ADVERTISEMENT

எட்டுவழிச்சாலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க புதிய மனுத்தாக்கல்; கருப்புக்கொடி... கண்டனம்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

07:01 AM Jun 05, 2020 | rajavel




சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று (ஜூன் 4) மனுத்தாக்கல் செய்துள்ளதற்கு, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT


சேலம் - சென்னை இடையே புதிதாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் வாக்கில் தமிழக அரசு தொடங்கியது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக 277.3 கி.மீ. தூரத்திற்கு இத்திட்டம் அமைகிறது. இதற்காக, 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டிருந்தது.

ADVERTISEMENT


இத்திட்டத்தை செயல்படுத்தினால் பத்தாயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, கையகப்படுத்தப்படும் விளை நிலங்கள் மட்டுமின்றி அதையொட்டியுள்ள நிலங்களும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதையும் காதில் போட்டுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அரசு, காக்கித்துறையின் லட்டிகளைக் கொண்டு மிரட்டி, அடாவடியாக நிலத்தைக் கையப்படுத்தி, முட்டுக்கல் நட்டது.


இத்திட்டத்திற்குத் தடை கேட்டு, தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் வீரபாண்டி மோகனசுந்தரம் உள்ளிட்ட 50 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ''விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், காவல்துறையினர் உதவியுடன் நிலத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கையே தவறு. 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்வதுடன், முட்டுக்கற்களை அகற்றிவிட்டு, கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் முன்பிருந்த நிலையின்படி ஒப்படைக்க வேண்டும்,'' என்று எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடியாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பு கடந்த 2019, ஏப்ரல் 8ம் தேதி வழங்கப்பட்டது.


அப்போது மக்களவைத் தேர்தல் காலம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் அடக்கி வாசித்தன. தேர்தல் முடிந்த பிறகு, உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்டது.


உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு, நீதிபதி ரமணா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரமணா, ''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விரிவாக விசாரிக்க வேண்டும். அதனால் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது,'' என்று அதிரடியாக உத்தரவிட்டார்.


அதன்பிறகு என்ன நடந்ததோ, மூன்றே மாதத்திற்குள்ளாக நீதிபதி ரமணா திடீரென்று அந்த பெஞ்ச்சில் இருந்து விடுவிக்கப்பட்டு, நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு பொறுப்பேற்று விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து வழக்கில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்த நிலையில், இடையில் கரோனா ஊரடங்கால் நீதிமன்ற செயல்பாடுகளும் முடங்கின.


இந்நிலையில், எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் திடீரென்று, இந்த வழக்கு விசாரணையை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரி, வியாழனன்று (ஜூன் 4) ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எட்டுவழிச்சாலைத் திட்டம் மற்றும் கரோனா ஊரடங்கால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து நொந்து போயிருக்கும் விவசாயிகள், இந்த புதிய மனுத்தாக்கலால் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.




மனுத்தாக்கல் விவரத்தை அறிந்த சில மணி நேரங்களில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு குடும்பத்துடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தினர்.


இதுபற்றி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் நம்மிடம் பேசினார்.




''சேலம் - சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் என்ன நோக்கத்திற்காக போடப்படுகிறது என்பது குறித்து இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் தெளிவுப்படுத்தவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 700 கோடி ரூபாய் டீசல் செலவு மிச்சமாகும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் கொடுத்திருக்கிறது. இப்போதோ, ராணுவத் தளவாட தொழிற்சாலை வருவதால் எட்டுவழிச்சாலை அவசியம் என்கிறது தமிழக அரசு.


உண்மையில் கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் சுரண்டி எடுத்துச் செல்வதற்காகவே இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர துடிக்கின்றன. அதற்காகவே ரஷ்யாவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கின்றனர்.


எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதேநேரம், சேலம் - சென்னை இடையே ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்துவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்பதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம்,'' என்கிறார் பழனியப்பன்.


சேலம் மாவட்டம் வீரபாண்டி, பூலாவரி பகுதிகளில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் நேரடியாகக் கையகப்படுத்தப்படும் 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமின்றி, அதையொட்டியுள்ள விவசாய நிலங்களும் அடியோடு பாதிக்கப்படும். இத்திட்டத்தின் பேரில் உள்ளே வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவிடுவர். அப்படியானால் உழவுப்பணிக்கு தண்ணீருக்கு எங்கே போவோம்?


கரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா மக்களுமே அரிசி, காய்கறி, பருப்பு என்று அத்தியாவசிய பொருள்களைத் தேடித்தான் படையெடுத்தார்கள். விவசாயிகளின் முக்கியத்துவத்தை இந்த கரோனா காலம் மக்களிடம் உணர்த்தி இருக்கிறது. ஆனால், இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இன்னும் உணராமல் இருக்கிறார். எட்டுவழிச்சாலை வந்தால் தொழிற்சாலைகள் வரும் என்கிறார். தொழிற்சாலைகள் வரும்; ஆனால் சோறு வருமா? விவசாயிகளை தினக்கூலிகளாக விரட்டிவிட்டால் சோத்துக்கு எங்கே போவார்கள்? நாங்கள் வயலில் பாடுபட்டு விளைவிக்கும் பொருள்களை நாங்களேவா தின்கிறோம்? மக்களுக்குதானே கொடுக்கிறோம்? எங்கள் வேதனைகளை முதல்வர் உணரவே இல்லை.


கரோனா ஊரடங்கால் நொந்து போயிருக்கும் நிலையில், இப்போது எட்டுவழிச்சாலை வழக்கை வேகமாக விசாரித்து என்ன செய்யப் போகிறார்கள்? விவசாயிகளுக்கு தீங்கான இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்,'' என்றார்.


சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சாலையோரங்களில் உள்ள பசுமையான மரங்களையும், பலன் தரும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களையும் அழித்துவிட்டு பசுமைவழிச்சலைத் திட்டத்தை போடத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். மேடைக்கு மேடை தன்னை விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகளின் நலன் என்ற பெயரில் ஒருபுறம் குடிமராமத்துப் பணிகளை முடுக்கி விடுவதும், இன்னொரு புறம், எட்டுவழிச்சாலை என்ற பெயரில் விளை நிலங்களை அபகரிப்பதும் முரண்பாடுகளின் உச்சம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT