ADVERTISEMENT

“வெற்றிமாறன் என்னை சந்தித்து சில தகவல் பெற்றிருக்கலாம்” - ‘விடுதலை’ திரைப்பட வாத்தியார் மகன் சோழன் நம்பியார் !

11:38 AM Apr 06, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'விடுதலை' படத்தில் அதிகம் கவனிக்க வைத்தது விஜய் சேதுபதி ஏற்று நடித்த பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரம். இந்த கேரக்டர் அதிக கவனம் பெற்றதற்குக் காரணம் இது கலியபெருமாள் என்கிற உண்மைக் கதாபாத்திரத்தைத் தழுவி உருவான ஒன்று என்பதுதான். தமிழ்த் தேசிய போராளி கலியபெருமாள் அவர்களுடைய மகன் சோழன் நம்பியார் இந்தப் படம் குறித்தும் அவருடைய தந்தை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

என்னுடைய தந்தை கலியபெருமாளை வாத்தியார் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதையும் தாண்டி பொதுத் தொண்டில் அதிகம் ஈடுபட்டவர் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். சில உண்மைச் சம்பவங்களை விடுதலை படத்தில் வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு நேரடியாகப் புரியாவிட்டாலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு படத்தில் காட்டப்படும் பல விஷயங்களின் பின்னணி புரியும். 1950 காலகட்டங்களில் என் தந்தை பொன்பரப்பியில் ஆசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் அவர் பெரியாரிய இயக்கங்களில் இருந்தார். ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்ததால் பெரியாரிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றினார். வர்க்க விடுதலையின் மீதும் ஆர்வம் கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பயணித்தார்.

மக்கள் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகளையும் என்னுடைய தந்தையிடம் எடுத்து வருவார்கள். அவரும் அதைத் தீர்த்து வைப்பார். நாங்கள் ஐந்து பேர் சகோதர, சகோதரிகள். எங்கள் தந்தை ஒரு விவசாயியாகவும் இருந்தார். சமூகத்துக்காகப் போராடினாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எங்கள் தந்தையின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக காவல்துறை மூலமாக ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய பிறகு பல்வேறு பிரச்சனைகள் வந்தன. பாதுகாப்புக்காக வெடிகுண்டு செய்தபோது அது வெடித்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து கடுமையான ஒடுக்குமுறைகள் வந்தன. யாரும் புகாரளிக்க முன்வராத நிலையில், ஒருவரை வற்புறுத்தி புகார் கொடுக்க வைத்தனர். அதில் எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் சிறை சென்றோம். தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டோம்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டோம். அப்போதுதான் தந்தையை மீண்டும் பார்த்தோம். நாங்கள் பிறக்கும் போதே கம்யூனிஸ்டுகளாகப் பிறந்தோம். பொதுவுடைமைச் சிந்தனை எங்களுக்குள் ஊறியிருந்தது. போராளிகள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு குறித்து தொடர்ந்து படித்து வந்தோம். அதனால் எங்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தபோது இயல்பாக ஏற்றுக்கொண்டோம். விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய போராட்டங்களின் போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். என் தந்தை குறித்து நான் எழுதிய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார். திரைத்துறையினரோடும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியை சூரி கைது செய்யப் போகும் காட்சியில் மக்கள் விஜய் சேதுபதிக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு மக்கள் செல்வாக்கினால் என் தந்தைக்கு இருந்தது.

அப்பாவுடைய வாழ்க்கையோடு ஓரளவு ஒத்துப்போகும் அளவுக்கு இந்தப் படம் இருந்தது. கமல் நடித்த நாயகன் படமும் அப்பாவின் வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்தும். என் தந்தை ஒரு வெகுஜனப் போராளி. விடுதலை படம் விறுவிறுப்பாகவும், தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்தது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடித்துத் துன்புறுத்துவது தொடர்ந்து நிகழ்ந்தது. சிறைக் கைதிகளுக்கு சரியான உணவு வழங்குவது போன்ற பிரச்சனைகளுக்காக சிறையிலும் என் தந்தை போராடி காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பெரிய ஆளுமையாகவே இருந்தார். அவர் மீது இருந்த மரியாதையால் அவர் பெரிதாகத் தாக்கப்பட்டதில்லை. ஆனால் மற்றவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அப்போது இந்திரா காந்தியும் ஆதரவு கொடுத்தார். போராளிகளுக்கு முகாம் அமைத்து அரசாங்கத்தின் சார்பிலேயே பயிற்சியும் வழங்கப்பட்டது. அடுத்து வந்த ராஜீவ் காந்தி ஒரு தனி மாநிலம் பெற்றுத்தர முயற்சி செய்தார். ஆனால் அதைப் போராளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்திய அரசின் அமைதிப்படை தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் ஒடுக்கியது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் ரயில் விபத்து சம்பவம் நடத்தப்பட்டது. என் தந்தைக்குப் பிறகு கட்சியைக் கட்டி எழுப்பிய தமிழரசன் தான் அந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தினார். பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை எதையும் செய்யக்கூடாது என்று என் தந்தை அறிவுறுத்தினார். வங்கிக் கொள்ளையிலும் ரயில் விபத்திலும் என் தந்தைக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கலைஞர், எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் என் தந்தையின் பெரும்பாலான செயல்பாடுகள் இருந்தன. அனைத்து ஆட்சிகளிலுமே ஒடுக்குமுறைகளும் இருந்தன. விடுதலை படத்தில் என் தந்தையின் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 5 செண்ட் நிலம் வழங்கப்பட்டது.

அறுவடை இயக்கம், சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் என்று எண்ணிலடங்கா வெகுஜனப் போராட்டங்களில் என் தந்தை ஈடுபட்டிருக்கிறார். விடுதலை படத்தின் இயக்குநர் என்னை சந்தித்து சில தகவல்களைப் பெற்றிருந்தால் படத்தை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்கிற வருத்தம் இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் நல்ல முறையிலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். என் தந்தையின் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி ஒரு சிறந்த தேர்வு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT