், முகமது அஷ்ரஃப் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இன்னொரு தலைவரான மாலிக் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் செயல் என்று மிர்வைஸ் கூறினார். எங்களை கைது செய்துவிட்டு, தேடுதல் வேட்டை நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

ஆளுநர் வோரா மாநிலத்தில் அமைதி திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டியிருந்தாலும், பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்கள் சண்டையிடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாஜக தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறியிருக்கிறார். அதேசமயம் கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பல அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


இந்தமுறை காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று பாஜக தலைவர் அவினாஷ் கூறியிருக்கிறார். இதுவரை காஷ்மீரில் 8 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகி இருக்கிறது. கடந்த காலங்களில் எல்லைக்கு வெளியே இருந்துவந்த தீவிரவாதத்தை எதிர்கொண்ட ராணுவத்துக்கு இந்தமுறை வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது. உள்நாட்டில், சொந்த மாநில முஸ்லிம் இளைஞர்களுடன் ராணுவம் மோத வேண்டியிருக்கிறது.

ஒரு இளைஞனைக் கொன்றால் அடுத்து 9 இளைஞர்கள் அவனுக்காக தீவிரவாதக் குழுவில் சேரும் நிலை இருக்கிறது. தெற்கு காஷ்மீரில் ஊக்கமாகச் செயல்படும் 144 தீவிரவாத இளைஞர்களை ராணுவம் கணக்கெடுத்துள்ளது. அவர்களில் 131 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். 13 பேர் மட்டும் வெளிநாட்டினர். கடந்த ஜனவரி 1 முதல் மே 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மட்டும் 90 இளைஞர்கள் ஆயுதமேந்தி இருக்கிறார்கள். இதெல்லாம் பாஜக ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கு சான்றாகும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



1977 ஆம் ஆண்டு முதல் 8 தடவைகள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகி இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 4 முறை அமலாகி இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்தார். அதுபோன்றதொரு நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1990 முதல் 6 ஆண்டுகள் 264 நாட்கள் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. அதுதான் மிக நீண்ட ஆளுநர் ஆட்சி நடந்த காலமாகும்.

இப்போதும், பாஜக மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளைப் பொருத்தே ஆளுநர் ஆட்சியின் காலம் நீடிப்பதும், முடிவுக்கு வருவதும் இருக்கிறது என்கிறார்கள். ஏனெனில், பாதுகாப்புப் படையினர் பெண்களின் போராட்டத்தையே சமாளிக்க முடியாமல் திணறினார்கள். இனி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தேடிப்பிடித்து வேட்டையாடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் எவ்வளவுக்கு எவ்வளவு ராணுவ நடவடிக்கை தீவிரமாகிறதோ, அந்த அளவுக்கு தீவிரவாத நடவடிக்கையும் அதிகரிக்கும் என்பதுதான் கடந்தகால வரலாறு. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் காஷ்மீரில் ஒளிவுமறைவாக எதுவும் பண்ணிவிட முடியாது. மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுக்கும் அபாயமும் இருக்கிறது.

அப்படி ஒரு நிலைமை உருவாகவேண்டும். அதை தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று பாஜக நினைத்தால், அதுவும் தோல்வியிலேயே முடியும். ஏனென்றால் இப்போதைய நிலைமைக்கு முழு காரணமும் பாஜகதான் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, இதைவைத்து கேம் ஆட முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT