ADVERTISEMENT

அடேங்கப்பா... தமிழக மக்களுக்காக இத்தனை பேர் கட்சி ஆரம்பிச்சாங்களா?  தமிழக கட்சிகள், கதைகள்... 

09:31 AM Feb 15, 2018 | vasanthbalakrishnan



ரஜினி ஆன்மீக அரசியலில் இறங்கிட்டாரு... கமல் 'நாளை நமதே'னு கெளம்பிட்டாரு. விஷால் கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொல்றாரு. விஜய்க்காக அவரு அப்பா அரசியல் ஆழம் பாத்துகிட்டே இருக்காரு. யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்கிற மாதிரி, ஹைவேஸ்ல கும்பகோணம் டிகிரி காபி கடை ஆரம்பிக்கிற மாதிரி ஆள் ஆளுக்கு தமிழ்நாட்டுல கட்சி ஆரம்பிக்குறாங்க. தீபா ஒரு கட்சி, அவருடைய கணவர் மாதவன் ஒரு கட்சி, அவருடைய ட்ரைவர் ஒரு கட்சினு தமிழ்நாட்டில், எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது புது கட்சிகள், புதிய அரசியல்வாதிகள் என்று புதிய ரத்தம் பாய்கிறது. விஜய் மாதிரியே இருந்த அவர் தம்பி விக்ராந்த், சத்யராஜ் மாதிரியே இருந்த அவரு அண்ணன் மகன் சத்யன் எல்லாரும் ஹீரோவா நடிக்க வந்த மாதிரி, ஜெயலலிதா மாதிரியே இருந்த அவருடைய அண்ணன் பொண்ணு தீபா அரசியலுக்கு வந்தாங்க. திருப்பதிக்கு போறவங்க தி.நகர்ல டிக்கெட் வாங்குற மாதிரி கட்சி ஆரம்பிக்க போறவங்க எல்லாம் ஜெயலலிதா சமாதில தியானம் பண்ணுறாங்க. இதெல்லாம் தமிழ்நாட்டுல இப்போதான் நடக்குதானு பாத்தா, இல்ல. காலம் காலமா நம்ம கலாச்சாரத்துல கலந்து இருக்கு.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் "திராவிடம்"ன்ற வார்த்தைக்கு அடுத்து அதிக கட்சிகளின் பெயர்கள்ல இருந்த வார்த்தை எம்.ஜி.ஆர் தான். எம்.ஜி.ஆர் இறந்ததுக்கு அப்புறம், தன் கட்சித் தலைவரும் நண்பருமான எம்.ஜி.ஆர் பெயரையும் தன் பெயரையும் ஒன்றாகப் போட்டு, அதோடு தன் பட்டப்பெயரான லட்சிய நடிகரைக் கொஞ்சம் கலந்து, அதுக்கு மேல அவர் முதலில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை கொஞ்சமா தூவி, 'எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்'னு கட்சி ஆரம்பிச்சார் எஸ்.எஸ்.ஆர். சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகவெல்லாம் இருந்திருந்தாலும் கட்சித் தலைவரா வெற்றிகரமாகத் தொடர முடியாமல் கட்சியை கலைச்சுட்டாரு. அடுத்த எம்.ஜி.ஆர் கட்சி, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர்னு இருந்துட்டு அ.தி.மு.க ல இருந்து பிரிஞ்சு திருநாவுக்கரசர் ஆரம்பிச்ச 'எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க'. கொஞ்ச நாள் 'தள்ளு தள்ளு தள்ளு'னு தள்ளிப் பாத்துட்டு முடியாம, வழியில் பா.ஜ.கவில் கொஞ்ச நாள் இருந்துட்டு இப்போ காங்கிரஸ்ல மாநில தலைவர் ப்ரொமோஷன் வாங்கி செட்டில் ஆகிட்டாரு.

ADVERTISEMENT

இடையில எம்.ஜி.ஆர் க்கு நெருக்கமானவராகவும், அமைச்சராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன் 'எம்.ஜி.ஆர் கழகம்'னு ஒன்னு ஆரம்பிச்சு செயலாற்றினார். இப்படி ஆள் ஆளுக்கு எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துறாங்களேனு நினைச்ச எம்.ஜி.ஆரின் கலை வாரிசுன்னு எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ், "வாரிசுன்னா சொத்துலயே உரிமை கேட்கலாம், பெயர்ல இல்லாத உரிமையா"னு 'எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம்'னு ஒரு கட்சி ஆரம்பிச்சார். ஆனா மக்களோ நீங்க கலைக்கு மட்டும் தான் வாரிசு, இது அரசியல், வேற டிபார்ட்மென்ட்னு சொல்லி கடைய மூட வச்சுட்டாங்க...மன்னிக்கவும், கட்சிய மூட வச்சுட்டாங்க.

இப்படி, எம்.ஜி.யாரோ அல்லது அவரது பெயரோ எப்பவுமே அரசியல்ல இருந்துகிட்டே இருந்தது. அவரோட சினிமா போட்டியாளரான நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அரசியல்லயும் போட்டி போட முயற்சி பண்ணினார். 1988 ல 'தமிழக முன்னேற்ற முன்னணி'னு ஒரு கட்சியை ஆரம்பித்தார். சினிமாவில் அவரது நடிப்பைப் பார்த்து மக்கள் எல்லாரும் கண்ணீர் விட்டாங்க. அரசியலிலோ மக்களின் நடிப்பைப் பார்த்து அவரு கண்ணீர் விட்டாரு. ஆமா, வோட்டுப் போடப்போற மாதிரியே கூட்டம் கூட்டமா கூடிட்டு கடைசியில ஒரு தொகுதியில் கூட அவர் கட்சியை ஜெயிக்க வைக்கல, ஏன், அவரே நின்ன தொகுதியிலயும் தோற்கடிச்சாங்க. இதுனால 'கைவீசம்மா கைவீசு ...கட்சியை மூடலாம் கைவீசு"னு 'ஜனதா தல்'ல சேர்ந்து பின்னாடி அரசியலே வேணாம்னு ஒதுங்கிட்டாரு நம்ம நடிகர் திலகம்.

காங்கிரஸ்ல இருந்து பிரிஞ்சு தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பிச்சாரு மக்கள் தலைவர் மூப்பனார். அவரு பேட்டியில பேசுறது என்னனு புரியாம மக்கள் யோசிச்சுகிட்டு இருக்கும்போதே 'நான் பேசுறத கேளுங்க'னு அவர்கிட்ட இருந்து பிரிஞ்சு 'காங்கிரஸ் ஜனநாயக பேரவை'னு ஆரம்பிச்சார் ப.சிதம்பரம் . பின்னாடி ரெண்டு கட்சிகளுமே திரும்ப காங்கிரஸ்ல சேர்ந்துட்டாங்க. அதுக்கப்புறம் திரும்ப காங்கிரஸ்ல இருந்து மூப்பனாரின் மகனான ஜி.கே. வாசன் பிரிஞ்சு திரும்பவும் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிச்சுட்டாரு. இது போக காங்கிரஸ் தலைவரா இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி பிரிஞ்சு வந்து 'தமிழக ராஜீவ் காங்கிரஸ்'னு ஒரு கட்சி ஆரம்பிச்சாரு. அவர் மறைவோட சேர்ந்து கட்சியும் மறைஞ்சுருச்சு. இப்பவே கண்ண கட்டுதுல்ல ??? இன்னும் நெறய இருக்கு.

வன்னியர் சங்கமா இருந்தத 'பாட்டாளி மக்கள் கட்சியா ' மாத்துனாரு டாக்டர் ராமதாஸ். தானோ தன் குடும்பமோ எந்தப் பதவிக்கும் வரமாட்டோம்னு சத்தியம் பண்ணி தலைவர்னு இல்லாம நிறுவனராவே இருக்காரு. ஆனா சத்தியம் சக்கரைப்பொங்கல்னு சொல்லிட்டு அவரது மகன் அன்புமணியை அமைச்சர் ஆக்குனாரு. பாட்டாளி மக்கள் கட்சியில இருந்த வேல்முருகன் பிரிஞ்சு வந்து "தமிழக வாழ்வுரிமை கட்சி"னு ஆரம்பிச்சுட்டாரு. திராவிட முன்னேற்ற கழகத்துல இருந்த டி.ஆர் , சந்தா கட்டலைனு சொல்லி நோட்டிஸ் வர, "எதுக்கு கட்டணும் சந்தா, நான் காட்டுறேண்டா பந்தா, புது கட்சி இந்தா "னு சொல்லி 'லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்' ஆரம்பிச்சுட்டாரு. ஏற்கனவே இவரு இன்னொரு கட்சியும் வச்சிருந்தாரு.

நேதாஜியோட 'ஃபார்வர்ட் கட்சியில கூப்பிட்டு தலைவர் பதவி கொடுத்தனால சேர்ந்த நடிகர் கார்த்திக், அசந்து தூங்குன நேரமா பாத்து தலைவரையே கட்சில இருந்து தூக்கிட்டாங்க. மத்த கட்சியில சேர்ந்தா நம்ம டைமிங் செட் ஆகாதுன்னு நினைச்ச கார்த்திக் பெயர்ல மட்டுமாவது ஆளுவோமேன்னு 'நாடாளும் மக்கள் கட்சி' ஆரம்பிச்சு UK ஷிஃப்ட்ல வேலை செஞ்சுக்கிட்ருக்காரு. தி.மு.க ல இருந்து அ.தி.மு.கவுக்கு போய் அங்க சமத்துவம் இல்லைனு சொல்லி 'சமத்துவ மக்கள் கட்சி' ஆரம்பிச்சுருக்காரு சரத்குமார். IJKனு fancy name ல ஒரு கட்சி, மூவேந்தருக்கென்று மூணனு நாலு கட்சி, கொங்கு நாட்டுக்கு அஞ்சு கட்சி, விடுதலை சிறுத்தைகள்னு ஒரு கட்சி, முக்குலத்தோர் புலிப்படைன்னு ஒரு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அதுல இருந்து பிரிஞ்சு போன ஒரு கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியாரின் புரட்சி பாரதம் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் கட்சிகளுக்கு தமிழகத்தில்கிளை அலுவலகங்களாக சில கட்சிகள், தேசியம் திராவிடம் ரெண்டையும் கலந்து பெயரில் மட்டும் வைத்திருக்கும் தே.மு.தி.க. இத்தனை கட்சிகள் இருக்கே, இத்தனைக்கும் தொண்டர்கள் இருக்காங்களா??? எல்லா கட்சிகளும் ஒரே நாள்ல மாநாடு நடத்துனா தான் உண்மையா எத்தனை தொண்டர்கள் இருக்காங்க னு தெரியும். இதேல்லாம் போக காலம் காலமா இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதை எதிர்த்துத் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம், அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க , ம.தி.மு.க , கம்யூனிஸ்ட் கட்சிகள்னு இத்தனை கட்சிகள் இருக்கு தமிழ்நாட்டுல. இன்னும் பல கட்சிகள் விடுபட்டிருக்கின்றன. இத்தனை கட்சிகள் இருந்தும் மக்கள் இன்னும் நீரிலிருந்து நிலம் வரை தங்கள் வாழ்வாதாரத்துக்குப் போராட வேண்டியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் அப்படி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT