ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதிகளைக் குறிவைக்கும் வேதாந்தா நிறுவனம்!!! அடுத்தக்குறி இதுதான்...

04:00 PM Sep 07, 2018 | santhoshkumar

தூத்துக்குடி என்ற ஊரை முத்து நகரம் என்றே பலரும் அறிந்திருந்தனர். உலகளவில் முத்துக்குளிப்பு அதிகமாக நடந்த பகுதி தூத்துக்குடி என்பதால்தான் இந்தப் பெயர் கிடைத்தது. சங்ககாலம் தொட்டே முத்து குளித்துவந்த தூத்துக்குடி பகுதிகளில் தற்போது சங்குக்குளிப்பதுகூட பெரியவிஷயமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம், தூத்துக்குடி கடலோரத்தை ஆக்கிரமித்திருக்கும் கனிம, ரசாயன மற்றும் அணுமின் ஆலையங்கள்தான் என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதுபோன்ற ஆலைகளால் அங்கிருக்கும் வளங்கள் மட்டும்தான் அழிந்ததா? இல்லை, இல்லை தொன்றுதொட்டு கடலை மட்டுமே நம்பியிருக்கும் கடலோடிகளின் உடல்வளமும் இதனால் அழிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் புற்றுநோய், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு என்று தூத்துக்குடியில் இருக்கின்ற ஆலைகளை சுற்றி வாழும் மக்களின் நிலை இதுதான்.

ADVERTISEMENT


தூத்துக்குடியில் இருக்கின்ற ஆலைகளில், தற்போது உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருப்பது வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையை தெரியாத தமிழர்கள் இவ்வுலகில் இருக்கவே மாட்டார்கள் என்று கூறுவதற்கு காரணம். இந்த ஆலையை மூடுவதற்காக தூத்துக்குடி மக்கள், இழந்த உயிர்கள் பல. இந்த ஆலையின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டு பல வருடமாக பலியாகியுள்ளனர். மேலும் இதை மூடுவதற்கு, தமிழக அரசாங்கம் 13 பேர் உயிரை வேட்டையாடியுள்ளது. இதன் பின்னரே இந்த ஆலை சீல் வைக்கப்பட்டதென்றால் வரலாறு கண்டிப்பாக சிரிக்கத்தான் போகிறது. இத்தனை செய்தும் இந்த வேதாந்தா மீண்டும் இந்த ஆலையை திறக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT


இந்நிலையில் வேதாந்தா தூத்துக்குடியை அழித்ததை போலவே தமிழக டெல்டா பகுதியையும் நோக்கி வந்துவிட்டது. தமிழக கடலோர பகுதிகளில் ஏற்கனவே பல வகையான ஆலைகள் காலூன்றி அழித்துவருகின்ற நிலையில், தமிழக டெல்டா பகுதியிலும் காலூன்ற பல ஆலைகள் ஆயுத்தமாகிறது. முதலில் மீத்தேன் திட்டம் என்ற ஒன்று, டெல்டா பகுதிகளில் வருவதாக இருந்தது. மக்களின் விழிப்புணர்வில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இத்திட்டம் கைவிடப்பட்டவுடன் வேறொரு பெயரில் இதேபோன்ற ஒரு திட்டம் டெல்டாவுக்கு வந்தது. அதுதான் ஹைட்ரோகார்பன் திட்டம். பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் வளங்களை உறிஞ்சும் திட்டம். இத்திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆற்றுப்படுகைக்கு அருகில் செயல்படுத்தப்போவதாக இருக்கிறது. தமிழகத்தில் புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்த போவதாக இருந்தது. எண்ணெய் எடுத்து அதை சுத்திகரிப்பு செய்யும் தொழிலில் மத்திய அரசின் கீழ் இருக்கும் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அளவு லாபங்கள் இதுவரை கிடைக்காததால், இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தனியாருக்கு ஏலத்தின் அடிப்படையில் தருவதாக மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட பகுதியை ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனம், அந்த பகுதியில் கிடைக்கும் எந்த ஒரு எரிபொருளையும் எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம். லாபத்தில் மத்திய அரசாங்கமும், அந்நிறுவனமும் பங்குபோட்டுக்கொள்ளும் என்று அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜென் என்ற நிறுவனம் ஒப்புதல் போட்டது. பின்னர், பல்வேறு போராட்டங்களுக்கு பின் இந்த ஒப்புதல் கைவிடப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப்படுகையைவிட காவேரி ஆற்றுப்படுகையில்தான் பெட்ரோலியம் அதிகமாக இருப்பதால். தமிழக பகுதிக்குத்தான் தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டனர் என்று அப்போது செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


ஜென் நிறுவனம் இந்த ஒப்புதலை கைவிட்டுவிட்டது டெல்டா மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால், தற்போது டெல்டா பகுதியில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் போட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த போவதாகவும், அதில் 41 இடங்களில் எரிபொருட்கள் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் மூன்று இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் செயல்பட போவதாகவும் அதில் இரண்டு பகுதிகளில் வேதாந்தாவும், ஒரு இடத்தில் ஒ.என்.ஜி.சி.யும் செயல்படுத்த இருக்கிறது. வேதாந்தா நாகப்பட்டினத்தில் உள்ள இரண்டு எண்ணெய் வளங்கள் உள்ள பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது என்றும், ஓ.என்.ஜி.சி கடலூர் மாவட்டத்தையும் தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த பகுதிகள் என்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை. இந்த ஏலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பிற வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால்,"ஓபன் அக்ரியேஜ் லைசன்சிங் பாலிசியில் முதல் கட்டத்திலேயே எங்களுடைய நிறுவனத்திற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. எங்கள் மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. எங்களுக்கு இந்த சிறந்த வாய்ப்பை தந்ததற்காக கடினமாக உழைப்போம். நம்முடைய நாடு எரிசக்தி குறைபாடுடையது மற்றும் ஓபன் அக்ரியேஜ் லைசன்சிங் பாலிசி போன்ற திட்டத்தால் தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் 80% எரிசக்தி, வருகின்ற 2022 ஆண்டுக்குள் 67% ஆக குறையும் என்பதே நம்முடைய பிரதமரின் பார்வை. மேலும் வளர்ச்சிக்காக இந்தியாவில் முதலீடு செய்வதால், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50% பங்களிப்பு செய்ய முடியும். எங்கள் மதிப்புகள் மற்றும் பண்புகளை வைத்து, நாம் தொடர்ந்து நிலைத்திருப்பதில் கவனம் செலுத்துவோம், மக்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவோம் மற்றும் சமூகத்தில் இருக்கும் வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் இருக்கின்ற கடலோர பரப்புகளை ஏற்கனவே பல ஆலைகள் சூழ்ந்துவிட்டன, இப்போது டெல்டா பகுதிகளுக்கும் வந்துவிட்டது. இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டம் இது என்று சொல்லிதான் ஒவ்வொரு திட்டங்களையும் தொடங்குகிறார்கள், மேலும் அங்கிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துவிடும் என்கிறார்கள். ஆனால், இந்த ஆலைகளால், இந்த வளர்ச்சித்தர கூடிய திட்டங்களால் நம்மை சுமக்கும் இந்த நிலத்திற்கும், நமக்கு உயிர்தர கூடிய இயற்கைக்கும், இவ்வளவு ஏன் அந்த வளர்ச்சியை அனுபவிக்கலாம் என்று அசைபோடும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் எவ்வளவு கெடுதல்கள் வரப்போகின்றன என்பதை கடைசிவரை தெரிவிக்க மறுக்கின்றன, இந்த அரசுகளும், ஆலைகளும்.....

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT