ADVERTISEMENT

ஒரு இசைக் கலைஞனின் எதிர்க்குரல்!

06:00 PM Feb 12, 2020 | santhoshb@nakk…

காலம் காலமாக இசைத்துறையிலும் நிலவிவரும் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்க்குரல் கொடுத்துவருகிறார் பிரபல பாடகரும் இசைக் கலைஞருமான டி.எம்.கிருஷ்ணா. அதனால் அவர் எழுதிய ’செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற நூலை, தங்கள் அரங்கில் வெளியிடக்கூடாது என்று, ஏற்கனவே கொடுத்த அனுமதியை மறுத்து தன் எரிச்சலைக் காட்டியிருக்கிறது கலாசேத்திரா.

ADVERTISEMENT


டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசையை உலகத்திசை எங்கும் பரப்பி வருகிற குரலிசைக் கலைஞர். கர்நாடக இசை என்பது ஒரு சமூகத்திற்கான சொத்து என்பது போல் காட்டப்பட்டு வரும்,ஒருசார் சாதீய ஆதிக்கத்தை உடைத்தெறிய எண்ணுகிற நவீன சிந்தனையாளர். அதனால் அவரை சகிக்க முடியாதவர்கள், நூலிற்குள் பேசப்படும் கீழ்த்தட்டு உழைப்பாளர் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டி, நூலை வெளியிட அரங்கம் தரமுடியாது என்று கடைசி நேரத்தில் கை விரித்துவிட்டார்கள்.

ADVERTISEMENT


அப்படி என்ன அந்த நூலில் அணுகுண்டுகள் இருக்கின்றன? தோல் வாத்தியக் கருவியான மிருதங்கத்தைத் தேர்ந்த கலைஞர்கள் வாசிக்கும் போது அதற்கு உலகமே மயங்குகிறது. ஆனால் அந்த மிருதங்கத்தை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ, எல்லா வகையிலும் வலி மிகுந்ததாக இருக்கிறது என்பதைப் பரிவோடு அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணா.


மிருதங்கத்துக்கு ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்தான் பதப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், மிருதங்கத்தை உருவாக்குபவர்கள் எப்படியெல்லாம் வியர்வை சிந்துகிறார்கள் என்பதையும் அதில் விவரித்திருக்கிறார். மிருகங்களின் தோலில் இருந்துதான் மிருதங்கம் செய்யப்படுகிறது என்ற உண்மையை, அவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதுதான் அவர்களை அதிகமாக அலறவைத்திருக்கிறது. தாளக் கருவிகளுக்கான தோல்கள் ஏதோ வானத்தில் இருந்து நெய்து எடுக்கப்படுவது என்பது போல், அவர்கள் காட்டிவந்த போலியான புனித பாவனையை கிருஷ்ணா இந்த நூலில் கிழித்தெறிந்திருக்கிறார். பெரியார் எழுப்பிய குரல், மிருதங்கத்தில் இருந்தும் வரும் என்பதை அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.


ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரும் எந்தவிதப் பேதமும் இன்றி கோயிலின் கருவறைவரை உரிமையோடு சென்று, ஆடல், பாடலுடன் மலர்களைத் தூவி இறைவனை வழிபட்டு வந்த நிலையில், சோழர்கள் காலத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்கள், கோயில்களுக்குள் நுழைந்தார்கள். இதற்காக தமிழ் மன்னர்கள், காஷ்மீர் பகுதியில் இருந்து கூட வெள்ளைத் தோலினரை இறக்குமதி செய்தனர். கோயிலுக்குள் காலடி வைத்தவர்கள், அதன் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். கருவறையில் பக்தியுடன் கசிந்துருகிய தமிழ் ’நீச பாசை’ என்ற முத்திரையோடு வெளியே துரத்தப்பட்டது. கருவறையில் வழிபாடு செய்தவர்களும் ’தீட்டான சூத்திரர்கள்’ என்று வெளியே நிறுத்தப்பட்டார்கள்.


இதேபோல் முத்துத்தாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை என்னும் தமிழிசை மூவரால் உருவாக்கப்பட்ட பண்களும் பாடல்களும் மக்கள் மத்தியில் கோலோச்சின. அவர்கள் காலத்துப் பின்னால், அவர்களைப் பார்த்து பாண்ணமைத்துப் பாடிய இசை மும்மூர்த்திகளான தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரை தூக்கிப்பிடித்து, தமிழிசை மூவரை வைதீகவாதிகள் அரங்குகளில் இருந்து ஓரம்கட்டினர்.


இசையுலகில் தான் உணர்ந்த இதுபோன்ற ஆதிக்கத் திமிருக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கினார் டி.எம்.கிருஷ்ணா. இசை என்பது மக்கள் எல்லோருக்குமான பொதுச்சொத்து, அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும், குறிப்பிட்ட மதத்திற்குமான சொத்து என்று நிலைநாட்ட முயல்வது தவறானது என்று எதிர்க்குரல் எழுப்பினார்.

மேலும், இசைக்குப் பஞ்ச கச்சமும் உச்சிக் குடுமியும் தேவையா? பளபளப்பான பட்டு வேட்டி, ஜிப்பா அணிந்துதான் கர்நாடக இசையைப் பாடவேண்டும் என்பது சட்டமா? கைலியோடு பாடினால் இசை அபஸ்வரம் ஆகிவிடுமா? அதன் புனிதம் கெட்டுவிடுமா? என அவைதீகவாதிகள் இத்தனை காலமும் பொத்திவைத்த போலிப் புனிதத்தின் வேட்டியை அவர் உருவினார். அதோடு நிறுத்தாத கிருஷ்ணா, மதம் கடந்ததே இசை என்று காட்ட, கர்நாடக இசையில் கிருஸ்த்தவப் பாடல்களைப் பாடினார். இதற்கு வைதீகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் கடந்த ஆண்டு டெல்லி நேரு பூங்காவில் ஸ்பிக் மேக்கே என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இவரது இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது.

’கண்ணெதிரில் எது நடந்தாலும் நமக்கென்ன? நம் பிழைப்பை நாம் நடத்துவோம்’என்று ஒதுங்கிச்செல்லும் கலைஞர்களுக்கு நடுவே, அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தார் கிருஷ்ணா. கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜிங்பிங் தமிழகம் வந்த போது, அவரை மகிழ்விக்க கலை நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் குளுகுளு மேடையில் பரதம், கதகளி, மோகினி ஆட்டம் போன்றவை நடப்பதையும், நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டும் வேகாத வெய்யிலில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டதையும் கண்ட கிருஷ்ணா,’நடனக் கலைகளுக்கு மட்டும் மேடை. நாட்டுப் புறக் கலைகளுக்கு தெரு ஓரமா?’என்று கொந்தளித்தார். அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலின் போது, ’மதவாத அரசியலுக்கு முடிவு கட்டுங்கள். மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்காதீர்கள்’என்றும் பறையறைந்தார். அதேபோல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும் தன் எதிர்வினையை அழுத்தமாக ஆற்றினார் கிருஷ்ணா.

இப்படி தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பிவருவதால் அவரை இழிவுபடுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எண்ணற்ற விருதுகளைப் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, 2016-ல் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசேசே விருதுபெற்றபோது, ஜெயமோகன் போன்றவர்களால் வேண்டுமென்றே அவர் விமர்சிக்கப்பட்டார். இந்த விருது பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் ரமோன் மெகசேசே நினைவாக வழங்கப்படும் விருதாகும். கிருஷ்ணா என்னும் கலைஞனின் புரட்சிக் குரலுக்கு எதிராகத் திரண்ட வைதீகவாதிகளின் கசப்புணர்வு ’அரங்க மறுப்பு’ வரை வந்து நிற்கிறது.


டி.எம். கிருஷ்ணாவின் நூலில் அரசுக்கோ ஆட்சியாளர்களுக்கோ எதிரான கருத்துக்கள் என்று எதுவும் இல்லை. வைதீகர்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குரலே அவரிடமிருந்து எதிரொலிக்கிறது. இதைச் சகிக்க முடியாதவர்கள்தான் எதிர்க்கிறார்கள். பிற்போக்கு வாதிகளின் எதிர்ப்பும் மறுப்பும்தான் ஒரு புரட்சியாளனை வெளிச்சம் போட்டு அடையாளம் காட்டும் தகுதியான அடையாளமாய் ஆகும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT