ADVERTISEMENT

"தோனிக்கா ஓட்டுப் போட்டீங்க?" - கிரிக்கெட் ரசிகர் கேள்வி!

06:20 PM Apr 10, 2018 | vasanthbalakrishnan

சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் உள்ள சேப்பாக்கம் பகுதியிலும் அதை சுற்றி அண்ணா சாலை, வாலாஜா சாலை பகுதிகள் போர்க்களமாக மாறியிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையேயான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு நெருப்பாகப் பரவி போராட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். நான்காயிரம் காவலர்கள் என்று போலீஸ் சொன்னாலும் அதை விட அதிக எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது. கடும் சோதனைக்குப் பிறகு ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT



இப்படி தமிழகம் கொதித்திருக்கும்பொழுது, கிரிக்கெட் பார்ப்பது நியாயமா என்று மைதானத்துக்குள்ளே சென்ற சில ரசிகர்களைக் கேட்டோம்.

சுரேஷ் என்னும் கல்லூரி மாணவர், "நான் ஒன்னு கேக்குறேன். நீங்க எல்லாம் தோனிக்கா ஓட்டு போட்டீங்க? ஜெயலலிதாவுக்கு தான போட்டீங்க? எடப்பாடி பழனிச்சாமி தான சி.எம்? அவரு வீட்டு முன்னாடிதான போராடணும்? காவிரி நீர் தேவைதான். நாங்களும் தமிழர்கள் தான். ஆனா, எம்.எல்.ஏ, எம்.பி வீட்டு முன்னாடி போய் போராடாம கிரிக்கெட் ஸ்டேடியத்துல எதுக்கு போராடுறீங்க? சில அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக செய்ற வேலை இது" என்றார்.

ADVERTISEMENT



விவேக் என்ற ஐ.டி ஊழியர், "நான் இன்னைக்கு கிரிக்கெட் பாத்துட்டு நாளைக்கு காவிரிக்காக போராடுவேன். இது மூணு மணி நேர விளையாட்டு. இதை பாக்குறனால தான் காவிரி வரலையா? எத்தனையோ வருஷமா இந்தப் பிரச்சனை இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டை நிறுத்தி இதை சரி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.

ராமநாதன் என்ற முதியவரும் மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்து குதூகலமாக உள்ளே சென்று கொண்டிருந்த போது நிறுத்திக் கேட்டோம். "இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. காவிரிக்காக கிரிக்கெட்டை தவிர்க்க முடியாதா?" என்றோம். "தம்பீ, நான் 1974ல இருந்து கிரிக்கெட் பாக்குறேன். இந்தியா வேர்ல்டு கப் வாங்குனப்பவெல்லாம் கொண்டாடினேன். இந்த அரசியல்வாதிங்க உருவாக்குன பிரச்சனை காவிரி பிரச்சனை. அவுங்களுக்காக என் விருப்பத்தை நான் விட முடியாது. நான் இன்னைக்கு கிரிக்கெட் பாக்காட்டி இவுங்க காவிரி பிரச்சனையை தீர்த்துருவங்களா? வேலைக்காகாத அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துட்டு கிரிக்கெட்டை எதிர்த்து என்ன பயன்?" என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஐ.பி.எல்லை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரை ஆவேசமாக சூழ்ந்தனர். "உனக்கும் சேர்த்துதானய்யா நாங்க போராடுறோம்? தண்ணீ இல்லைனா எதைக் குடிப்ப?" என்று கேட்டுக்கொண்டே அவரை சூழ்ந்தனர்.


போராடியவர்கள் கேட்பது நியாயம் தான். போராட்ட மனநிலையை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும், சினிமாவும் கிரிக்கெட்டும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது உண்டு. கையாலாகாத அரசுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை. வாழ்வாதாரப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும்பொழுது கேளிக்கையை தள்ளி வைக்கலாம் தான். உலகம் கவனிக்கும் ஒரு போட்டியை புறக்கணிப்பதன் மூலம் நம் எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் விடை தெரியும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT