ADVERTISEMENT

ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிப்பில் குளறுபடி; ஒப்பந்ததாரர் திணறல்! 

12:24 PM Nov 06, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு வகைகளை தயாரித்து, பேக்கிங் செய்வதற்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காததால், குறித்த காலத்திற்குள் இனிப்புகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு நேரடி பால் விற்பனை மட்டுமின்றி, நெய், பால் பவுடர், நறுமணப்பால் உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இனிப்பு, கார வகைகளை தயாரித்தும் விற்பனை செய்கிறது.

நடப்பு ஆண்டில், நவ. 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்பெஷல் மைசூர்பா, கேரட் மைசூர்பா, முந்திரி கேக், மில்க் கேக், லட்டு ஆகிய இனிப்பு வகைகளும், மிக்சர் வகைகளும் தயாரிக்க ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. இவற்றில் ஸ்பெஷல் மைசூர்பா மட்டும் அதிகபட்சமாக 24 டன் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்த அறிவிக்கை, பத்திரிக்கைளில் வெளிப்படையாக அறிவிக்காமல், ஆன்லைன் மூலம் வெளியிட்டு இருந்தது சேலம் ஆவின்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த பாலமணிகண்டன் என்பவர் இனிப்பு தயாரிப்புக்கான மாஸ்டர்கள், உதவியாளர்கள், பேக்கிங் பணிகளுக்கான ஆட்களை ஈடுபடுத்த கிலோவுக்கு 60 ரூபாய் விலைப்புள்ளி கோரியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டி என்பவருக்குச் சொந்தமான, சென்னையில் இயங்கி வரும் ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி என்ற நிறுவனம், கிலோவுக்கு 41 ரூபாய் விலைப்புள்ளி குறிப்பிட்டு இருந்தது.

குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரிய ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. மேலும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பில் இருந்தும் இந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கச் சொல்லி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஒப்பந்தம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனம், சேலம் ஆவினில் வந்து இறங்கிய போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது தெரிய வந்தது. இனிப்பு தயாரிப்புக்கான பாத்திர பண்டங்கள் போதிய அளவில் ஆவினில் கையிருப்பு உள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு வரை சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் ஒப்பந்த நிறுவனம் நேரில் வந்து பார்த்தபோது, பாத்திர வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், எதிர்பார்த்த அளவில் கூலி ஆட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படவே, அந்நிறுவனம் மேலும் குழப்பம் அடைந்தது.

இது தொடர்பாக ஆவின் வட்டாரத்தில் விசாரித்தோம், சேலம் ஆவினில், கடந்த 2022ம் ஆண்டு 50 டன் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்பட்டன என்றும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கடாய் உள்ளிட்ட அனைத்து வகை பாத்திரங்களும் ஆவின் வசம் உள்ளதாகவும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம் ஆவின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு உள்ளது.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 5 டன் குறைவாகத்தானே இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது என்பதால் ஆவின் வசம் உள்ள பாத்திரங்களே போதுமானது என ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சியும் நினைத்து, வெறுங்கையுடன் வந்துவிட்டது. இங்கு வந்து பார்த்தபோதுதான் ஆவின் வசம் பாத்திரங்களே இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் வேறு வழியின்றி, ஒப்பந்தம் எடுத்த நிறுவனமே 2.75 லட்சம் ரூபாய் வாடகைக்கு கடாய், கரண்டிகள், ராட்சத அண்டாக்கள் உள்ளிட்ட பாத்திர பண்டங்களை ஏற்பாடு செய்து கொண்டுவந்தது.

ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு தீபாவளி இனிப்புகள் தயாரிக்கும் பணிகளுக்கு கூலி ஆள்களை அனுப்பியதில் போதிய அனுபவம் இல்லாததால், சாத்தியமில்லாத அளவுக்கு குறைந்த விலைப்புள்ளியை குறிப்பிட்டு இருந்தது. கிலோவுக்கு 41 ரூபாய் விலைப்புள்ளி குறிப்பிட்டதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு 10 சதவீத லாபம்கூட கிடைக்காது. இதே நிறுவனம் ஈரோடு ஆவினில் 12 டன் இனிப்புகள் தயாரிக்க கிலோவுக்கு 49 ரூபாய் விலைப்புள்ளி கொடுத்து இருக்கிறது.

சேலம் ஆவினில் மிக மிகக் குறைந்த ஒப்பந்தப் புள்ளி குறிப்பிட்டுள்ளதால், எந்த வகையிலும் லாபம் கிடைக்காது என்பதை தாமதமாக தெரிந்து கொண்ட அந்த நிறுவனம், போதிய தொழிலாளர்களை அழைத்து வரவில்லை. நவ. 4ம் தேதி தான் சென்னை, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மாஸ்டர்கள், உதவியாளர்கள், பேக்கிங் தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை முழுவீச்சில் தொடங்கி உள்ளனர். உண்மையில், இந்த தொழிலாளர்கள் போதிய அளவில் இல்லை. சேலம் ஆவினில் உள்ள பெண் அதிகாரி ஒருவர்தான் ரமேஷ் கன்சல்டன்சி நிறுவனத்திடம் தவறான வாக்குறுதிகளை அளித்து குழப்பி விட்டுள்ளார் என்கிறார்கள்.

கடந்த காலங்களில் ஆவினில் தீபாவளி இனிப்பு தயாரிப்பில் ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவன இயக்குநர்கள் சிலரிடம் கேட்டோம். ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கும்போது ஒரு கடாய்க்கு ஒரு மாஸ்டர், ஒரு உதவியாளர் வீதம் 40 அடுப்புகளுக்கு 80 வேலை ஆள்கள் தேவை. பேக்கிங் செய்வதற்கு மட்டும் தனியாக 120 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இனிப்புகளை பேக்கிங் செய்யும்போது அதற்கான பிளாஸ்டிக் அல்லது அட்டைப் பெட்டிகளில் அடியில் ஒரு பேப்பர் வைக்க வேண்டும். அதன்மீது இனிப்புகளை அடுக்குதல், எடை போடுதல், பெட்டிகளுக்கு மூடி போடுதல், ஆவின் ஸ்டிக்கர் ஒட்டுதல், பெட்டியைச் சுற்றிலும் செல்லுலோஸ் டேப் மூலம் சுற்றுதல், விலை மற்றும் காலாவதி தேதி குறித்த ஸ்டிக்கர் ஒட்டுதல், பெட்டிகளை அடுக்கி வைத்தல் மற்றும் சரக்கேற்றி விடுதல் வரை 10 படிநிலைகள் உள்ளன. இவைதான் பெரிய வேலை.

ஒரு வாரத்தில் 45 டன் இனிப்புகள் தயாரிக்க குறைந்தபட்சம் 200 கூலி ஆட்கள் தேவை. நவ. 12ம் தேதி தீபாவளி என்றால், 9ம் தேதிக்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் நிர்ணயித்த இலக்கை அடைவது சிரமம்தான் என்கிறார்கள் முன்னாள் ஒப்பந்ததாரர்கள்.

இதுகுறித்து சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் குமரேசனிடம் கேட்டபோது, “நான் இங்கு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, தீபாவளி இனிப்புகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இருக்கும் ஆட்களை வைத்து இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தீபாவளியையொட்டி 3.70 கோடி ரூபாய்க்கு இனிப்பு பண்டங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை எட்டுவது சவாலானது என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT