ADVERTISEMENT

ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு!

05:12 PM Jan 28, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள என்ன செய்வார்கள் தெரியுமா?

தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை சவட்டி எடுப்பார்கள். தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக தண்ணியில்லாத காடு, வேலையில்லாத இலாகா என்பவற்றை உருவாக்கி வைத்து ஊழியர்களை பழிதீர்ப்பார்கள்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கவுரவமான சம்பளம் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதில் கலைஞருக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது. ஜமீன்தார்கள் மற்றும் பணக்காரர்களின் வேலைக்காரர்களாக இருந்த அரசு ஊழியர்களை மக்கள் ஊழியர்களாக மாற்றியவர் கலைஞர்தான்.

ஆனால், அரசு ஊழியர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குவேன் என்று அவர்களை அடிமைகளைப் போல மாற்றியவர் ஜெயலலிதா. அவருடைய ஆட்சியில்தான் போராடிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நடு ராத்திரியில் கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையிலேயே பலர் இறந்த கொடுமையெல்லாம் நடந்தது. அரசாங்கத்தின் வருமானம் இவர்களுக்கு சம்பளம் கொடுத்தே காலியாவதைப் போல பிரச்சாரம் செய்தார்.

அந்தப் போராட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பலம் என்னவென்று ஜெயலலிதாவுக்கு புரிந்தது. ஆம், அடுத்துவந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார்.

அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகளை ஏற்று அவர்களை கவுரவப்படுத்தினார்.

இப்போது, மீண்டும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தையும் பல கட்ட முயற்சிகள் தோற்றதால்தான் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களுடைய போராட்டத்தை சம்பள உயர்வு போராட்டமாக திசைதிருப்ப ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை அதுவல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

தமிழக அரசாங்கத்தை இனிமேல் தனியார் நிறுவனங்களைப் போல காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து நடத்த ஒரு மாபெரும் சதித்திட்டத்தை அரசாணை 56 மூலமாக அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இந்த அரசாணை 56 என்ன சொல்கிறது தெரியுமா? தற்போது மூன்றரை லட்சம் அரசு ஊழியர் காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களையும், இனிமேல் காலியாகிற பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை சேர்த்து நிரப்ப வழி அமைக்கிறது.

இது, அடுத்த தலைமுறையினரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்பதால் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

அதுபோல, அரசாணை 100 மற்றும் 101 ஆகியவைகளும் ஆபத்தான அரசாணைகள்தான். ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்க இந்த அரசாணைகள் வழி செய்கின்றன. இப்படி இணைப்பதன் மூலம், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது என்பதாலும், பள்ளிகளில் ஆட்குறைப்பு செய்ய நேரும் என்பதாலும் இந்த ஆணைகளையும் ரத்து செய்யும்படி போராடுகிறார்கள்.

புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்ற முடிவு நல்லதுதான். ஆனால், அந்த வகுப்புகளை எடுப்பதற்காக மாண்டிசோரி பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுத்து, இடைநிலை ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கும் அரசு முடிவையும் எதிர்த்து போராடுகிறார்கள்.

சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. தங்களுக்கு சேரவேண்டிய 21 மாத சம்பள நிலுவைத் தொகையைத்தான் கேட்கிறார்கள். அது என்ன நிலுவைத் தொகை?

7 ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க பரிந்துரை செய்தது. அதன்படி, 1.1.2016 முதல் புதிய சம்பள விகிதம் ஏற்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த சம்பள விகிதத்தை 1.10.2017 வரை, 21 மாதங்களாக கொடுக்காமல் பிடித்தம் செய்து வைத்திருக்கிறது. எங்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம்.

கலைஞர் ஆட்சியில் இதுபோன்ற நிலுவை இருந்தபோது, அந்த தொகையை எங்களுடைய இபிஎஃப்பில் சேர்த்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற 12 மாத நிலுவைத் தொகை சேர்ந்தபோது அதை கொடுக்காமலே ஏமாற்றிவிட்டார்.

இப்போதும் 21 மாதங்களாக எந்த முடிவும் சொல்லாமல் எங்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை இழுத்தடிக்கிறது அரசு என்கிறார்கள். அது இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட சொல்ல மறுக்கிறது அரசு.

இதேபோல்தான் 1.7.2003-லிருந்து 5 லட்சத்து 4 ஆயிரம் ஊழியர்களிடம் பென்சனுக்காக பிடித்தம் செய்த 10 சதவீத சம்பளம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு பென்சன் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் ஜெயலலிதா. பழைய பென்சன் திட்டத்துக்கு பதிலாக புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.

அதாவது புதிய பென்சன் திட்டம் என்பது ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன் அரசு தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து இபிஎஃப்பில் செலுத்த வேண்டும். இப்படிப்போடப்படும் தொகையில் ஒரு பகுதி பணிக்கொடையாகவும், மீதமுள்ள தொகை பென்சனாகவும் கிடைக்கும்.

ஆனால், அந்தத் தொகையை கட்ட அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். இபிஎஃபில் கட்ட வேண்டும் என்றால் 28 பிளஸ் 28 – 56 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும் வேண்டும். அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அரசுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்றுதான் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும்படி கேட்கிறோம். பழைய பென்சன் திட்டத்திற்கு அரசு சார்பில் பணம் போட வேண்டியதில்லை. வட்டியும் 7 ஆயிரம் கோடி இருந்தால் போதும். அதாவது, மொத்தத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதும். இதன்மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம்தான்.

ஆனால், இதைக்கூட செய்ய முடியாது என்று அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சொல்லப்படும் விளக்கம்.

இனியாவது இத்தகைய போராட்டங்களில் உள்ள நியாயங்களை உணரவேண்டும். வெறுமனே போராட்ட உணர்வுகளை எதிர்த்தால், நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டு, கார்பரேட் கம்பெனிகளைப் போல அரசுகள் மாறவும், கார்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைப் போல பணிப்பாதுகாப்பு இல்லாத அடிமைகளாக எதிர்கால சந்ததிகள் மாறவும் வழி அமைத்துவிடும் என்பதை உணர்ந்தால் சரி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT