ADVERTISEMENT

‘தமிழர்கள் முட்டாள்கள் அல்ல!’ - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த ஜோதிமணி!  

03:49 PM Feb 15, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை (2021 - 2022) மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஐந்து நிமிடம் பேச அனுமதி கேட்டார். அப்போது அவையை நடத்திய பாஜகவின் மீனாட்சி லேகி, எல்லோருக்கும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் மூன்று நிமிடங்கள் தருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து தனது நான்கு நிமிட உரையால் அவையைத் தெறிக்கவிட்டார் ஜோதிமணி.

“ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம், தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது தன் கடைக்கண் பார்வையைத் தமிழகத்தின் பக்கம் திருப்பும் என நினைத்தோம். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்ததெல்லாம் ஒரே ஒரு திருக்குறள் மட்டும்தான். ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை வசதி செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் மதுரையில் ஒரே ஒரு செங்கல்லை நட்டுவிட்டு, அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இதுவரை கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுபோல்தான் இதுவும். இதையெல்லாம் நம்புவதற்குத் தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. இதுவரை சொன்ன எதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள், உங்களை நாங்கள் நம்புவதற்கு.

ஒரு வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? பெண்களை அதிகாரப்படுத்துவோம், பாதுகாப்போம் என்று முழங்கினீர்கள். செய்தீர்களா? அதற்குப் பதிலாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். 45 ஆண்டு காலம் இல்லாத வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் இளம்பெண்களும், இளைஞர்களும் படித்துவிட்டு இருண்டு கிடக்கும் எதிர்காலத்தைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் என்ன கொடுத்திருக்கிறீர்கள்.

விவசாயிகள், இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்காக உழைத்து, கடன்பட்டு, கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உங்களுக்கு மனம் இல்லை. அதற்குப் பதிலாக கருப்புச் சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள். அவர்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி வகையறாக்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியை வரிச்சலுகையாகக் கொட்டிக்கொடுக்கிறீர்கள்.

ஒரு பெண், அதுவும் தமிழர், நிதியமைச்சராக இருக்கிறார் என்று தமிழச்சியாக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களை அதிகாரப்படுத்தவோ, பாதுகாக்கவோ என்ன செய்திருக்கிறீர்கள்? பெண்களுக்கும், வேலைவாய்ப்பிற்கும் ஏதேனும் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறீர்களா? நொடிக்கு நொடி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க, நீதி வழங்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்களா? பெண் தொழில்முனைவோருக்கு கடன் வழங்க பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி என்று காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அந்த வங்கியைக் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை. எந்த வங்கியைத்தான் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி, கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சாதனையை மோடி அரசு நடத்திக் காட்டியிருக்கிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விரைவில் 1000 ரூபாயைத் தொட்டுவிடும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கும்போது, விலையைக் குறைக்காமல் வரி என்ற பெயரில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள்? பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்கிறீர்கள். எங்கே போனது அந்தப் பணம்?

கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, விவசாயத்திற்கோ, ராணுவத்திற்கோ நிதிகள் அதிகரிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில்கூட மக்களுக்குக் கொடுக்க உங்களுக்கு மனசு இல்லை. கொரோனா பெருந்தொற்றின்போது மக்கள் வறுமையிலும் பசியிலும் வாடினார்கள்; குழந்தைகள் பட்டினி கிடந்தன; தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள்; ஏழைகளின் வயிற்றிலும் இதயத்திலும் நெருப்பு எரிந்தது. என்ன செய்தீர்கள் நீங்கள்? குடும்பத்திற்கு 500 ரூபாய் கொடுத்ததைப் பிரதமர் பெருமையோடு சுட்டிக்காட்டுகிறார். அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுக்கிறோம். அதை வைத்து நீங்கள் ஆறு மாதம் வாழ்ந்து காட்டுவீர்களா? சொல்லுங்கள். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? உங்கள் ஆருயிர் நண்பர்கள் அதானி, அம்பானி வீடுகளுக்கா?

தமிழக அரசின் கடன் சுமை 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. இது உங்களுக்குக் கைக் கட்டி சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை. இந்தச் சுமையைக் குறைக்க என்ன செய்வீர்கள்? எங்கள் உழைப்பிலும் வியர்வையிலும் உருவான ஜிஎஸ்டி வரியில் கூட தமிழ்நாட்டிற்கு உரிய பங்கான 15,475 கோடி ரூபாயை இன்றுவரை தர மறுக்கிறீர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு அடிபணிந்து கிடக்கிறார். தமிழகத்தை உங்களுக்கு அடிமையாக்கத் துடிக்கிறார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டார்கள். உங்களோடு சேர்ந்து அதிமுக அரசும் அரியணையில் இருந்து அகற்றப்படும். அதிமுக அரசு உங்களுக்கு அஞ்சி நடுங்கலாம். தமிழகத்தின் உரிமைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் உரத்தக் குரலில் ஒலிப்போம்.

நிதியமைச்சர் ஒரு குறளை மேற்கோள் காட்டினார்கள். அதற்கு முந்தைய குறளை நான் அவர்களுக்கு மேற்கொள் காட்ட விரும்புகிறேன். ‘அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு’ அறம் வழுவாதீர்கள். அண்டை நாட்டைக் கண்டு அச்சப்படாதீர்கள். சீனா என்ற சொல்லை உச்சரிக்கப் பயப்படாதீர்கள்'' என அவையை தெறிக்க விட்டார். ஜோதிமணி பேசும்போது அவையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவரது பேச்சை உற்று கவனித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது உரையை பாராட்டினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT