publive-image

Advertisment

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இன்று (18/08/2021) வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனைச் சந்தித்து வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வள்ளிமலை, ஆர். கோம்பை வனப்பகுதிகளை காப்பு காடுகளாக (Reserve forest) அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த இரண்டு வனப் பகுதிகளையும் காப்பாற்ற மக்களைத் திரட்டி ஓராண்டு காலமாகப் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக வனப்பகுதிகளை அழிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.

இந்தப் பிரச்சனையைப் பொறுமையாக முழுக்கப் படித்து புரிந்துக் கொண்ட அமைச்சர் மிக நிச்சயமாக காப்பு காடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இத்துடன் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மருங்காபுரி வட்டாரத்தில் கண்ணூத்து, எண்டபுளி, முத்தாழ்வார்பட்டி, உசிலம்பட்டி, செவல்பட்டி, பிடாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காட்டு மாடுகள் வயலுக்குள் புகுந்து வெள்ளாமையை அழித்து வருகின்றன.

Advertisment

வனப்பகுதிக்குள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மாடுகள் வயல் வெளிக்குள் வருகின்றன. இதைத் தடுக்க வனப்பகுதிக்குள் குளங்கள் அமைக்கவும் வனப் பகுதியைச் சுற்றி சோலார் வேலி அமைக்கவும் கேட்டுக் கொண்டேன். மேலும் மருங்காபுரி வட்டாரத்தில் ஊராட்சிகளில் வனப்பகுதியில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அனைத்தையும் விரைவில் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்கள். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.