
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகம் இன்று (31.03.2023) வெளியாகியுள்ளது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே வழங்கி வருகிறார்கள். மேலும் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைப்படம் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கதாநாயகியாக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷின் தங்கை மிக நன்றாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகனை வேறொரு தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்றால் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அசாத்திய திமிர்த்தனம் தான். சூரியை இதற்கு முன் பார்த்த நகைச்சுவை நடிகனாக பார்க்கவே முடியாது. அப்படி நடித்துள்ளார். அவ்வளவு காயம்பட்டுள்ளார்.
படம் பார்த்த யாரும் எதுவும் பேச முடியாது. அமைதியாக தான் கடந்து போக வேண்டும். வெற்றிமாறனை நம்ப முடியாது. வடசென்னை இரண்டாம் பாகம் வரும் என்று சொல்லிவிட்டு அடுத்த படங்களை எடுக்கச் சென்றுவிட்டார். ஆனால், விடுதலை இரண்டாம் பாகத்தை குறித்த காட்சிகளை இதில் சேர்த்துள்ளார். இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு தான் இப்பொழுது உள்ளது. சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் பாராட்டுகள். அனைத்திற்கும் மேல் இளையராஜா. வெற்றிமாறன் சதை, எலும்பு என அனைத்தையும் வைத்தால் இளையராஜா உயிர் கொடுத்துள்ளார்” எனக் கூறினார்.