ADVERTISEMENT

எடப்பாடி போட்ட திட்டம்... கடுமையாக எதிர்த்த ஸ்டாலின்... அதிமுகவின் எல்லா திட்டத்துக்கும் செக் வைத்த திமுக!

11:18 AM Dec 09, 2019 | Anonymous (not verified)

சட்டவிதிகளுக்குப் புறம்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிருந்த எடப்பாடி அரசுக்கு கொட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். மூன்று வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது மாநில தேர்தல் ஆணையம். இதனையடுத்து, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார் ஆணையர் பழனிச்சாமி.

ADVERTISEMENT



ஆனால், சமீபத்தில் பிரிக்கப்பட்ட 4 புதிய மாவட்டங்களோடு இணைந்த 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை, மகளிர்க்கான இடஒதுக்கீடு, சுழற்சி முறையிலான ரிசர்வ் வார்டுகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமலே தேர்தல் தேதி அறிவித்தது சட்ட விதிகளுக்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தது தி.மு.க.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கோடு இதனையும் இணைத்து 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான முதல் அமர்வு.

ADVERTISEMENT



ஊரக உள்ளாட்சிகளில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே ரகசியமாக செய்து வைத்திருப்பதால் தேர்தலுக்கு தடை விழுந்துவிடக்கூடாது என ஏக எதிர்பார்ப்பில் இருந்தது ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமை. விசாரணை துவங்கியதும் தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, "உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம் என சொல்லும் தேர்தல் ஆணையம், தமிழக அரசு புதிதாக உருவாக்கிய 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை சட்ட விதிகளை பூர்த்தி செய்யாமலே தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. சட்டச்சிக்கல்களை சரி செய்யாமலே எதன் அடிப்படையில் தேர்தலை நடத்துகிறார்கள் என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள உத்தரவுகளுக்கு எதிராக தேர்தலை நடத்த முன் வந்துள்ள ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்''’ என அழுத்தமாக வாதிட்டார்.



அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர்களைப் பார்த்து, "புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட் டங்களில் வார்டு வரையறை செய்தீர்களா?' என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் விதிகளுக்கு உட்பட்டு நடந்து முடிந்துள்ளன. அதனால், மாவட்ட பிரிவினைக்கும் வார்டு வரையறைக்கும் தொடர்பில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தலை ரத்து செய்ய முடியாது'' என வாதிட்டது தேர்தல் ஆணையம்.


கோபமான நீதிபதிகள், "தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது. ஆனா, நாங்கள் நினைத்தால் மொத்தமாக தள்ளிப்போட முடியும். நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் என்ன விதிகள் வகுக்கப்பட்டதோ அதன்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். குறுக்கு வழியில் தேர்தலை நடத்தக் கூடாது'' என கொட்டு வைத்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "பழைய வார்டு வரையறை பணிகளை மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்பதை ஏற்க முடியாது. பழைய நடைமுறையே தொடரும் எனில் எதற்காக மாவட்டங்களை பிரித்தீர்கள்? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே ஒரு மாவட்ட பஞ்சாயத்து என்பதை எப்படி ஏற்க முடியும்? வார்டு வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தினால் புதிய மாவட்டங்களில் குழப்பம் வராதா? பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள ஊராட்சிகள் பழைய மாவட்டங்களில் இருக்குமா? புதிய மாவட்டங்களில் இருக்குமா? விதிகளை முறையாகப் பின்பற்றாததால் 9 மாவட்டங்களிலும் தேர்தலை தள்ளி வைக்கலாமா?'' என கோபமாக அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பினர். இதற்கு முறையான பதிலை சொல்லாமல் தவித்தது ஆணையம்.


இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹத்கி, "வார்டுகள் பிரிக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள்''’ என கேட்டுக் கொண்டார். இதனை எதிர்க்கும் வகையில், "குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைத்தால் குழப்பம் வரும். தமிழகம் முழுவதும் தேர்தலை மொத்தமாக தள்ளி வையுங்கள்'' என வலியுறுத்தினர் தி.மு.க. வழக்கறிஞர்கள்.

இந்த நிலையில், "9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைப்பதில் தமிழக அரசின் கருத்தைக்கேட்டு மதியம் 2 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுங்கள்' என ஆணையத்துக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து முதல்வர் எடப்பாடியிடம் கலந்தாலோசித்தார் ஆணையர் பழனிச்சாமி.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "தேர்தலை தள்ளிவைக்க அரசு நாடகமாடுவதாக நீதிபதிகள் கருதுகிறார்கள். வார்டு வரையறை, இடஒதுக்கீடு தொடர்பாக ஆணையம் வைக்கும் கருத்துகளை அவர்கள் ஏற்பதாக தெரியவில்லை. விதிகளை பின்பற்றவில்லை என நம்புகிறார்கள். அதனால், 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க ஒப்புக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என முதல்வர் எடப்பாடியிடம் விவரித்தார் ஆணையர் பழனிச்சாமி. அதனை எடப்பாடி ஏற்றுக்கொள்ள, 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்கலாம் எனவும் மீதியுள்ள மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயார் எனவும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது''’ என்கிறது அதிகாரிகள் தரப்பு.

இதற்கிடையே மறைமுக தேர்தல், கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் என்கிற எடப்பாடி அரசின் திட்டங்கள் குறித்து தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டவர்களோடு சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அந்த ஆலோசனை குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. மேலிட தொடர்பாளர்கள், "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருசம் இருந்தாலும் அடுத்த 6 மாசத்துக்குள்ளே தேர்தல் வரலாம் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் இதுநாள் வரையில் தலைமையிடம் பேசும்போது எங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தோம். ஆனால், நீதிமன்றத்தின் நெருக்கடியால் தேர்தல் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதனால் தேர்தலை எதிர் கொள்ளும் மனநிலைக்கு தி.மு.க.வினர் வந்துவிட்டனர்.

இந்த நிலையில்தான் கிராம ஊராட்சி களுக்கு மட்டுமே தேர்தலை அறிவிக்கச் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக நினைத்து மூத்த தலைவர்களுடனான ஆலோசனையில் அதனை கடுமையாக எதிர்த்திருக்கிறார் ஸ்டாலின். அதனால் இதனை எதிர்த்தும் வழக்குப் போட வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

துரைமுருகனோ, "ஊராட்சிகளுக்கான தேர்தலை எதிர்த்து வழக்குப் போட வேண்டாம். புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமே சுட்டிக்காட்டி வழக்குப் போடலாம். ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது நமக்கு நல்லதுதான். இதனை எதிர்க்கத் தேவையில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது இப்படித் தான் கிராம ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தினார். கிராமங்களில் தனக்கும் நகரங்களில் கலைஞருக்கும் ஆதரவு இருக்கிறது என நினைத்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் தனக்காக ஓட்டு போடுவார்கள் என நினைத்து மனம் போனபோக்கில் கட்சிக்காரர்களை எம்.ஜி.ஆர். களமிறக்கினார். ஆனால், கலைஞரோ, ஊராட்சிகளைப் பொறுத்தவரை சாதி செல்வாக்கும் தனி நபர் செல்வாக்கும்தான் ஜெயிக்க வைக்கும் என முடிவு செய்து சரியான நபர்களை தேர்வு செய்து போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில் தி.மு.க.தான் அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். வியூகம் தோற்றுப்போனது.

அதனால், தற்போதும் ஆட்சி அதிகாரமும் பணபலமும் இருக்கும் மமதையில் தி.மு.க.வை ஒழித்து விடலாம் என கருதி ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இதில், கலைஞர் மாதிரி கணக்குப் போட்டால் அ.தி.மு.க.வை முழுமையாக நம்மால் தோற்கடிக்க முடியும். அதனால் ஒரு வகையில் ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் வருவது நமக்கு நல்லதுதான்' என துரைமுருகன் சொல்ல, மற்றவர்களும் இதனை ஆமோதித்துள்ளனர். ஸ்டாலினும் அதனை ஒப்புக்கொள்ள தேர்தலை எதிர் கொள்ள முடிவெடுத்தனர். ஆக, உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து தனித்தனியாக தேர்தலை நடத்துவதன் மூலம் தி.மு.க.வை முடக்கிவிடலாம் என திட்டமிட்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு பல்வேறு வியூகங்கள் மூலம் பதிலடி தர திட்டமிட்டிருக்கிறது தி.மு.க.'' என சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கேற்ப தேர்தலை எதிர்கொள்வதில் சீரியஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி, போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ள முறைகளை பற்றி மாவட்ட அமைச்சர்களிடம் தீவிரமாக விவாதித்துள்ளார். இதனையடுத்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT