ADVERTISEMENT

நக்கீரனிடம் சிக்கிய  ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்! -ஆக்‌ஷன் ரிப்போர்ட்!

05:00 PM Jul 21, 2018 | rajavel


“ஹலோ நக்கீரன்களா… சென்னை அசோக்நகர் பகுதிகளில் தினேஷ்ங்குறவர் ‘ஆண்டி கரப்ஷன் ஆஃபிஸர்’ன்னு சொல்லிக்கிட்டு ஐ.டி.கார்டோட திரியுறதோடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தெரியும்னு போலீஸ் ஸ்டேஷன்களில் வந்து கட்டப்பஞ்சாயத்து பன்றதுன்னு சட்டத்துக்குப்புறம்பா செயல்பட்டுக்கிட்டிருக்காரு. ஆனா, அவரோட செயல்பாடுகளைப்பார்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரியுறமாதிரி தெரியல. ஆனா, ஐ.பி.எஸ். அதிகாரிகளே அவரோடு நெருக்கமா பழகுறதால எங்களால விசாரிக்கமுடியல. நக்கீரன்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கவைக்கணும்” –காவல்துறை நண்பர்களிடமிருந்தே நமக்கு தகவல் வர நக்கீரன் டெக்னிக்குடன் விசாரணையில் இறங்கினோம்…

ADVERTISEMENT

ADVERTISEMENT



அந்த நபரின் செல்ஃபோன் நம்பருக்கு ஃபோன் செய்தோம் : வணக்கம்… தினேஷ் சார்தானே பேசுறீங்க? நான், தி.நகர்லேர்ந்து பேசுறேன். வெஸ்ட் மாம்பலம் தாசில்தார் ஆஃபிஸ்ல நிறைய லஞ்சம் வாங்குறாங்க. இதுபற்றி, போலீஸா இருக்கிற என் ஃப்ரண்டுக்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது ‘ஆண்டி கரப்ஷன்ல தினேஷ் சார்னு இருக்காரு. அவர்க்கிட்ட சொல்லுங்க ஹெல்ப் பண்ணுவாரு’ன்னு சொன்னார். அதான்… கால் பண்ணினேன். எப்படி சார் உங்கக்கிட்ட கம்ப்ளைண்ட் மாதிரி குடுத்துடலாமா?

தினேஷ்: வெரி குட்.. வெரி குட்… எவிடென்ஸ் ஏதாவது இருக்கா?

நாம்: எவிடென்ஸ் இல்லைசார். என்ன எவிடென்ஸ் வேணும்னா எடுத்துடலாம்… (கொக்கி போட்டோம்)

தினேஷ்: சரி… நீங்க ஒண்ணு பண்ணுங்க… தி.நகர் டி.சி. அரவிந்தன்னு இருக்கார். அவருக்கு, நான் ரெஃபர் பண்ணிடுறேன். நேரா போயி அவரை பார்த்துடுங்க. நான், சொன்னேன்னே சொல்லிடுங்க. அவர்க்கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணிடுறேன் (உயரதிகாரியின் தொனியில்)

நாம்: சார்… நீங்க எங்க இருப்பீங்க சார்? (மிகவும் பவ்யமாக)

தினேஷ்: நாங்க… (சிரித்தபடி) எங்களுக்கு திடீர்ன்னு மெசேஜ் வந்துடும் கிளம்பிடுவோம். நான் அவுட்டர்ல இருக்கேன் (ரெம்ம்ம்ப பயங்கரமான லஞ்ச அதிகாரியா இருப்பாரு போல)

நாம்: சார்… நீங்க ஆண்டி கரப்ஷன்ல என்னவா இருக்கீங்க?

தினேஷ்: கரப்ஷன் அண்ட் இன்விகேஷன் டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். (இன்வெஸ்டிகேஷன் என்றுகூட சொல்லத் தெரியவில்லை… பாவம்)

நாம்: நீங்க என்னவா இருக்கீங்க? (மீண்டும் துருவினோம்)

தினேஷ்: ஆக்‌ஷுவலி… போலீஸை கண்காணிக்கிறதுதான் எங்க வேலை. ஐ.என்.ஏ. மாதிரி ஏஜெண்ட். ஏ.சி., டி.சி.க்களுக்கு மட்டும்தான் தெரியும்... நாங்க யாருன்னு. (துப்பாக்கி பட விஜய் மாதிரி பெரிய ஆஃபிசரா இருப்பாரு போல) ஸ்டேஷனுக்கெல்லாம் போகமாட்டோம். டி.சி., ஜே.சி.க்கு ரெஃபர் மட்டும் பண்ணுவோம். கமிஷனருக்கு ரெஃபர் பண்ணுவோம். லஞ்சம் வாங்குறது ஏதாவது ரெக்கார்டு பண்ணமுடியாமான்னு பாருங்க. (ஓ.கே. சார்… ஆல்ரெடி ரெக்கார்டு பண்ணிக்கிட்டுத்தான் சார் இருக்கோம். ஹி…ஹி)

நாம்: சார்… லஞ்ச ஒழிபுத்துறை அலுவலக ஃபோன் நம்பருக்கு ஃபோன் பண்ணினா ரெஸ்பான்ஸே இல்ல. உங்களமாதிரி அந்த டிபார்ட்மெண்டுல ஒரு ‘நல்ல அதிகாரி’ எனக்கு நட்பா கிடைச்சது ரொம்ப சந்தோஷம் சார்.

தினேஷ்: சூப்பர் சூப்பர் நன்றி… நான் பார்த்துக்கிறேன். (ஃபோன் கட் ஆனது)

அதற்பிறகு, அவரிடம் பேசியபோது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு ரெஃபர் பண்ணுவதாகவும் அவரது நம்பரையும் அனுப்புவதாகவும் சொன்னார். அதற்குப்பிறகு தொடர்புகொண்டபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்ட்ரோலில் வரும் பிரைவேட் ஏஜெண்ட்” என்றார். “போலீஸை கண்காணிச்சு ஹயர் அஃபிஷியல்கிட்ட சொல்லணும். அதுதான், எங்கள் வேலை. சிட்டியில ஒவ்வொரு ஸோனுக்கு ஒரு ஹெட் இருப்போம். நான், சவுத் ஸோன் ஹெட். நேரடியா கமிஷனருக்கு மட்டும்தான் தகவல் கொடுப்போம். நார்த்துல மணிகண்டன்னு ஒருத்தர் இருக்காரு. நாலு ஸோனுக்கு நாலு பேரு இருக்கோம் சுருக்கமா சொல்லணும்னா போலீஸை கண்காணிக்கிறதுதான் எங்கவேலை” (ஓ… உங்கள மாதிரி ஏகப்பட்ட பேரு சுத்திக்கிட்டிருக்காங்களா?) என்று தொடர்ந்து ரீல் ஓட்டிக்கொண்டிருந்தவரிடம்…

“நான் நக்கீரன் நிருபர் பேசுறேன். நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என்று நாம் கேட்டபோது எதிர்முனையில் பேரமைதி. மீண்டும் கேட்டபோது, “வாட்ஸப் நம்பர் குடுங்க. ஐ.டி. கார்டை அனுப்பி வைக்கிறேன்” என்று கெத்தாக பேசிவிட்டு ஃபோனை துண்டித்தார். ‘அகில இந்திய குற்றம் மற்றும் கமிட்டி’ என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பினார்.

“இது, அரசாங்க அமைப்பா? தனியார் அமைப்பா? சங்கமா? அறைக்கட்டளையா?” என்று நாம் கேட்டபோது… அவருக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில், இது ஒரு பிரைவேட் அமைப்பு என்பதை ஒப்புக்கொண்டார். “எங்க செகரெட்டரி மரினா கோவையில் உள்ளார். காவல்துறையால் சாமானியன் அலைகழிக்கப்படும்போது உதவி செய்யுற அமைப்பு” என்றார் சமாளித்தபடி. “உங்க சங்கத்தின் செகரெட்டரி நம்பர் அல்லது அலுவலக தொலைபேசி நம்பர் கொடுங்க. உங்க சங்கம் எங்கு பதிவு செய்யப்பட்டது?” என்று நாம் கேட்டபோது, “மேடம்கிட்ட கேட்டுட்டு லைனில் வருகிறேன்” என்றவர் பலநாட்கள் ஆகியும் திரும்ப லைனில் வரவில்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விளக்கம் கேட்டபோதும் பார்த்துவிட்டு எந்த விளக்கமும் நமக்கு அனுப்பவில்லை. பிறகுதுதான், தினேஷ் ஒரு ஆக்டிங் டிரைவர்( இதிலேயும் ஆக்டிங்தானா?) என்பது நமக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, தி.நகர் டி.சி. அரவிந்த் ஐ.பி.எஸ்.-டம் நாம் பேசியபோது, “மக்கள் பிரச்சனைகள் குறித்து ஏதாவது இன்ஃபர்மேஷன் கொடுப்பார்ன்னுதான் அவர்க்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். ஆனா, அவர் அதிகாரி மாதிரி பேசிக்கிட்டிருக்காரா? இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் அவர்.

இதுகுறித்து, நாம் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, “டெல்லியை தலைமையிடமாகக்கொண்ட ‘விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ என்கிற பெயரில் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அரசு அமைப்பா? தனியார் அமைப்பா? என்றே குழப்பமாக இருக்கிறது” என்று நமக்கு இன்னொரு தகவல் கிடைக்க…. அந்த அலுவலக எண்ணுக்கும் தொடர்புகொண்டு நைஸாக பேசினோம். “உறுப்பினராக சேர 1000 ரூபாய். மாவட்ட பொறுப்பாளர் என்றால் 5,000 ரூபாய், மாநில பொறுப்பு என்றால் 10,000 ரூபாய்” என்று விவரித்த ‘விஜிலென்ஸ் கவுன்சில் இந்தியா’ ‘நேஷனல் பிரசிடெண்ட்’ செல்வம், “லஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பு” என்றார் சீரியஸாக. அரசாங்க பெயர்போல ’விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ என்கிற பெயரில் பதிவு செய்யமுடியாதே… எப்படி பதிவு செய்தீர்கள்? என்று நாம் கேட்டபோது, “சட்டத்துக்குட்பட்டுதான் அறக்கட்டளையாக பதிவுசெய்துள்ளேன்’ என்றவர் அதுபோன்று நிறைய சங்கங்கள் வெளி மாநிலங்களில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.




இதுகுறித்து, சேலம் மாவட்ட பதிவுத்துறையில் நாம் விசாரித்தபோது, “சேலம் மேற்கு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. எந்த பெயரில் வேண்டுமென்றாலும் அறக்கட்டளையாக பதிவுசெய்துகொள்ளலாம் என்ற சட்டத்திலுள்ள ஓட்டையை பயன்படுத்தி இப்படி பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், சங்கப்பதிவுச்சட்டம்தான் அறக்கட்டளைக்கும் வழிகாட்டி. அதனடிப்படையில், சங்கப்பதிவு சட்டப்பிரிவு-9 படி ‘இந்தியா’ என்கிற பெயரில் தனியார் அறக்கட்டளை பதிவுசெய்யக்கூடாது. மேலும் அரசாங்கத்தின் தோற்றத்தைப்போன்று தனியார் அமைப்புகள் பதிவுசெய்யவும்கூடாது. மேலும், இதன் ட்ரஸ்டி செல்வம் இந்த அறக்கட்டளையை குடும்ப அமைப்பாகத்தான் வழக்கறிஞர் மூலம் பதிவுசெய்துள்ளார். ஆனால், பொதுநல நோக்கத்தோடு ஆரம்பித்ததாக ஆவணத்தில் காட்டியிருப்பது முரண்பாடு. இந்த அறக்கட்டளைமூலம் வேறொரு இன்ஸ்டிடியூஷன் ஆரம்பித்து பிறகுதான் பணம் வசூலிக்கமுடியுமே தவிர பொறுப்பாளர்கள் எல்லாம் நியமனம் செய்யமுடியாது. அதேபோல், இந்த அமைப்பிற்கு டெல்லியில் தலைமை அலுவலகம் இல்லை” என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இதுகுறித்து, பதிவுத்துறை சேலம் மாவட்ட ஏ.ஐ.ஜி. செந்தமிழ்செல்வனிடம் கேட்டபோது, “விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் உறுதியாக.


அரசாங்க பெயர்போல யார் வேண்டுமானாலும் இப்படி பெயர்களை பதிவு செய்யமுடியுமா? என்று லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடும் ‘சட்டப்பஞ்சாயத்து’ இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் ‘அறப்போர்’ இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர்களிடம் கேட்டபோது, “அரசாங்க அமைப்பைப்போன்ற தோற்றத்தில் இப்படிப்பட்ட பெயர்களை பதிவுசெய்வதால் பொதுமக்களிடம் குழப்பதை ஏற்படுத்துவதோடு தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. நுகர்வோர் மற்றும் மனித உரிமை பெயர்களிலும் இப்படி பலரும் பதிவு செய்துகொண்டு கண்டவர்களுக்கெல்லாம் ஐ.டி.கார்டுகளை கொடுத்துவிட்டு கட்டப்பஞ்சாயத்து மிரட்டல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சென்னை மாம்பலம் பதிவு அலுவலகத்தில் ஒரு பெயரை பதிவு செய்துவிட்டு சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் அதே பெயரில் பதிவு செய்தாலே கண்டுபிடிக்கமுடியாத அளவுத்தான் பதிவுத்துறையின் ‘சிஸ்டம்’ உள்ளது. பணம் வாங்கிக்கொண்டோ அல்லது இதுகுறித்த சட்டவிதிகள் தெரியாத பதிவாளர்களால்தான் இப்படிப்பட்ட பெயர்கள் பதிவுசெய்யப்படுகின்றன. பதிவுத்துறை முறையாக கண்காணித்து பெயர்களை பதிவுசெய்யவேண்டும்” என்கிறார்கள் கோரிக்கையாக.

இதுகுறித்து, சென்னை சாந்தோமிலுள்ள தமிழக அரசின் பதிவுத்துறைத்தலைவர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்.-ஐ தொடர்புகொண்டபோது அவர் மீட்டிங்கில் இருக்கிறார் என்று துணை பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் நம்மிடம், “இப்புகார் குறித்து பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறேன். அனைத்து பதிவாளர்களுக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து… முறையாக பதிவாக செய்யச்சொல்லி அறிவுறுத்துகிறோம்” என்றார் அவர்.

ஆரம்பத்திலேயே தடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால்… பிரதமர் அலுவலகம், தமிழக அரசு அலுவலகம், முதலவர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், மினிஸ்டர் அலுவலகம் போன்ற பெயர்களிலும் டுபாக்கூர்கள் பதிவுசெய்து மிஸ்யூஸ் செய்வதற்குமுன் தமிழகஅரசின் பதிவுத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ‘உண்மையாக’ சமூக ஆர்வலர்களின் கோரிக்கை!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT