illegal activities in jammu and kashmir

Advertisment

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச்சூடு மோதல் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஷோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளும், குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே போல், கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து பயங்கரவாத நடமாட்டம் உள்ளதால், அங்கு ராணுவம் மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜிமால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு விரைந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு படையின் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் மரணம் அடைந்தனர். மேலும், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து, அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட தொடங்கினர். இதில் நேற்று (23-11-23) காலை பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் மேலும் ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் ஒருவன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் அவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.