ADVERTISEMENT

“அமித்ஷாவின் பேச்சை எளிதாகக் கடந்து போக வேண்டாம்; எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்” - ராம. சுப்பிரமணியம் பேச்சு

06:02 PM Nov 14, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தற்போதே வெற்றி தொடர்பான பேச்சுக்கள் தொடங்கி விட்டது. திமுக, அதிமுக தரப்பில் எப்போதும் பேசப்படும் இந்தப் பேச்சுக்கள் முதல் முறையாக பாஜக தரப்பிலிருந்து பேச ஆரம்பித்துள்ளார்கள். இது வெறும் அரசியல் பேச்சா? அல்லது அதற்கான திட்டம் வைத்திருக்கிறார்களா? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதைப்போல நாமக்கல்லில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதைப்போலவே தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அமித்ஷா ஏதோ கட்சியினரை உத்வேகப் படுத்துவதற்காக இதைப் பேசியதாகக் கருத வேண்டாம். இதை திமுக தலைமை மிக சீரியசாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் வந்தால் தான் இந்தியா முழுமைக்குமான கிடைத்த வெற்றியாகப் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதை மிகக் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்கள் மற்ற மாநிலங்களில் என்னென்ன பித்தலாட்டங்களைச் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளார்கள். இதைத் தமிழகத்திலும் செய்து முடிக்க அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அதன் ஒரு முயற்சியாகவே அவர்கள் தொடர்ந்து தமிழகம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் மற்ற இடங்களில் பெறும் வெற்றி அநியாயமான வெற்றியாகத்தான் இருக்கிறது. ஆனால் சாம, பேத விவகாரங்களைச் செய்து வெற்றி பெறுகிறார்கள். நீதி, நேர்மை என்பதெல்லாம் அந்தக் கட்சிக்கு சிறிதும் கிடையாது. அதை எதிர்பார்த்து அவர்கள் செயல்படுவதும் இல்லை. வெற்றி பெறுவதற்கு எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் அறவே இல்லை. ஆகையால் நான் மீண்டும் திமுக தலைவரைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பாருங்கள்.

திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெல்ல வேண்டும் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது உண்மை. அதிமுகவைப் பொறுத்த வரையில் அது நான்காக தற்போது உடைந்து கிடக்கிறது. அதனால் எடப்பாடியின் பேச்சு வெறும் வாய்ப் பேச்சாகத்தான் போகும். ஆனால் அமித்ஷாவின் பேச்சில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது. ஆகையால் எந்த எல்லைக்கும் அவர்கள் போக விரும்புவார்கள். எதையும் அரசியலாக்க அவர்கள் கூச்சப்படமாட்டார்கள். ஆகையால் அவர்களைக் கவனத்துடனும், சந்தேகத்துடனுமே அணுக வேண்டும்.

தொடர்ந்து வெற்றியை நோக்கி அவர்கள் பயணப்பட்டு வருவதால் இந்த கோவை விபத்திலும் அவர்களால் முடிந்த அரசியலைச் செய்து பார்த்தார்கள். இது தீவிரவாதிகளின் முயற்சியாகப் பார்க்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற உடனே அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் காவல்துறையினரின் எந்த நடவடிக்கையும் குறை சொல்ல முடியாது. ஆனால் காவல்துறையினர் மீது அவர்கள் இன்றுவரை குறைசொல்லி வருகிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் அனைத்திலும் செய்வார்கள் என்பதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT