ADVERTISEMENT

மகாசிவராத்திரிக்கு ஜக்கியின் மகா திட்டம்! ஓ.கே சொன்னாரா விஜய்?

01:16 PM Jan 17, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடம் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு நடிகர் விஜய்யை அழைத்து பங்கேற்க வைத்தால் ஈஷா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்கள். கூட்டத்திற்கு கூட்டமும் சேரும் என்ற கணக்கில் விஜய்யை அழைக்க ஜக்கி முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பெற்றோர் ஈஷாவின் பக்தர்கள். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், “ஜக்கியால்தான் நான் மனத்தெளிவு பெற்றேன்” எனப் பேட்டியும் கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, “நடிகர் விஜய்யை, தான் நடத்தும் விழாவிற்கு அழைத்து வந்தால் கூட்டம் தானாகச் சேரும்...” என முடிவு செய்து விஜய்யின் பெற்றோரிடம் இதுபற்றி கூற... கோவை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்படும் விழாவிற்கு போய்வரக் கூறியுள்ளனர்.

பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேறினார் விஜய். நடிகரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்துத் தள்ள, அங்கிருந்த நாற்காலிகள் உடைந்தன. ஜக்கியும், “உங்க ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. காட்டுமிராண்டித்தனமாக நடக்கக்கூடாது” என நடிகர் விஜய்யிடம் பொங்கிய நிலையில்... கடுங்கோபத்திலிருந்த விஜய், தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து “ஏம்பா.! உங்களை இவர் அமைதியாக இருக்க சொல்றார்” என ஜக்கியைக் கைக்காட்டிவிட்டு அமர்ந்திருக்கிறார். “தலைவனே ஒன்னும் சொல்லல. சாமியார் சொன்னால் கேட்கணுமா?” என நாற்காலிகளை துவம்சம் செய்து ரகளையில் ஈடுபட்டனர் என்றார் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி ஒருவர்.

ஈஷா யோகா மையத்தில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய ஒருவரோ, “அன்றைய தினம் கூட்டம் முடிந்த பின் வாடகைக்கு நாற்காலி கொடுத்தவர், “இத்தனை சேர்கள் உடைஞ்சிருக்கு. அதற்கும் பணம் வேண்டும்” என வாதாடிய நிலையில்..., “நான் வாடகைக்குத்தான் எடுத்தேன். உடைச்சது விஜய் ரசிகர்கள். அவங்ககிட்ட போய் கேட்டுக்க” என்ற ஜக்கியிடம், விடாது, “நீங்கதான் தரணும்” என நாற்காலி வாடகைக்கு விட்டவர் போராட..., “நீங்க விஜய்யிடம் உடைஞ்ச நாற்காலிக்கு பணம் கேளுங்க... தரலைன்னா நான் தர்றேன்” என ஜக்கி சமாதானம் பேசியனுப்ப, அவரும் சென்னையில் விஜய்யை சந்தித்து நாற்காலிக்கு பணம் கேட்க, கோபமடைந்து சத்தம்போட்டு அனுப்பியிருக்கிறார்” என்றார் அவர்.

ஈஷாவில் யோகா பயில வந்த சுபஸ்ரீயின் மர்ம மரணம் ஜக்கியை பெருமளவில் டேமஜ் செய்திருக்கும் நிலையில், ‘ஈஷாவை சீல் வைத்து அரசுடைமையாக்க வேண்டும். சுபஸ்ரீ மரணத்தில் நியாயமான விசாரணை வேண்டும்’ என சி.பி.ஐ., சி.பி.எம்., த.பெ.தி.க., அம்பேத்கரிய பெரியாரிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், மகாசிவராத்திரியான பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துள்ள ஜக்கியின் ஈஷா நிறுவனம், நடிகர் விஜய்யை சிவராத்திரிக்கு அழைத்து வந்தால் மக்களின் கவனம் வேறு பக்கம் திரும்புமென அவரை அணுகிய நிலையில், “பழசு ஞாபகம் இருக்கு...! பட்ட அடி போதும்பா” எனக் கையெடுத்துக் கும்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT