Skip to main content

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி?;டெல்லி செல்லும் அண்ணாமலை

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

OPS, TTV in BJP alliance?; Annamalai to Delhi?

 

அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

 

இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் வரவேற்று கொண்டாடினர். அதேபோல பாஜக தரப்பிலும் தொண்டர்கள் வரவேற்று இருந்தனர். அதிமுக மற்றும் பாஜக தலைமைகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பேச்சும் எழுந்தது.

 

OPS, TTV in BJP alliance?; Annamalai to Delhi?

 

இருதரப்பு தலைமைகளும் கூட்டணி முறிவுக்கு பிறகு அது குறித்து வாய் திறக்காத நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ''தொண்டர்களின் உணர்வை மதித்தே கூட்டணி முறிக்கப்பட்டது. இந்த தேர்தல் மட்டுமல்லாது 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி இருக்காது'' என தெளிவுபடுத்தி இருந்தார்.

 

மறுபுறம் பாஜக தலைமை கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை எங்களுக்கு வேண்டிய அறிவுறுத்தல்களை கொடுக்கும் என்றே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவையில் இருக்கும் அண்ணாமலை இன்று மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு டெல்லியில் தேசியத் தலைமைகளை சந்திக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் இந்த பயணமானது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

OPS, TTV in BJP alliance?; Annamalai to Delhi?

 

கூட்டணி முறிவு பற்றிய தன்னுடைய கருத்தை எடுத்துரைப்பதற்காகவும், புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் பேசவும் இந்த பயணம் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அமமுகவின் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டடோரை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கப்படலாம் என்ற ஒரு யூகமும் கிளம்பியுள்ளது. காரணம்,  அண்ணாமலை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என பேசியதுதான் முறிவுக்கு காரணமே தவிர, அதிமுக தலைவர்களை விமர்சித்தது காரணமல்ல என அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.