Skip to main content

சென்னை மைதானம் குறித்து மனம் திறந்த மைக் ஹஸ்ஸி!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Michael Hussey

 

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டுள்ளது. சென்னை அணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி சென்னையில் விளையாடிய போட்டிகள் மற்றும் சென்னை மைதானம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 

அதில் அவர், "சென்னை மைதானம் நமது மிகப்பெரிய பலம். கடந்த காலங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். புது சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம். இதற்கு முன்பு சென்னையில் இருந்து வெளியே சென்று புனேவில் விளையாடினோம். அந்த சூழலுக்கு ஏற்ப நமது வீரர்கள் மாறிக் கொண்டனர். நம்மிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். எந்த சூழலில் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நம்மால் தரமான ஆட்டத்தை வரும் போட்டிகளில் வெளிப்படுத்த முடியும்" எனக் கூறினார்.

 

 

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்; பதிலடி தந்த சி.எஸ்.கே!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
csk vs srh csk beats sun risers hyderabad

ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.

சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.