ADVERTISEMENT

"திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!

04:06 PM Jun 13, 2019 | vasanthbalakrishnan

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் கவனிக்கப்பட்டவை வாரணாசி, அமேதி, வயநாடு போன்ற தொகுதிகள் என்றால் தமிழக அளவில் கவனிக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தருமபுரி இருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மற்ற எல்லா தொகுதிகளிலும் மாஸ் காட்டிய அதிமுகவை தூக்கியெறிந்து 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியே மீண்டும் தருமபுரியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தோல்விதான் என்று பாமக தரப்பினர் கூறிவந்த நிலையில், திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவரிடம் பேசுவோம்...

ADVERTISEMENT



தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளீர்கள். இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த வெற்றி கடந்த 5 ஆண்டுகளாக என்னை கடுமையாக தயார் செய்ததால் கிடைத்த ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு நல்ல வேட்பாளர் திமுகவில் இருந்து போட்டியிட்டால் நிச்சயம் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அந்த உழைப்புக்கான வெற்றியாகவே இதனை கருதுகிறேன்.

கருத்துக்கணிப்புகளில் கூட பாமக வெற்றிபெரும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக சார்பாக போட்டியிட்ட நீங்கள் வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்புமணிதான் உங்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்று நீங்களே விரும்பினீர்கள் என்றும் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தல் களம் கடுமையாக இருந்ததாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக... எதிர்த்துப் போட்டியிடுபவர் பலமாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்தேன். கிட்டதட்ட 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று எதிர்பார்த்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அன்புமணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். கடந்த முறை அன்புமணி கிட்டத்தட்ட 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். கடந்த தேர்தலில் அனைத்து சமுதாயம் vs ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் அந்தத் தேர்தலை தருமபுரி மக்கள் பார்த்தார்கள். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. பாமகவும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT


தருமபுரி மக்களவை தொகுதி பாமகவின் கோட்டை என்று கூறுகிறார்கள்... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இல்லை... தருமபுரி தொகுதி பாமகவின் கோட்டை என்ற தகவல் தவறானது. ஏனெனில், கடந்த 25 ஆண்டுளில் 20 ஆண்டுகள் மற்ற கட்சியினரே அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அதனால் பாமகவின் கோட்டை என்பது தவறான புரிதல். தருமபுரி திமுகவின் கோட்டைதான். தலைவரிடம் வாய்ப்பு கேட்டபோதே நான் அதை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், தருமபுரி திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று கூறினேன். அவ்வாறே வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றியை வரும் தேர்தலிலும் தொடர்வோம்.

பல இடங்களில் நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது இடையூறு ஏற்பட்டதாகவும், அதனால் நீங்கள் பிரச்சாரம் செய்யாமல் பாதியில் சென்றதாகவும் தகவல்கள் வெளியானதே?

அப்படி எந்த இடத்திலும் பிரச்சாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் எப்படி எங்களின் பயணத்திட்டங்களை வரையறுத்து வைத்திருந்தோமோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தோம். ஒரு இடத்தில் மட்டும் இளைஞர் ஒருவர் வாகனத்தை குறுக்கே போட்டார். அவரிடமும் பேசி, குறிப்பிட்ட அந்த இடத்திலும் பிரச்சாரம் செய்தோம்.



சில இடங்களில் நானும் அதே சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பேசியிருக்கீங்களே..?

அது பாமகவுக்காக சொல்லப்பட்ட ஒன்று. அதையும் தாண்டி வாக்கு அரசியல் என்பது முற்றிலும் வேறான ஒன்று. தேர்தல் வெற்றிக்கு வாக்கு அரசியல் மிக முக்கியமான ஒன்று. அன்புமணி தரப்பு அதனை கடுமையாக செய்ததால் அதனை நாங்கள் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானோம். அதுவும் சில இடங்களில்தான். நான் என்னுடைய பிரச்சாரத்தில் கேட்டதெல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், சிறப்பாக செய்ல்படுவேன் என்றுதான். அதற்கு மக்கள் அங்கீகாரம் தந்துள்ளார்கள்.

இந்த வெற்றி பாமகவுக்கான பதிலடினு சொல்லியிருந்தீங்க.. மேலும் அன்புமணி ராஜ்யசபாவுக்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தீர்களே?

பதிலடினு நான் சொல்லவில்லை. அதிமுக அன்புமணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும் வரட்டும். இணைந்தே மக்களுக்கு நன்மை செய்வோம். அது கொள்கை அடிப்படையில் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக இணைந்ததாக இருக்கும். எனக்கு இணைந்து செயல்படுவதில் எந்த ஈகோவும் இல்லை.


ஏன்... கொள்கை அடிப்படையில் என்றால் பதற்றமடைகிறீர்கள்... பல தேர்தல்களில் பாமகவுடன் திமுக கூட்டணியில் வைத்துள்ளீர்களே?

அவங்க கொள்கை வேறு... இந்த தேர்தல்ல கூட அவங்க திமுக கூட்டணிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. என்னை தலைவர் நம்பினார். அவரின் நம்பிக்கையை நான் காப்பிற்றியுள்ளேன்.

வெற்றிக்குப் பிறகு நீங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், திருமாவளவனுடனான சந்திப்பு பரபரப்பானதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். நானும் அந்தப் புகைப்படத்தை பார்த்தேன். நான் இயற்கையாகவே கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்கும்போது கட்டிப்பிடித்துதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். மற்ற கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது, நான் இவ்வாறே செய்தேன். திருமாவளவனை சந்தித்த புகைப்படம் மட்டும் வைரலானது எதிர்பாராதது.

அப்படி என்றால் அன்புமணியை சந்தித்தால் இதே போன்று கட்டியணைப்பீர்களா?

நிச்சயமாக... அவரின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவரை சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தால் அவரை நிச்சயம் கட்டியணைப்பேன்.

அடுத்த பகுதி:

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT