ADVERTISEMENT

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 3

06:43 PM Jun 04, 2019 | kamalkumar

திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுகவுக்கும்!

இதெல்லாம் கட்சிக்குள் பெரும் புகைச்சலாகக் கிளம்பிய போது, அதை நாங்கள் நம்ப மறுத்தோம். ஆனால், கட்சி இன்று பெரும் தோல்வியை சந்தித்த பின்னும், நீங்கள் இருவரும் தொடர்ந்து அமைதி காட்டுகிறீர்களே? அதுதான், நடந்ததையெல்லாம் நிஜம் என்று எங்கள் முகத்தில் அறைகிறது. தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் கோடிகளைக் குவித்து, சிற்றரசர்களைப் போல் வலம் வந்தார்கள் என்று நாம்தானே அவர்களைக் குற்றம் சாட்டினோம்.

ADVERTISEMENT


அது மக்கள் மனதில் பதிந்து, அந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. அதனால், அந்த ஆட்சிக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் கொந்தளித்தனர். ஆனால், இன்று நடப்பது என்ன? தற்போதைய தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் பலரும், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறப் போகின்றனர் என்ற எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களைப் புறம்தள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட எவ்வளவு நேரம் பிடிக்கும்?

தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை!

ADVERTISEMENT

மிகமிக சாமான்யர்களாக இருந்துதான், தற்போதைய உயர்ந்த நிலையை எட்டியிருக்கும் நீங்கள் இருவரும், அ.தி.மு.க. என்னும் ஆலமரம், அழிவின் விளிம்பில் நிற்பதை அறிந்து, அதில் இருந்து காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது. தமிழகம் முழுவதும் கட்சி, மிகப் பெரிய தோல்வியை சந்தித்தபோதும், தேனியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். இது நமக்கான ஆறுதல் வெற்றி. ஆனால், அதே தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம். அது யாருடைய கவனக்குறைவு? அல்லது உள்ளடி வேலையா? இதைக் கண்டறிந்து களைய வேண்டாமா? கழகத்துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஏற்கனவே அவரது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் 2016-ல் தோல்வி அடைந்தார். தற்போது, அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் இருக்கும் தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், அவரது தீவிர ஆதரவாளரான காந்தியை நிறுத்தியும், கட்சிக்கு படு தோல்வி. இதற்கு யார் காரணம்? கண்டறிய வேண்டாமா?


திருவாரூர் திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர். அந்த ஊரில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் வென்றார். அவரது மறைவுக்குப் பின் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட பூண்டி கலைவாணன், கருணாநிதியைக் காட்டிலும் கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அப்படியென்றால், திருவாரூரில் நடந்தது என்ன? யோசிக்க வேண்டாமா? தோல்விக்கு யார் மீது நடவடிக்கை? அந்த மாவட்ட அமைச்சர் ஆர்.காமராஜ் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? அ.தி.மு.க., 1973-ல், முதன் முதலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வென்ற தொகுதி - திண்டுக்கல் லோக்சபா தொகுதி. அதனாலேயே, திண்டுக்கல்லை, புண்ணிய பூமியாக அ.தி.மு.க.,வின் ஒவ்வொரு தொண்டனும் நினைக்கிறான். ஆனால், அங்கே கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டவர் படு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் வேலுச்சாமி, ஐந்தே கால் லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் ஓட்டு வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதற்குக் காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு இடையே நடக்கும் பனிப்போர்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்களுக்கு எதிராக எப்போது சாட்டையைச் சுழற்றுவீர்கள்? திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர் முனியாண்டி, கட்சியின் அடிமட்டத் தொண்டர். அவர், அங்கே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால், அங்கே ராஜன் செல்லப்பா, அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடையே நடந்த கருத்து மோதலால், கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. அதேபோல், சென்னை பெரம்பூரில் தோல்வி. காரணம், அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளின் மிகமோசமான தோல்விக்கு காரணம் அமைச்சர்கள் கே.சி.வீரமணியும் நிலோபர்கபீலும்தான். இங்கும் கோஷ்டிப் பூசலாலேயே கட்சிக்கு தோல்வி. காரணமான இவர்கள் மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன?

அதிமுகவை விட்டு விலகிச்சென்ற வாக்கு வங்கி!

கட்சியில், ஜாதி-மதம் என்று பார்க்காமல், அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா. ஆனால், சசிகலாவின் ஆதிக்கம் அதிகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். இருந்தாலும், அவர்களையெல்லாம் ஓரளவுக்கு அடக்கியே வைத்திருந்தார் ஜெயலலிதா.


சசிகலா கும்பல் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்த தலித் ஓட்டு வங்கி, முழுமையாக நம்மை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த நிஜத்தை அறிந்த பிறகாவது, தலித் ஓட்டுக்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்தத் தேர்தலில், சசிகலா ஆதரவு நிலை எடுத்தவர்கள் மட்டுமே, அக்கும்பல் நடத்தும் கட்சியைத் தாங்கிப் பிடித்தனர். சசிகலா ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி போன்ற தொகுதிகளில் மட்டும், அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை பெற்றனர். மற்ற தொகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெறவில்லை. இது நமக்கான ஆறுதல்.

ஆனால், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள், முழுமையாக தினகரன் பக்கம் நிற்பார்களேயானால், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு, நம் அமைச்சரவையில் ஏன் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்?, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எட்டு அமைச்சர்கள் வரையில் கொடுத்திருப்பது ஏன்? இனியாவது, அந்த நிலையை மாற்ற வேண்டாமா? இப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலர்தான், தேர்தல் நேரத்தில், அ.ம.மு.க.,வுக்கு, மறைமுகமாக நிதி அளித்ததோடு, தேர்தல் வேலையும் பார்த்தனர் என்பதை, இன்னுமா உளவுத்துறையினர் உங்களுக்குச் சொல்லவில்லை? எம்.ஜி.ஆர்., காலம் முதற்கொண்டு, இன்று வரையிலும், பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வருபவர் தம்பிதுரை. அவராலேயே, கொங்கு பகுதியில் பெரிய அளவிலான தோல்வி கிடைத்திருக்கிறது. அவரால் கட்சிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அவரே நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இனியும் ஏன் அவரைப் போன்றோருக்கு ஓய்வளிக்கக் கூடாது.

முகம் சுளிக்க வைக்கும் தலைவர்கள்!

விரைவில் ராஜ்யசபாவுக்கான தேர்தல் வரவிருக்கிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் தகுதியான நபர்களாகப் பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதைவிடுத்து, பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றால், கட்சிக்கு தோல்வி என்பது நிரந்தரமாகிவிடும். கட்சி, படு பாதாளத்தில் இருக்கும் இந்த நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சியும் யாராலும் எடுக்கப்படவில்லை. ஆனால், இன்னாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று, டில்லிக்கு ஆளாளுக்கு காவடி எடுப்பது தொண்டர்களாகிய எங்களை முகம் சுளிக்க வைக்கிறது.


பதவிகள் வரும்; போகும். ஆனால், கட்சி என்னும் ஆலமரம் இருந்தால்தான், எதுவுமே நடக்கும். முதல்வர் மற்றும் துணை முதல்வராக இருக்கும் உங்கள் இருவர் குறித்தும், நீங்கள் நல்லவர்களா? கெட்டிக்காரர்களா? என்று கட்சித் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வேறு வழியில்லை. நீங்கள் இருவரும்தான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, கட்சியைத் தூக்கி நிறுத்தும் காரியங்களில் இறங்க வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மரணங்கள், சேலம் எட்டுவழிச்சாலை திட்டம், மீத்தேன், நீட் போன்ற விஷயங்களில் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டதன் விளைவே, இந்தத் தோல்வி. இந்தத் தேர்தலில், கமல் கட்சி குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அடுத்து ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார். எதையும் கணித்துச் சொல்லிவிட முடியாது.

அரசியலில் அடுத்து என்ன சுனாமி வருமோ? அப்படி வந்துவிட்டால், அதிமுக என்னும் ஓட்டைப் படகு மூழ்கடிக்கப்பட்டு, இருந்த சுவடே தெரியாமல் போய்விடும். என்ன நடக்கப் போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றாலும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை, உண்மையான தொண்டர்களில் ஒருவனாக, கடைக் கோடியில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.” என்று நீண்ட பெருமூச்சுவிட்டார். அதிமுக என்னும் ஆலமரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிடக் கூடாது என்ற கவலை இவரைப் போன்ற தொண்டர்களை ரொம்பவே வாட்டி வதைக்கிறது.

முந்தைய பகுதி:


ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 2

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT