ADVERTISEMENT

10 ஆயிரம் கொடுத்தால் முதியோர் ஓய்வூதியம்! அ.தி.மு.க.வினர் பட்டியல் போட்டு வசூல்... குமுறி குமுறி அழுத மூதாட்டி!

05:55 PM Dec 24, 2020 | tarivazhagan

உடையாப்பட்டி

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருபெரும் கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வின்டர் சீசனிலும் தமிழகத் தேர்தல் களம் சூடாகிக் கிடக்கிறது. விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் என இந்தமுறை தி.மு.க. ரொம்பவே அடித்தட்டு மக்களை நோக்கிய தனது பிரச்சார வியூகத்தை வகுத்திருப்பதோடு, துறை வாரியாகவும் நுட்பமாக அணுகி கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT



கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்கள் தி.மு.க.வை மக்களிடத்தில் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. அதனால் இந்த முறையும் டிச.23ஆம் தேதி முதல் கிராமசபைக் கூட்டங்களை நடத்த முடுக்கிவிட்டிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். பொங்கலுக்கு முன்பாக 16 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தும் திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார்கள். சேலத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவலிங்கம், செல்வகணபதி ஆகியோர் துவக்க நாளிலேயே கிராமசபைக் கூட்டங்களை அமர்க்களமாக நடத்திக்காட்டினர்.

ADVERTISEMENT


சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், உடையாப்பட்டியில் டிச.23ல் கிராமசபைக் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விடவும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு கிராமசபைக் கூட்டத்திலும், 'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்று அச்சிட்ட பதாகை வைக்கப்பட்டது. கட்சிக்காரர்கள் கூட்டத்தைத் திரட்டி வந்திருந்தது, ஒரு பாதி என்றாலும், மாற்றத்தை விரும்பும் மக்களும் ஆர்வத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் கையெழுத்துப் போட்டனர்.


யார் யார் அரசைக் குறை சொல்கிறார்கள்? அவர்கள் கட்சிக்காரர்களா? சாமானியர்களா? நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என ஒன்றுவிடாமல் உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்தனர். கூட்டத்திற்கு வந்தவர்களின் பெயர், ஊர் விவரம் முதல்கொண்டு நுட்பமாகச் சேகரித்துக் கொண்டது காவல்துறை.


அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (75) என்ற மூதாட்டி, ''என் புருஷணும், மகனும் செத்துப்போய்ட்டாங்க. என்னைச் சாப்பிட்டியானு கேட்கக்கூட ஒரு நாதியில்லீங்க. இந்த ஊர்ல வசதியானவங்களையா தேடித்தேடி போய், அ.தி.மு.க.காரங்க முதியோர் உதவித்தொகை வாங்கித் தர்றாங்க. எனக்கும் உதவித்தொகை வேணும்னு கேட்டேன். வாய் கூசாம 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாங்க. கஞ்சிக்கே வழி இல்லாமதானேப்பா உதவித்தொகை கேட்கிறேன், பத்தாயிரத்துக்கு எங்க போவேன்னு சொன்னேன். அ.தி.மு.க.காரங்க கண்டுக்கவே இல்ல. அவங்க நல்லாருக்க மாட்டாங்க. என்ன மாதிரி நாதியத்தவங்களாம் உசுரோட இருக்கறதா சாவறதானே தெரியல'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர்விட்டுக் குமுறி குமுறி அழுதார்.


உடையாப்பட்டி செல்வம் (50) என்பவர், ரேஷன் பொருள் விநியோகம் தொடர்பான பிரச்சனை குறித்துப் பேசினார். ''ரேஷன் அரிசி இலவசமாகப் போடுகிறார்கள். அந்த அரிசி வாங்க ஒரு நாள் ரேஷன் கியூவில் நிற்க வேண்டியதா இருக்கு. அப்புறம் சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் வாங்க ஒவ்வொரு நாள் போகணும். மாசத்துல ரேஷன் பொருள் வாங்கவே குறைந்தபட்சம் நாலு நாள் மெனக்கெடணும்.


ரேஷனில் 200 மதிப்புள்ள பொருள்களை வாங்க நாங்க நாலு நாள் கூலியை இழக்க வேண்டியதாக இருக்கு. எல்லாப் பொருள்களையும் ஒரே நாளில் போடணும். அதுவும் எல்லா கார்டுக்கும் அரிசி, பருப்பு கொடுக்கறதில்ல. 60 சதவீத கார்டுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள் கிடைக்குது. மீதமுள்ள 40 சதவீத அரிசியும் பருப்பும் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்குப் போகுதானு தெரியலீங்க'' எனப் பிரித்து மேய்ந்தார்.


கக்கன் காலனியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர், “கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பப்பட்டது. வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தையே நிறுத்திவிட்டது. எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் வீடற்றுதான் இருக்கிறோம். அ.தி.மு.க. அரசில் சமூகநீதி என்பதெல்லாம் கண்துடைப்புதான்,'' என்றார்.


எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அமுதா (40), ''எங்கள் பகுதியில் 400 குடும்பத்தினர் வசிக்கிறோம். எல்லோரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்பவும் நாங்கள் அவசர உபாதைகளைக் கழிக்க வேண்டுமானால் இருட்டுகட்டும் வரை காத்திருக்க வேண்டியதிருக்கு. எங்கள் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால், இருட்டு கட்டியதும் ரோடு ஓரமாகத்தான் 'அவசரத்துக்கு' ஒதுங்கப் போறோம். அதுவும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் வயது வந்த பெண்பிள்ளைகள் கழிப்பறைகள் இல்லாததால், படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாதுங்க. கடந்த பத்து வருஷத்துல 100 முறை மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்ல'' என்றார் சலிப்பாக.

கன்னங்குறிச்சி


இங்கு இப்படி என்றால், டிச.24ல், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், மக்களே அ.தி.மு.க.வை நிராகரிக்க வேண்டும் என சங்கல்பம் செய்ததும் நடந்தேறியது.


''கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், 32 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அல்லல் படுகின்றனர். வேலையில்லாத விரக்தியில் 1,000 பட்டதாரிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நடந்திருக்கு. வறுமை, கடன் சுமையால் 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மக்கள் நலன் குறித்து சிந்திக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டார்.


கரோனா காலத்தில் கூட மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்த அ.தி.மு.க. அரசாங்கத்தை என்ன பண்ணனும்?'' என எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கேட்க, கூட்டத்திற்கு வந்த மக்கள் கோரஸாக அ.தி.மு.க.வை நிராகரிக்கணும் என்று முழங்கினர். 20 முறைக்கும் மேலாக அவர் கேள்விஎழுப்ப, மக்களும் ஆளுங்கட்சியை நிராகரிப்போம் என்றும், தி.மு.க.வை ஆதரிப்போம் என்றும் முழங்கினர். இப்படியான கேள்விகள் வாயிலாக அவர் தி.மு.க.வை மக்களுடன் கனெக்ட் செய்தார்.



கன்னங்குறிச்சியைச் சேர்ந்த பாவாயி (75) என்ற மூதாட்டி, ''கலைஞர் ஆட்சியில் வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையைத் திடீரென்று அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி விட்டதாகவும், பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் அலைக்கழித்தார்களே தவிர, உதவித்தொகை கிடைக்கவில்லை” எனவும் புலம்பினார்.



லீலாவதி என்ற பி.இ.பட்டதாரி பெண், ''நான் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். சேலத்தில் தி.மு.க. ஆட்சியில் ஐ.டி. பார்க் கட்டுமான வேலைகள் நடந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டத்தை நிறுத்திவிட்டனர். சேலத்தில் ஐ.டி. பார்க் திறக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் என்னைப் போன்ற படித்த பெண்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்” என்றார்.


இதுபற்றி நாம் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோரிடம் பேசினோம்.

ராஜேந்திரன் எம்.எல்.ஏ

''அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை வீடு வீடாகச் சென்று எடுத்துச்சொல்லி, கிராமசபைக் கூட்டத்தில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தோம். மக்களும் தன்னெழுச்சியாக வந்து கலந்துகொண்டனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இந்த ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அச்சிட்டு வழங்கினோம்.


விவசாயி மகன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டாலும், இந்த ஆட்சியில்தான் விவசாயக்கூலி வளர்ச்சி நான்கு மடங்கு சரிந்துள்ளது. வேளாண்மைத் தொழிலையே ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கக் கூடிய புதிய வேளாண் சட்டங்களுக்கும், விளைநிலத்தை அழிக்கக் கூடிய எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கும் இதே விவசாயி மகன்தான் ஆதரவு தெரிவிக்கிறார்.


கரோனா காலத்திலும் புதிய முதலீடுகள் வந்துள்ளதாக எடப்பாடி சொல்கிறார். இதே ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில்கூட அ.தி.மு.க. அரசு, அரசு வேலைகளில் பிற மாநிலத்தவரை பணியமர்த்தி, தமிழக இளைஞர்களுக்குத் துரோகம் செய்கிறது.

விஜயகுமார்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது, காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்டது என இந்த ஆட்சியில் நடந்த அவலங்களை எல்லாம் மக்கள் முன்பு எடுத்துச் சொல்கிறோம். இதற்கு வரவேற்பு இருப்பதால்தான் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று பலரும் ஆர்வத்துடன் கையெழுத்துப்போட்டு விட்டுச் செல்கின்றனர்'' என்றனர்.


அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைதான் என்றாலும்கூட, மக்களை அரசியல் மயப்படுத்தும் செயல்களிலும் தி.மு.க. இறங்கியிருப்பது வெகுவாகக் கவனம் பெற்றிருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT