ADVERTISEMENT

'அதிகாரிகளுடன் வாக்குவாதம்... குட்டையில் கூட தாமரை மலராது' - தருமபுரி எம்.பி தடாலடி பேட்டி!

11:31 AM Oct 01, 2019 | suthakar@nakkh…


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தருமபுரி திமுக எம்.பி மருத்துவர் செந்தில் குமார் சில தினங்களுக்கு முன் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது அதிகாரிகளுக்கும் அவருக்கும் நடைபெற்ற உரையாடல் வைரலானது. அதையும் தாண்டி மருத்துவர் ராமதாஸின் ட்விட்களுக்கு பதில் டுவிட் செய்தது என கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவரின் செயல்பாடுகள் அதிர்வை ஏற்படுத்தியது. இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளித்த அதிரடியான பதில்கள் வருமாறு,

சில நாட்களுக்கு முன்பு சாலை பணிகளை பார்வையிட சென்ற நீங்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆதரவை தந்தாலும், அந்த உரையாடல் மீடியாவின் பார்வையை பெறுவதற்காகத்தான் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எட்டுவழி சாலை வேண்டும் என்று நிதின் கட்காரியிடம் மனு கொடுத்துள்ளீர்கள், அது சர்ச்சை ஆகியுள்ளதை பற்றி?

கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி வழியாக தோப்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதனடிப்படையில் அங்கு ஆய்வு செய்ய உள்ளேன் என்று அதிகாரிகளுக்கு முறையாக தகவல் கொடுத்துவிட்டு ஆய்வு செய்ய சென்றேன். நான்கு ஆண்டுகளாக இந்த சாலை ஏன் இவ்வாறு இருக்கிறது, அதுதொடர்பாக புகார் வந்துள்ளதே, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று அதிகாரியிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவரால் முறையான பதிலை சொல்ல முடியவில்லை. ஒப்பந்ததாரர் எங்கே என்று கேட்ட போது அவர் ஏன் சும்மா வர வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். என்ன சார் நம்ம கண்ணெதிரே வாகன ஓட்டி ஒருவர் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்துவிட்டார். இன்னும் எத்தனை உயிரிழப்புக்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டான். இதற்கும் அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அவர் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசியதால்தான் நான் கோபமாக பேச வேண்டியதாயிற்று. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு முன்பை விட தற்போது அதிகம் உள்ளதால் எனக்கு அதிகாரியின் செயல்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தியது. அதையும் தாண்டி மீடியா வெளிச்சத்திற்காக நான் பேசியதாக கூறுவதெல்லாம் மிகவும் தவறான ஒன்று. அவ்வாறு எத்தனை நாட்களுக்கு செய்ய முடியும். நான் பொறுப்புள்ளவனாக இருக்க விரும்புகிறேன்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அதனை சிலர் தவறாக திரிக்க பார்க்கிறார்கள்.எட்டு வழிசாலையை நான் ஆதரிப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புகிறார்கள். திமுகவின் நிலைபாடு என்பது தெளிவாக இருக்கிறது. சாலையே இல்லாத இடத்தில் புதிதாக அதுவும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இருக்கும் இடங்களை அழித்துவிட்டு புதிய சாலைகளை அமைக்க இப்பவும் எதிர்ப்பு தெரிவித்துதான் வருகிறோம். நான் கொடுத்த மனுவை பத்திரிக்கைகள் சற்று மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் சாலைகளை விரிவுப்படுத்தவே நான் கோரிக்கை வைத்தேன். இதுவும் செய்தித்தாள்களில் உள்ளே படிக்கும்போது தெளிவாக இருக்கும். இது எதையும் அறிந்துகொள்ளாமல் பாஜகவினர் வதந்தி பரப்பியதால்தான் நான் அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இப்படியே செய்தி கொண்டிருந்தீர்கள் என்றால் தாமரை குட்டையில் கூட மலராது என்று தெரிவித்தேன்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களுடைய கருத்துக்கு மிகவும் காட்டமாக நீங்கள் டுவிட்டரில் பதில் அளித்துள்ளீர்களே?

நீட் தேர்வில் மோசடி செய்ததாக நான்கு மாணவர்கள் பிடிப்பட்டார்கள் என்ற செய்திக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் திமுக எம்பிகளை குறிக்கும் வகையில் இங்கு நான்கு பேர் எப்போது பிடிபட இருக்கிறார்களோ? என்ற தொனியில் அவர் விமர்சனம் வைத்தார். அதற்கு நான் சட்டமன்றத்தில் உறுப்பினர்களே இல்லாத நீங்கள் ராஜ்ய சபா போனது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தேன். அரசியல் ரீதியாக வைத்த விமர்சனம் தான் இது. அதையும் தாண்டி கடந்த மக்களவை தேர்தலிலேயே அன்புமணி அவர்களின் நாடாளுமன்ற செயல்பாடுகள் சரியில்லை என்பதை முன்வைத்தே நான் வெற்றிபெற்றேன். எனவே மக்களுக்காக கூடுதல் உத்வேகத்துடன் நான் என் வேலைகளை தொடரவே விரும்புகிறேன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT