Skip to main content

ரஜினியால் பலன் இல்லை என நினைக்கும் பாஜக... லாக்டவுனால் அரசியலில் பிரேக்டவுனா? வெளிவந்த களநிலவரம்! 

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

rajini



மார்ச் 12-ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. ’நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். ஆட்சித் தலைமைக்கு ஒரு நியாயவானை நியமிப்பேன்'' என அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புதுவித அரசியல் பாணியை அறிவித்தார். இது அவரது மன்றத்தினரையே கொஞ்சம் அதிர வைத்தாலும், தலைவர் சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்’ என தங்களை சமாதானப்படுத்திக்கொண்டனர். ரஜினியின் நியூ பாலிடிக்ஸ் பாலிஸியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகமெங்கும் போஸ்டர்களை ஒட்டித் தள்ளினார்கள். மறுபுறமோ ‘ரஜினி முதல்வராகியே தீருவார், தாழ்ந்து கிடக்கும் தமிழகம் தலை நிமிரும்’ என்றெல்லாம் ஆசைக் குரல் எழும்பிக்கொண்டிருந்தன. ராஜகுருக்கள்களும் அரசியல் ஆலோசகர்களும் அட்செட்டானார்கள். மீடியாக்களில், ‘ஏப்ரலில் ரஜினி கட்சி தொடங்குகிறார். ஆகஸ்ட்டில் மதுரையில் மாநாடு நடத்துகிறார். டிசம்பரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார். ஜனவரியில் அறிவிக்கிறார். 2021 மே மாதம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றெல்லாம் நியூஸ்களை தெறிக்கவிட்டார்கள்.


இப்படியெல்லாம் நிலைமை போய்க்கொண்டிருந்தபோதுதான் கரோனா லாக்டவுன் வந்து இந்திய மக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முடக்கியது. அகில இந்திய அரசியலைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. என்பதுதான் எதார்த்தம். பெரும்பான்மையான மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.

 

 

dmk



தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.விற்கு எதிராக அ.தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிராக தி.மு.க. என்பதுதான் முதல்நிலை அரசியல். மற்ற கட்சிகளின் அரசியலெல்லாம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்பதுதான் உண்மை. இப்போது கரோனா காலத்தில்கூட ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையேதான் வார்த்தைப் போர்களும் அறிக்கைப் போர்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் ஆளுங்கட்சி என்ற முறையில் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது அ.தி.மு.க. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க.வோ ஒன்றிணைவோம் வா எனும் பெயரில் உணவு, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை மாவட்டவாரியாக வீடுதேடிச் சென்று வழங்கியதுடன், தங்களின் ஹெல்ப்லைனுக்கு வந்த கோரிக்கைகளில் நிறை வேற்ற முடியாதவற்றை கோரிக்கை மனுக்களாக அந்தந்த மாவட்டக் கலெக்டர்களிடம் வழங்கியுள்ளது. அதனால், கரோனா யுத்தத்திலும் அ.தி.மு.க-தி.மு.க. என்றே அரசியல் களம் வரிந்துகட்டி நிற்கிறது.

கட்சியே ஆரம்பிக்காத ரஜினியும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து இரண்டு தேர்தல் களம் கண்ட கமலும் தாங்கள் சார்ந்த திரைத் துறைக்கு உதவி செய்திருக்கிறார்களே தவிர, பொது மக்களுக்கு பெரிதாக எந்த உதவியும் நேரடியாக செய்யவில்லை. இருவரது அமைப்பைச் சேர்ந்த மா.செ.க்களும் ஒ.செ.க்களும் தங்களது சொந்தக் காசில் உதவி செய்து, மக்களிடம் ஓரளவு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப் பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினாலும் “குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

mnm



“இந்த எச்சரிக்கை அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கும். அதாவது தேர்தல்கால பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நெருக்கியடிக்கும் தெருமுனைக் கூட்டம், வேனில் பிரச்சாரம் இவற்றிலெல்லாம் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இன்னும் சொல்லப்போனால் வாக்குப்பதிவு முறைகளிலேயே மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் ‘நியூ பொலிடிக்கல் பாலிஸி’ டிரெண்ட்டிங் ஆகுமா- பிரேக் டவுன் ஆகுமா? என்பதை அறிய அண்ணா காலத்து அரசியல் வாதியும் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த எழுத்தாளர் சோலையின் நெருங்கிய நண்பருமான திண்டுக்கல் தம்பிதுரையை தொடர்புகொண்டோம். 90 வயதிலும் மிகத்தெளிவாக கணீர்க் குரலில் நம்மிடம் பேச ஆரம்பித்தார் தம்பிதுரை.


"ஏழைகள், அடித்தட்டு மக்களின் அவலத்தையும் ஏக்கத்தையும் தனது சினிமாவில் எதிரொலித்தவர் எம்.ஜி.ஆர். அவரது முக்கால்வாசி சினிமாக்கள் தாயின் பெருமை பேசும். நான் ஆணையிட்டால்... ஏழைகள் வேதனைப்படமாட்டார்கள் என சினிமாவில் வெளிப்படுத்திய நடிப்பை அரசியலிலும் வெளிப்படுத்தியதுதான் எம்.ஜி.ஆரின் மாபெரும் பலம். தனக்கு கிட்னி கொடுத்து உதவிய தனது அண்ணன் மகள் லீலா வதிக்கு பணம் கொடுத்தாரே தவிர, பதவி எதுவும் கொடுக்க வில்லை. தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, அ.தி.மு.க.வுக்குள் நுழைந்த கதை வேறு, வீழ்ந்த கதை வேறு. எம்.ஜி.ஆர். தனது சொத்துகளை ஏழைகளுக்கு எழுதிவைத்து அரசியல் நடிப்பை உறுதி செய்தார்.

ரஜினி, கமல் இருவரின் சினிமாக்கள் எல்லாமே விசில் அடிச்சு ரசிக்கும் ரகங்கள் மட்டுமே. மேற்படி இருவருமே அரசியலில் தாராளம் காட்டி தங்களது பொருளாதார இழப்புக்கு தயாரில்லாதவர்கள். இதன் அடிப்படையிலும் இத்தனை ஆண்டுகால தமிழக அரசியலை நான் கவனித்துவரும் நிலையிலும் எனது கணிப்பு ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்பதுதான். அதை மீறி கட்சி ஆரம்பித்தாலும் பலன் இருக்காது என்பது பி.ஜே.பி. மேலிடத்திற்கு நன்றாகத் தெரியும்.

கமலைப் பொறுத்தவரை 20 எம்.எல்.ஏ. சீட்டுகளை வாங்குவதற்கேற்ப அரசியல் நடத்துவார். ஆனால் அதை எந்த அணியிடம் வாங்குவார் என்பதுதான் பிரச்சினையே. இன்னொரு முக்கியமான விஷயம்… தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணபலம், படைபலத்தால் தமிழக வாக்காளர்களில் சரி பாதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதை தகர்ப்பதென்பது ரஜினிக்கும் கமலுக்கும் பெரும் சவால்'' என்கிறார் ஆணித்தரமாக.

இந்த ஊரடங்கு நேரத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவியாய் தவித்துக்கொண்டிருக்கும்போதுகூட, மத்திய பா.ஜ.க அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டைத் திறந்து சுங்க கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய வங்கிக் கொள்ளையர்களின் 68 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. இப்படி மக்கள் வயிறெரியும் செயல்களையெல்லாம் மகிழ்ச்சியுடன் செய்யும் மோடியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கிறார் கமல். ஆனால் ரஜினியோ அந்த அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. அதே நேரத்தில், எடப்பாடி அரசின் டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக கோபம் காண்பிக்கிறார். கஜானாவை நிரப்ப நல்ல வழியை பாருங்கள், இல்லையென்றால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற கனவு பலிக்காது என ட்விட்டரில் எடப்பாடியை எச்சரிக்கிறார்.

அவரது ரசிகர்களோ,“கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றவரு மீண்டும் எடப்பாடி ஆட்சின்னு ஏன் சொல்லணும்? எப்போது கட்சி ஆரம்பிப்பார்? தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?’’என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். அதேநேரத்தில், ரஜினியோ அரசியல் உயர்மட்டக் குழு அமைப்பதிலும் கட்சி தொடங்குவதற்கான சில முன்னெடுப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டார் என்கிறது ரஜினியின் நெருக்கமான நட்பு வட்டம்.
 

y



கமலின் மக்கள் நீதி மய்யத்திலோ கிருஷ்ண அய்யர் என்பவர் அரசியல் கொள்கை வகுப்பாளராகவும், கமலுக்கு ஆலோசகராகவும் உள்ளாராம். மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ம.நீ.ம.வுக்கு ஆன்லைனில் 1000 உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ளாராம். கட்சியின் மேல்மட்டப் புள்ளிகளான மகேந்திரன், கமீலா நாசர், சினேகன் ஆகியோரின் ஆதரவாளர்கள் தங்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

இதற்கெல்லாம் விளக்கம் பெற பொதுச்செயலாளர்களான ஏ.ஜி.மௌரியாவையும் உமாதேவியையும் செல்போனில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர்கள் அட்டெண்ட் பண்ணவில்லை.

ஊரடங்கு முழுமையாக தளர்ந்தபின், ரஜினி-கமல் இருவரின் அரசியல் காய்நகர்த்தல்கள் வெளிப்படையாகத் தெரியவரும். லாக்டவுன் என்பது சரியான வியூகத்திற்கு வழிவகுத்துள்ளதா? அரசியலுக்கு பிரேக்டவுன் நிலையை உருவாக்கியுள்ளதா என்பதும் புரிந்துவிடும்.


 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.