ADVERTISEMENT

மொபைல் முதல் மருந்துகள் வரை சீனாவின் ஊடுருவல்; மேட் இன் இந்தியா உண்மையா?

07:55 PM Dec 23, 2022 | kalaimohan

- தெ.சு.கவுதமன்

ADVERTISEMENT


பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் கைக்கடிகாரத்தை தேசபக்தியின் அடையாளமாகக் கட்டியிருப்பதாக அண்ணாமலை கூறியது சர்ச்சையானது. அப்படியானால் இந்தியத் தயாரிப்பு கைக்கடிகாரங்களைக் கட்டியிருப்பது தேச விரோதமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்., இன்னொரு புறம், இந்தியத் தயாரிப்புகள் என்று நாம் சொல்வதிலேயே முழுக்க உண்மையாக இல்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ஆம். இந்தியாவில் தயாராகும் பெரும்பாலான மருந்துப் பொருட்களில், எலக்ட்ரானிக் பொருட்களில், எலக்ட்ரிக்கல் பொருட்களில், ஆட்டோமொபைல், பிளாஸ்டிக் பொருட்களில் சீன உதிரிப்பாகங்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. ஆக, எந்தப் பொருளையும் சுத்தமான இந்தியத் தயாரிப்பு என்று சொல்ல முடியாது. அதேபோல் சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் என்ற பிரச்சாரமும் கூட அவ்வளவு சரியானதாக இருக்காது. இதுகுறித்த உண்மையைப் புரிந்துகொள்ள சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

இந்தியத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு, மலிவான சீனப் பொருட்களின் இறக்குமதியே முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு 29% அதிகரித்து, கடந்த 2021-22 நிதியாண்டில், 100 பில்லியன் டாலர் என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளது. இதுவே, கடந்த 2021ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இறக்குமதியின் அளவு 87 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதேவேளை, இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவீடு மிகவும் குறைந்திருப்பதால், கடந்த 2021ஆம் ஆண்டில் நமக்கு 65 பில்லியன் டாலர் இழப்பாகும்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் சாதனை அளவாக, நடப்பு 2022ஆம் ஆண்டில், முதல் 9 மாதங்களில், 90 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நாம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். இதுவே 2021ஆம் ஆண்டில், முதல் 9 மாதங்களில் சீனாவிலிருந்து நம்முடைய இறக்குமதி அளவு 68 பில்லியன் டாலர்களாகும்.

இந்த இறக்குமதி விவரங்களை துறைவாரியாகப் பார்த்தோமானால், இந்திய மருத்துவத்துறை தான் சீனாவைச் சார்ந்திருப்பதில் முதலிடம் வகிக்கிறது. இந்திய மருந்துக் கம்பெனிகள், தங்கள் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களில் 68% சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றன. உலகளவில் தடுப்பூசிகளை பெருமளவு ஏற்றுமதி செய்யும் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு, சீன மூலப்பொருட்களே அச்சாணியாக உள்ளன.

இதற்கடுத்தபடியாக எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் தயாரிப்புகளில் 30% அளவுக்கு சீனத் தயாரிப்புகளையே நம்பியிருக்கிறோம். எலட்ரானிக்ஸ் பொருட்களில், குறிப்பாக மொபைல் போன் உதிரி பாகங்களில் 90 சதவீதம் அளவுக்கு சீனப்பொருட்களே இடம்பிடித்திருக்கின்றன. பொம்மைகள் இறக்குமதியில் 70 சதவீதத்தை சீன பொம்மைகளே இடம்பிடித்துள்ளன. இயந்திரங்கள் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 38 சதவீதமாக உள்ளது. சீனாவிலிருந்து வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியில் கடந்த ஆண்டைவிட தற்போது 35% அதிகரித்துள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களின்படி பார்த்தோமானால், நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் சீனாவின் உதிரி பாகங்களின் பங்களிப்பு இருப்பதை உணரலாம். குறைந்த விலையில் அதிக அளவில் உற்பத்தியாகி, இறக்குமதியாகிக் கிடைப்பதே சீனப் பொருட்களின் ஆதிக்கத்துக்கு முக்கியக் காரணமாகும். நாளுக்கு நாள் சீன இறக்குமதி அதிகரித்து வரும் சூழலில், தேச பக்தியை மேட் இன் இந்தியா என்பதில் அளவிடுவது அவ்வளவாக சரி வராது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT