ADVERTISEMENT

திருக்குறளை தப்பும் தவறுமாகச் சொன்னால் உங்களை நம்ப வேண்டுமா..? - கமல் கேள்வி!

02:28 PM Mar 05, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT



சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் குறித்து அதிரடியாகப் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வந்திருக்கு அனைவரின் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான கால சூழல் விரைவில் வரும். அதனை மெய்ப்படுத்த வேண்டியது உங்களின் கடமை. என்ன இவர், வாக்களியுங்கள் என்று கெஞ்ச மாட்டேன் என்கிறாரே, அதட்டி வாக்களியுங்கள் என்று கேட்கிறாரே என்று கூட நீங்கள் நினைக்கலாம். நாம் நம்மையே அதட்டிக் கொள்ளும் நேரம் இது. நாம் செய்த தவற்றை திருத்திக்கொள்ளும் நேரம் இது. அதையும் தாண்டி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு பேச இருக்கிறேன். ஏனென்றால், இங்கே கூட நாம் கடமை தவறாதவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்தல் வந்துவிட்டது, இலவசங்களை அறிவிப்பார்கள், மதத்தின் பெயரால் நெருங்குவார்கள், சாதியின் பெயரால் வளைக்கப் பார்ப்பார்கள். எந்தெந்த முறையில் உங்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதை தொடர்ந்து யோசித்து வருபவர்கள், உங்களை எப்போதும் சுற்றிச் சுற்றி வருவார்கள். விலைக்கு வாங்கி விடலாம் என்று சில வியாபாரிகள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் வியாபாரி அல்ல, அரசியல் எனக்குத் தொழிலும் அல்ல.

ADVERTISEMENT


இங்கே நான் சிறுவனாகப் பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பேச்சையெல்லாம் கண்டு மயங்கியிருக்கிறேன். அப்போது இந்த இடத்திற்கெல்லாம் நாம் வர வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூட நான் நினைத்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் தற்போது இல்லை. அந்த இடத்தில் தற்போது தகுதியில்லாதவர்கள் பலர் வந்துள்ளார்கள். அதை, நாம்தான் மாற்ற வேண்டும். தமிழர்கள் எல்லாம் சற்று மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்து என்னால் தமிழ் பேச முடியவில்லையே என்று நடிக்கிறார்கள். அவர்களின் நடிப்பு சில சமயம் நம்மையே விஞ்சுகிறது. தமிழ் மொழி சிறந்தது என்று எங்களுக்குத் தெரியாதா? இத்தனை ஆண்டு காலம் கழித்து நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியுமா? தமிழ் மொழி சிறந்தது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தெரியாதவர்களே அதனை உணர்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் பேசி விடுவார்களோ என்பதே நம்முடைய வருத்தம். தமிழ்க் கலாச்சாரம் உயர்ந்தது என்று இந்த தேர்தல் நேரத்தில் தான் உங்களுக்குத் தெரியவந்துள்ளதா? இவ்வளவு நாள் அந்த கலாச்சாரம் உயர்ந்தது என்று உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது. தேர்தல் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் தெரிந்து விடும் போலும்.

காஷ்மீர் போய் குல்லா வைத்துக்கொண்டால் காஷ்மீர் மக்கள் எல்லாம் நம்மை நம்பி விடுவார்கள் என்ற காலம் எல்லாம் முடிந்து போய்விட்டது. அந்த மாதிரி எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வாக்குகளாக மாறியிருக்கும். தற்போது உங்கள் வித்தைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். எனவே வித்தை காட்டும் வேலைகளை நிறுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு போதும் வாக்குகளாக மாறாது. எங்கள் மொழியைப் பற்றி பேசிவிட்டால் நாங்கள் வாக்களித்து விடமாட்டோம். திருக்குறளை தப்பு தப்பாகப் பேசி விட்டால் நாங்கள் நம்பி விடுவோமா? திருக்குறளை தப்பு தப்பாகச் சொன்னால் மார்க் போடுவோம். அது மட்டும் தான் உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. வேறு எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் இப்படி எல்லாம் பேசி எங்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. நாங்கள் விவரம் தெரியாதவர்கள் இல்லை. எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல. திருவள்ளுவருக்குக் குடுமி எல்லாம் வைத்து எங்களிடம் நீங்கள் விளையாடுகிறீர்கள். இந்த விளையாட்டு எங்களிடம் ஒருபோதும் செல்லுபடியாகாது" என்றார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT