ADVERTISEMENT

காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த பா.ஜ.க.வினர்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

03:44 PM Jun 06, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பெண்கள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காசியின் வழக்கில், நாகர்கோவில் காவல்துறை தனிப்படையினர் ஏற்கனவே விசாரித்தறிந்த புலனாய்வுத் தகவல்களை ஆய்வு செய்து, தங்களது விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர், சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

ADVERTISEMENT


காசி வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கத்தினரும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜனும் தனது கருத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். "பெண்களிடம் இத்தனை கீழ்த்தரமாக காசி நடந்துகொண்டது, குமரி மாவட்டத்திற்கே அவமானம். காசி கைதுடன், இந்த வழக்கை முடித்து விட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. ஆனால், காசியின் கூட்டாளிகள் பலருக்கும், குற்றச் செயல்களில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. காசியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


காசி வழக்கில், தி.மு.க. தரப்பினரின் சந்தேகப்பார்வை பா.ஜ.க. மீது படர்ந்திருப்பதை அறிந்தோ என்னவோ, "காசியோடு பா.ஜ.க.வினர் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். இதற்கு, எதிர்வினை ஆற்றும் வகையில் கம்யூனிஸ்ட் தோழர்கள், "காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த அந்த வழக்கறிஞர் பா.ஜ.க. ஆதரவாளர்தானே? எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலத்தான் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு இருக்கிறது''’ என்று சிரிக்கின்றனர்.


மனித பாதுகாப்புக் கழக நிறுவனர் டாக்டர் ஜெய்மோகனோ, "பல குடும்பங்களைச் சீரழித்து விட்டான் காசி. அவன் நடத்திய பணவேட்டையில், பினாமிகளுக்கும் பங்கு போயிருக்கிறது. காசியின் பினாமிகளைக் கைது செய்யாவிட்டால், போராட்டம் வெடிக்கும்'' எனச் சீறிவிட்டு, "சி.பி.சி.ஐ.டி.யில் உள்ள நேர்மையான அதிகாரியின் தலைமையில் இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும். அதே நேரத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.


காசி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என, 2012-ஆம் ஆண்டு தரப்பட்ட, நாகர்கோவில் நகர 33-ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டை, பொதுவெளியில் பரப்பும் ஒரு தரப்பு, "பாலியல் வழக்கின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் “உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது. கட்சியோடும், கட்சியினரோடும் நெருக்கமாக இருப்பவனே கட்சிக்காரன். இந்தக் காசி, தி.மு.க. கட்சியோடோ, கட்சியினரோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவன். அதுவும் அந்த உறுப்பினர் அட்டை, 8 வருடங்களுக்கு முந்தையது'' என்கிறார்கள்.

தொடக்கத்தில், எப்படியாவது காசியைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, போலீஸ் அதிகாரிகளைச் சுற்றி வந்த அவனுடைய கூட்டாளிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் காசிக்கு எதிராகப் புகார் அளிப்பதைத் தடுக்கின்ற காரியத்திலும் ஈடுபட்டனர். தற்போது நிலைமை மாறிவிட்டது. தனிப்பட்ட முறையில், எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாத காசியை பலிகடா ஆக்கிவிட, கூட்டாளிகளே முடிவெடுத்து விட்டனர். ஆதரவு அளித்து வந்தவர்கள் திடீரென கைவிட்டது, காசியின் குடும்பத்தினரை 'அப்செட்' ஆக்கியிருக்கிறது.


காசி பெண்களை வேட்டையாடியபோது, தாங்கள் உடனிருந்த தடயங்கள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளை அழிக்கும் முயற்சியில் கூட்டாளிகள் தீவிரமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த மிரட்சியான சூழ்நிலையில், காசியால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களிடமும் புகார் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரை வளைத்துவிடக்கூடிய அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக காசியின் கூட்டாளிகள் இருப்பதாகவும், திருமணம் ஆகிவிட்ட பெண்களும், திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பெண்களும், பாதுகாப்பற்ற நிலையில் புகார் தர மறுத்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினரே சந்தேகங்களை எழுப்புகின்றனர். இத்தனை குளறுபடிகளையும் களைந்து, காசி வழக்கின் விசாரணையை மிக நேர்மையாக நடத்துவதென்பது, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

- மணிகண்டன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT