Skip to main content

களை கட்டும் தர்மபுரி-கிருஷ்ணகிரி தொகுதிகள் !

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி.முனுசாமி களமிறங்கும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தி.மு.க.வில் சுகவனம் எக்ஸ். எம்.பி வெற்றிச்செல்வன், அண்மையில் இணைந்த மதியழகன் என 42 பேர் விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் ராகுலே நேரடியாக கிருஷ்ணகிரியை கேட்டதால் காங்கிரசுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது.  இதில் கிருஷ்ணகிரி வேட்பாளராக விரும்பி டாக்டர் ஏ. செல்லகுமார், நடிகை குஷ்பு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் எல்.சுப்பிரமணியன் செல்லகுமாரையே ஆதரித்துள்ளார். தி.மு.க. நிர்வாகிகளுடனும் நெருங்கிய நட்பில் உள்ளார்.
 

anbumani


அ.தி.மு.க. முனுசாமி தனக்கான வேலையில் ஈடுபட தற்போதே களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. தரப்பில் 50 சி வரை களமிறக்கும் என்கிறது மேலிடத் தகவல். இன்னொருபுறம் கே.பி.முனுசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்  பாலகிருஷ்ணரெட்டி மேற்கு  மாவட்டத்திலும், கிழக்கு மாவட்டத்தில் பர்கூர் தம்பிதுரையின் விசுவாசியான பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரனும், சில பல வேலைகளில் உள்ளனராம். கிருஷ்ணகிரியில் முன்னாள் மா.செ.வான கோவிந்தராஜ் தன் பதவியை பறித்து அசோக்குமாருக்கு கொடுத்த கோபத்தில் முனுசாமிக்கு எதிராக உள்ள நிலையில் ஊத்தங்கரையில் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மத்தூரில் செயலாளர் ஹரிராமுலு ஆகியோரும் அதே பாணியில் இருப்பதால் எல்லோரையும் சரிக்கட்டும் பணி வேகமாக நடக்கிறது.  காங்கிரஸ், அ.தி.மு.க., அ.ம.மு.க. என மும்முனைப் போட்டியை சந்திக்கிறது கிருஷ்ணகிரி.

evks


 

எதிர்பார்ப்பிற்குரிய தர்மபுரி எம்.பி. தொகுதியில் சிட்டிங் எம்.பி. பா.ம.க. அன்புமணியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக டாக்டர் செந்தில் குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.  அ.ம.மு.க. முன்னாள் அமைச்சர் பழனியப்பனை நிறுத்துமானால் இங்கும் மும்முனை போட்டி நிலவும். தர்மபுரி வன்னியர் பெல்ட் என்பதால் அன்புமணிக்கு எதிராக அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே தி.மு.க.வும் அ.ம.மு.க. வும் நிறுத்தியுள்ளன. இதனால் நிச்சயம் பா.ம.க.வின் வாக்கு வங்கி பிரியும் என்கிறார்கள். 
 

kp.munusamy


 

பா.ம.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்திய காடுவெட்டி குருவின் குடும்பமும், பா.ம.க.வுக்கு எதிராக நிற்கும் வன்னியர்களுக்கு வாக்கு சேகரிக்க முனைப்பாக உள்ளது. அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்குமான அடிமட்ட நிலை ஒருங்கிணைப்பு குறைவாக உள்ள நிலையில், தி.மு.க. தரப்பிலும் கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது.தடங்கம் சுப்பிரமணியின் வேட்பாளர் சாய்ஸ் வழக்கறிஞர் மணி. ஆனால் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆதரவாளர்தான் தற்போது களமிறக்கப்பட்டுள்ள செந்தில்குமார். வன்னியர் சமூக வாக்கு 3 பிரிவாகச் செல்வதால் தொகுதியில் உள்ள தலித் மற்றும் பிற சமூகத்தினர் ஆதரவை தி.மு.க. எதிர்பார்க்கிறது. 

 

-அ.அருண்பாண்டியன்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.