ADVERTISEMENT

'அப்பா பேப்பர் படிக்கிறார்... அம்மா சமைக்கிறார்' இதுதான் நம் பாடப்புத்தம் கற்றுத் தருகிறது - கரு.பழனியப்பன் அதிரடி பேச்சு!

12:20 PM Jul 11, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் பதிலளிக்கிறார்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரண்டு அப்பாவிகளைக் காவல்துறையினர் அடித்தே கொன்றுள்ளனர். நம்மை யார் கேள்வி கேட்பார்கள் என்ற எண்ணமே அவர்களை இந்த அளவிற்குச் செய்யத் தூண்டியுள்ளது. காவல்துறை எது செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவர்கள் அடிமனதில் விதைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணமே இந்த மாதிரியான கொலைகளைச் செய்ய அவர்களுக்கு ஊக்கமாக இருக்கின்றது. அந்த அராஜகத்தை அடியோடு நிறுத்த வேண்டும். இதைத் தொடர விட்டோம் என்றால் மனிதச் சமூகம் இதற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். உண்மை வெளியே வர வேண்டும்.

இதை நாம் அனைவரும் விடாமல் இந்த விஷயத்தை ஃபாலோ செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தக் குற்றத்துக்குரிய நீதி கிடைக்கும். இந்த ஊடங்கள் இவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக் காட்டியதால்தான் அந்தப் பெண் காவலர் ரேவதிக்கு உரிய விடுப்பு கிடைத்துள்ளது. தற்போது காவலர் ஒருவர் அவரது வீட்டிற்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளார். அது எவ்வளவு காலம் நிலைபெறும் என்று தெரியவில்லை. அது நிலைபெறுவதற்கு என்ன வழி இருக்கிறது என்றால், இந்த ஊடகங்களும், பொதுமக்களும் இந்த வழக்கைக் கண்காணிப்பதும், அதைப் பின்தொடர்வதும்தான் அவர்கள் இருவருக்கும் உரிய நீதியைப் பெற்றுதரும். அந்தப் பெண் காவலரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

போலிசை பெருமை படுத்துவது மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வெளிவரும். இயக்குநர் ராம் கூட நான் போலிசை கதாநாயகனாக வைத்துப் படமே இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இயக்குநர் ஹரி அவர்களும் நான் போலிசை பெருமை படுத்துவதைப் போல் படம் எடுத்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

போலிசை பெருமை படுத்துவதைப் போல் படம் எடுத்ததற்காக வருத்தப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி சொன்னதற்குக் காரணம் அவரது குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு. அதுதான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. இந்தச் சம்பவம் வெளிவந்த சில நாட்களில் நடிகர் சூர்யா இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுத் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஏனென்றால் இந்த போலிஸ் படத்தில் ஒன்று, இரண்டு, மூன்று என்று நடித்திருக்கிறோமே என்ற ஆதங்கத்தில் அதைச் சொல்லியிருக்கின்றார். அந்த அசிங்கத்தை அதே ஊரில் இருந்து வந்து படம் எடுத்துவிட்டோமே என்று ஹரி வருத்தம் தெரிவிக்கிறார்.

'விசாரணை' போன்ற சில படங்கள்தான் அந்த இருட்டில் இருக்கும் நிஜத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதைப் போன்று அனைத்துப் படங்களும் வெளிவராது. அதற்கான வாய்ப்பும் இல்லை. நம்முடைய பாடப் புத்தம் என்ன சொல்லி தருகிறது, அப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சமைக்கிறார் என்றுதானே சொல்லி தருகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இணையான சமத்துவம் தரப்படுகிறதா? படங்களில் ஒன்று இரண்டு காட்சிகள் வந்தால்தான் உண்டு. நிஜத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கிறது, என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT