Karu Palaniyappan

பிரபல இயக்குநரும் , நடிகருமான அமீர் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Advertisment

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் தலைப்பு அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், "இறைவன் மிகப்பெரியவன் என்ற தலைப்பை அமீர் என்னிடம் சொன்னதும், இந்தத் தலைப்பில் படம் எடுக்க உங்களைவிட பொருத்தமான ஆள் இல்லை என்று சொன்னேன். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர் அமீர். இந்தப் படத்திற்கு வெற்றிமாறனும் தங்கமும் கதை எழுதியுள்ளனர். மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதை சொல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை வலுவாக அச்சமின்றி சொல்ல வேண்டிய பொறுப்பு கலைஞர்களுக்கு இருக்கிறது.

Advertisment

பட போஸ்டரில் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் என்று எழுதப்பட்டிருந்தது. அனைத்து இயக்குநர்களும் தங்கள் பெயரை கீழே எழுதும்போது அமீர் மட்டும் ஏன் மேலே எழுதியுள்ளார். தன்னுடைய கடவுள் உயர்ந்தவர் என்று குறிப்பிடும் உள்நோக்கத்துடன்தான் அமீர் இவ்வாறு செய்துள்ளார் என்று சிலர் வருவார்கள். இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நாம் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் வேறு பக்கம் திரும்பி நின்று கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

எதைச் செய்தாலும் அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று விரும்பக்கூடியவர் அமீர். அதனால்தான் அவர் படமெடுக்க ஒரு வருட காலம் எடுத்துக்கொள்கிறார். இரண்டு வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு படம் இயக்க அமீர் வந்துள்ளார். அந்த உற்சாகம் படம் வெளியாகும்போது ரசிகர்கள் முகத்திலும் தொற்றட்டும் என வாழ்த்துகிறேன்" எனப் பேசினார்.