ADVERTISEMENT

இரண்டு, ஐநூறு, ஒரு லட்சம்... எத்தனை பேரை கைது செய்வீர்கள்? - ஈபிஎஸ்க்கு ஜோதிமணி கேள்வி

12:48 PM Jun 21, 2018 | rajavel


சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகளோ அதனை உடனடியாக நிறைவேற்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. விவசாயிகள் எதிர்க்கும்போது அவசர அவசரமாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவது ஏன் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:-

ADVERTISEMENT

முதலில் இந்தத் திட்டத்திற்கான அடிப்படை தேவை என்ன? யாருக்கு லாபம்? சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் அதிவிரைவாக சென்று என்ன சாதிக்கப்போகிறார்கள்? நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படவே இல்லை. எண்பது சதவீத விவசாயிகள் ஆதரவு இருந்தால்தான் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த 8 வழிச் சாலை திட்டத்திற்கு முழுக்க முழுக்க அனைத்து விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவரை கைது செய்வீர்கள், இரண்டு பேரை கைது செய்வீர்கள், 500 பேரை கைது செய்வீர்கள், ஒரு லட்சம் பேர் திரண்டு போராடினால் ஒரு லட்சம் பேரையும் கைது செய்வீர்களா? மக்கள் நல அரசு என்கிறார் முதல் அமைச்சர். மக்களிடம் நேரடியாக போய் பேசினாரா இந்த முதல் அமைச்சர். இந்த திட்டத்தால் என்னென்ன பயன் என்று மக்களிடம் நேரடியாக சென்று பட்டிலிட்டு காட்ட தயாரா. துப்பாக்கிச் சூடு நடந்த தூத்துக்குடிக்கே போகாதவர் இந்த முதல் அமைச்சர்.

மக்களுக்காக போராடியவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும்போது அதற்கு எதிராக இருப்பவர்கள்தான் சமூக விரோதிகள். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிறுவ கடந்த 4 வருடமாக யோசித்தது மத்திய அரசு. 8 வழிச்சாலைக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்க்கும்போது உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பது ஏன்?.

உத்திரப்பிரசேத்தில் இதேபோன்று நிலங்களை கையகப்படுத்தும்போது ராகுல்காந்தி விவசாயிகளுடன், பொதுமக்களுடன் சென்று போராடினார். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக காங்கிரஸ் கட்சி அவர்களுடன் களத்தில் இறங்கி போராடும்.

பாஜகவினர் சொல்கிறார்கள் தேசத்திற்காக தனிமனிர்கள் தியாகத்தை செய்ய வேண்டும் என்று. இந்த தேசப்பற்றாளர்களை ஒன்று கேட்கிறேன். இந்த தியாகத்தை எப்போதும் விவசாயிகளே செய்ய வேண்டுமா? ஒரு மாறுதலுக்கு நீங்களே செய்து பாருங்களேன். உங்கள் வீட்டை, உங்கள் நிலத்தை ஒரு பள்ளிக்கூடத்திற்கோ, மருத்துவமனைக்கோ எழுதி வையுங்களேன்.

பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாறுதல் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. இதுதொடர்பாக மூன்று முறை அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. ராகுல் காந்தி விவசாயிகளைத் திரட்டிப் போராடியதோடு காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்கட்சியினரையும் ஓரணியில் திரட்டி இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுத்தது. அப்போதே அதிமுக அரசு இம்மக்கள் விரோத சட்டத்தை ஆதரித்தது.

தற்போது காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பழைய சட்டமே அமலில் இருக்கிறது. இச்சட்டம் விவசாயிகள் நிலம் விவசாயிகளுக்கே சொந்தம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. ஒரு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் தொடர்பாக சமூகத்தணிக்கை செய்யவேண்டும். அதை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். எண்பது சதவீத விவசாயிகளின் சம்மதத்தை கட்டாயம் பெறவேண்டும்.


இதையெல்லாம செய்யாமல் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு காவல்துறையின் உதவியோடு மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. மக்கள் களத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் போராட முடியும் அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT