ADVERTISEMENT

பகத்சிங்,ராஜகுரு, சுகதேவுக்கு தூக்கு! கலைவாணருக்கு தடியடி!

01:28 PM Nov 29, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

லாகூர் சதி வழக்கின் காரணமாக 23.3.1931ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர். நாடே சோகத்தில் ஆழ்ந்தது. கொதித்தெழுந்த பலர் வெள்ளையருக்கு எதிராக கூட்டங்கள் கூட்டி கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

24.3.1931ல் தஞ்சை பெரியகோயிலுக்கு அருகில் உள்ள திடலில் வெள்ளையர் ஆட்சிக்கெதிராக கண்டன கூட்டம் நடைபெறும் என்ற தகவல் கிடைத்ததும் தனது கண்டனத்தையும் பதிவு செய்ய டி.கே.முத்துசாமியுடன் புறப்பட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தேசபக்தர் வேங்கட கிருஷ்ணபிள்ளை அக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் மேடையிலேயே கைது செய்யப்பட்டார். இதனால் கூட்டத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். என்.எஸ்.கேவும் இந்த தடியடியில் இருந்து தப்பவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து தேசபக்தி தீயை வளர்க்கும் விதத்தில் தேசபக்தி நாடகங்களை நடத்த டி.கே.எஸ்.சகோதரர்கள் விரும்பினர். அதனால், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘’ பாணபுரத்து வீரன்’நாடகத்தின் அச்சுப்பிரதியை மதுரகவி பாஸ்கரதாஸிடம் இருந்து பெற்றனர். தேசிய விடுதலை போராட்டத்திற்காக நிறைய பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ். காந்திய பக்தரான இவர், மகாத்மா நடத்தும் பல்வேறு போராட்டங்களைப்பற்றி எழுச்சியூட்டக்கூடிய பாடல்களை எழுதியவர். அதற்காக சிறை தண்டனையையும் அனுபவித்தவர்.

பாணபுரத்து வீரன் என்ற நாடகநூல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், தேசபக்தி என்று பெயரை மாற்றி, புதிய காட்சிகள், புதிய பாடல்கள் என புகுத்தி நாடகம் நடத்த முடிவு செய்தனர் டி.கே.எஸ்.சகோதரர்கள்.

புதிய காட்சிகளையும், பாடல்களையும் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிக்கொடுத்தார். மேலும், மகாகவி பாரதியார் எழுதிய ‘’என்று தணியும் இந்த சுந்திர தாகம்’’, ‘’விடுதலை.. விடுதலை..’’, ‘’ ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே’’ முதலிய பாடல்களையும் சேர்த்துக்கொண்டனர். நாடக மேடையில் பாரதியாரின் பாடல் அப்போதுதான் முதன் முதலாக ஒலிக்கத்தொடங்கின.

தேசபக்தி நாடகத்தில், தன் பங்கிற்கு மேலும் பல புதுமையைச்செய்ய நினைத்தார் என்.எஸ்.கே. முத்துசாமியுடன் சென்று காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றுப்புத்தகத்தை வாங்கி வந்தார். அந்த புத்தகத்தை டி.கே.எஸ்.சகோதரர்களிடம் கொடுத்து, ‘’காந்தியடிகள் வாழ்க்கையை வில்லுப்பாட்டாக பாடலாம்’’ என்று சொன்னார். நல்ல சிந்தனை என்று அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். வில்லுப்பாட்டை எழுதினார் என்.எஸ்.கே.

19.5.1931ல் மதுரையில் தேசபக்தி நாடகம் அரங்கேறியது. என்.எஸ்.கே. வில்லுப்பாட்டில் பாடிய ’காந்தி மகான் கதை’ மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. இதுவே நாடக மேடையில் முதன் முதலாக நடத்தப்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.


மாறுவேடத்தில் வந்த போலீஸ்
‘தேசபக்தி’க்கு தடை!

தேசபக்தி நாடகத்தில் சேரிக்காட்சி ஒன்று வரும். அக்காட்சியில் சேரி மக்கள் ஒன்று கூடி, ‘’நம்ம சாதியில் யாரும் குடிக்கவே கூடாது. மீறி குடிப்பவனை சாதியை விட்டு தள்ளிவிட வேண்டும்’’ என்று தீர்மானிப்பார்கள். அப்போது ஒருவர், ‘’இருக்கிற சாதிகளிலே நம் சாதிதானே அண்ணே கடைசி. இதுக்கு கீழே சாதியே கிடையாதே. குடிக்கிறவனை எங்கண்ணே தள்ள முடியும்’’ என்று கேட்பார்.

இப்படித்தான் நாடகத்தின் உரையாடல் அமைக்கப்பட்டிந்தது. ஆனால், நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, ‘’எங்கண்ணே தள்ள முடியும்’’ என்ற கேட்டபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், ‘’இதுக்கு கீழே சாதி இல்லேன்னா அவன் மேல் சாதி எதிலாவது போய்ச் சேர்ந்துக்கட்டும். குடிக்கிறவனை மேல் சாதியிலாவது தள்ளிவிட்டுடுவோம். நம்ம சாதியில் மட்டும் சேர்த்துக்க வேண்டாம்’’ என்று என்.எஸ்.கே. சொன்னதும், கூட்டத்தில் எழுந்த கரவொலி அடங்க வெகு நேரமாயிற்று. இப்படித்தான் என்.எஸ்.கே. அவ்வப்போது தன் சொந்த சரக்கை எடுத்துவிடுவார். அது மக்களிடையே பலத்த வரவேற்பை பெறும்.

தேசபக்தி நாடகத்தில் என்.எஸ்.கேவுக்கு பல வேடங்கள். டி.கே.சண்முகத்துக்கு புரேசன் வேடம். பொதுக்கூட்ட மேடையில் நிகழ்த்தும் சொற்பொழிவை குறிப்பு எடுக்கும் சிஐடியாக என்.எஸ்.கே. நடிப்பார்.

புரேசன் பேசும்போது, ‘’ இதோ எங்கள் சொற்பொழிவை குறிப்பு எடுக்கிறாரே, இவரும் நம் நாட்டவர்தான். நம் சகோதரர்களில் ஒருவர்தான். ஆனால், இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டில் வளர்ந்து இந்த நாட்டு உப்பையே தின்று கொண்டிருக்கும் இந்த மனிதர் தம் சொந்த சகோதர்களையே அன்னிய நாட்டவர்க்கு காட்டுக்கொடுக்கும் துரோகச்செயலை செய்துகொண்டிருக்கிறார். பாவம் என்ன செய்வது? வயிற்றுப்பிழைப்பு!’’ என்று குறிப்பிடுவார். உடனே கை,கால்கள் பதற்றத்தில் உதறுவது போல் நடிப்பார் என்.எஸ்.கே.

இன்னொரு காட்சியில் என்.எஸ்.கேவுக்கு ‘மிதவாதி’ வேடம். மிதவாதி என்.எஸ்.கேவுக்கும் தீவிரவாதி டி.கே.சண்முகத்திற்கும் வாக்குவாதம் நடைபெறுவதாக ஒரு காட்சி. வாக்குவாதத்தின் இறுதியில் தீவிரவாதி சண்முகம், ‘’தாய் நாட்டை அன்னியருக்கு காட்டிக்கொடுப்பவர்கள்’’ என்று என்.எஸ்.கேவை பார்த்து ஆவேசமாக கூறுவார். முகபாவங்களிலேயே இந்த கேள்விக்கு பதில் தருவார் என்.எஸ்.கே.

நாடகத்தின் கடைசிக்காட்சியில் என்.எஸ்.கே. தலைமையில் தொண்டர் படை ஒன்று வரும். தளபதி என்.எஸ்.கே. பெரிய ராட்டையை தூக்கியபடி மேடைக்கு வருவார். மேடைக்கு வரும்போது ராட்டையைக்காட்டி, ‘’இது கொடுங்கோலர்களை அழிக்கும் ஆயுதம்’’ என்று தன் சொந்த சரக்கை எடுத்துவிட்டார். அப்போதும் எழுந்த கரவொலி அடங்க வெகு நேரமாயிற்று.

மதுரை முகாமை முடித்துக்கொண்டு திருநெல்வேலி வந்தனர் நாடகக்குழுவினர். அங்கேயும் தேசபக்தி நாடகம் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் போலீசார் வந்து சில கட்டளைகளை வைத்தனர். அதன்படி நடந்துகொண்டால்தான் நாடகம் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க முடியும் என்று எச்சரித்தனர். வேறு வழியின்றி, சிஐடி சொற்பொழிவை குறிப்பெடுக்ககூடாது, மிதவாதி தீவிரவாதி வாக்குவாதம் இருக்கக்கூடாது, தொண்டர்படைத்தளபதி கை ராட்டையோடு வரும் காட்சி இருக்கக்கூடாது என்ற போலீசாரின் கட்டளைகளின்படி, அக்காட்சிகளை நீக்கி நடித்தனர். ஆனால், மறுவாரம் அதே காட்சிகளை இணைத்து நடித்தனர். இதை மாறுவேடத்தில் இருந்த போலீசார் கவனித்துவிட்டனர். அதனால், இனி தேசபக்தி நாடகம் நடைபெறாது. அதற்கு அனுமதி கிடையாது என்று உறுதியாய் கூறிவிட்டனர்.


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.(29.11.1908)

- கதிரவன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT