Skip to main content

பிரதமர் மோடியின் ‘5டி’ ; முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள் - ராம சுப்ரமணியன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ramasubramanian | Cmstalin | Cmstalin speech | Modi |

 

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பாட்காஸ்ட் மூலம் மக்களிடம் பல்வேறு அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசி வருகிறார். அதில், பாஜக ஆட்சி பற்றியும் பேசி தனது இரண்டாவது ஆடியோ பாட்காஸ்டை வெளியிட்டார். இது குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

இந்தியா முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து பேசுபொருளாகியுள்ளது என்பது உண்மை. மேலும், ஆடியோவில் சொல்லப்படும் விசயங்கள் இந்திய மக்களிடையே சேர்கிறது என்ற கவலை பாஜகவிடம் உருவாகியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வை குறிவைக்க முயல்கின்றனர். ஸ்டாலின் பேசிய ஆடியோ ‘நீங்கள் சொன்ன மகளிர் உரிமைத் தொகை வந்துவிட்டது... ஆனால், மோடி அவர்கள் தெரிவித்த 15 லட்சம் வரவில்லை’ என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அடுத்து, குஜராத்தை வளமாக மாற்றுவேன் என்று கூறிய பொய் பிம்பங்களை பற்றியும் முதல்வர் பேசியுள்ளார். 

 

இதற்குப் பல ஆண்டுகள் முன்பு மோடி அறிவித்த, 5டி- வளர்ச்சியாக திறமை, பாரம்பரியம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்வர் சொல்கிறார், ‘5டி-க்கு பதில் 5சி, வகுப்புவாதம், ஊழல், கார்ப்பரேட் முதலாளித்துவம், ஏமாற்றுதல் மற்றும் குணநலன் படுகொலை தான் இருக்கிறது’ என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணியைக் கண்டு சிலர் அஞ்சியுள்ளனர். தொடர்ந்து, சிஏஜி அறிக்கையின் 7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசினால் பயம் வந்துவிடும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

இதன் தொடர்ச்சியாக, அயோத்தி திட்டத்தில் கோவில் கட்ட இடம் வாங்கியதில் குளறுபடி, நடுத்தர வர்க்கத்தினரை விமானத்தில் அழைத்து செல்லும் ‘உடான்’ திட்டத்தின்படி தமிழகத்தில் சேலத்தை தவிர பிற அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. சினிமாவில் வரும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போலத்தான் ரயில்வேயிலும் செலவுகள் கூடியுள்ளது. தொடர்ந்து, ஓய்வூதிய திட்ட நிதிகளை எடுத்து விளம்பரங்களுக்கு செலவிட்டது. சுங்கவரியை சிலரிடம் வசூலிக்காமல் விட்டது. அதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் கடிதம் அனுப்பியது முதல் பாரத்மாலா திட்டத்திலும் நிறைய சிக்கல் உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார். பின்பு, துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் 1270% நிதி உயர்ந்தது என்றும் கூறியுள்ளார். 

 

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலும், இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது, ஒரே தொலைப்பேசியை வைத்து பல சிகிச்சைகளை பெற்றது. ஒரே ஆதார் எண்ணில் பல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை தகவலையும் ஸ்டாலின் எடுத்து சொல்லி ‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இ.ந்.தி.யா. கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். மேலும், ஊழலின் உறைவிடமாக பாஜக இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலும், பத்திரிகைளிலும் கூட பேசுவதில்லை என ஆதங்கத்துடன் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, முதல்வரின் இந்த பேச்சு இந்திய மக்களை சென்றடையும் என்பதே எனது கருத்து.

 

இந்த சுங்கவரி உயர்வு குறித்து, நக்கீரன் களத்திற்குச் சென்று நிலவரத்தை தெரிந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்தது. இதேசமயம், சிஏஜி அறிக்கை குறித்து  பாஜக, ‘இந்த அறிக்கை எல்லா காலத்திலும் வரக்கூடியது தான். திட்டங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு தான் செயல்படுத்தும்’ எனக் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. போன்றவர்கள் ‘இந்த முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்துள்ளது’ எனத் தக்க பதிலையும் அளித்தனர். எனவே, எந்த குற்றச்சாட்டையும் பாஜக மீது வைக்க முடியாது என்றதும் பின்னர் வந்த சிஏஜி அறிக்கையும், மு.க. ஸ்டாலின் கூறிய கருத்தும் பாஜகவினரை அச்சமடைய வைத்துள்ளது என்பது உண்மை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு கார்கே சரமாரி கேள்வி!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
For Prime Minister Modi, Karke barrage of questions

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி அறிவித்த ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. தொழில் உற்பத்தித் துறையில் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் செயலற்றுவிட்டது. 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தியால் சேர்க்கப்பட்ட மதிப்பு 16%லிருந்து 13% ஆக ஏன் குறைந்துள்ளது? மோடி அரசின் கீழ் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி ஏன் சரிந்தது? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.85% ஆக இருந்தது. இப்போது, அது கிட்டத்தட்ட 6% ஆகக் குறைந்தது. மோடி அரசு 2022க்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைகளை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த வேலைகள் எங்கே? கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் தொழிலாளர் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது? உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பெரும்பாலானவை செயல்படத் தவறியது ஏன்?

முக்கிய துறைகளுக்கான நிதியில் பாரிய அளவில் பயன்படுத்தப்படாதது ஏன்? ஜவுளித் துறையில் பிஎல்ஐக்கான 96% நிதி பயன்படுத்தப்படவில்லை. ஏ.சி.கள் மற்றும் எல்.இ.டி.யின் பாகங்கள் மற்றும் துணை பாகங்கள் தயாரிப்பதற்காக வெள்ளைப் பொருட்களில் பிஎல்ஐக்கான 95% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 549% ஆக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் மோடி ஆட்சியின் போது 90% ஆக சரிந்தது எப்படி? இந்தியாவிற்கு தேவையானது வலுவான மற்றும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகும். உயர் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளை இணைப்பதன் மூலம் வேலைகளை உருவாக்குபவர்களின் திறன்களை ஊக்குவிப்பது மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது அவசியம். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி தொகுதி?

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
BJP preliminary list of candidates released

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். 

அந்த பட்டியலில், 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 20, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 15 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க அறிவித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர்கள், 18 பழங்குடியினர், 57 ஓ.பி.சி பிரிவினர்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முக்கியமாக 50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கு போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு அளித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார்.