ADVERTISEMENT

சி.சி.டி.வி. தரத்தால் தப்பிக்கும் குற்றவாளிகள்!

05:35 PM Jan 29, 2019 | Anonymous (not verified)

குற்றங்களைப் போலவே அவற்றைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராக்களும் பெருகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் அவை பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு தண்டிக்க முடிகிறது. இதனால், பொதுமக்களுக்கும் இவற்றின்மீது நம்பிக்கை கூடியிருக்கிறது. ஆனால், அதன் தரம்குறித்த எந்தவித சந்தேகத்தையும் எழுப்பாமலேயே, வைக்கும் நம்பகத்தன்மை ஏமாற்றத்தையே அளிக்கும் என்ற எச்சரிக்கையை முன்வைக்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதுகுறித்து குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கான நிறுவனம் நடத்திவரும் குற்றவியல் நிபுணர் ராஜீவ் ஸ்டீபன், "ஒரு உடலில் எந்த இடத்தில் எந்த தரத்தில் கண் இருந்தால் பலன் கிடைக்குமோ, அதே போலத்தான் சி.சி.டி.வி. கேமராக்களும்! அவற்றை வாங்கிப் பொருத்தி விட்டால் போதுமென்று நினைக்கும் பலர், அதன் விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அதுதான், அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபத்தைத் தருகிறது. நானும் இந்தத் தொழிலில் இருப்பதால் சொல்கிறேன்…


பொதுவாக இந்தியாவிற்கு சீனாவில் இருந்துதான் சி.சி.டி.வி. கேமராக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இந்திய மின்முறைக்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த கேமராக்களை ரூ.50 முதல் ரூ.2,500 வரை விலைகொடுத்து வாங்கி, ரூ.1,200 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். தோராயமாக ஒரு கேமராவில் 30 பாகங்கள் இருக்கும். ஒவ்வொன்றையும் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த பாகங்களில் ஏற்படும் குளறுபடிகளால் ஒதுக்கப்பட்ட தரமற்ற கேமராக்கள்தான் இந்தியாவில் இறக்குமதி ஆகின்றன. அதனால், அவற்றின் ஆயுட்காலமும் சொல்லும்படியாக இல்லை. அதோடு கேமராவின் போர்டு மற்றும் மேலுறை தவிர மற்ற அனைத்துமே இலவசமாக அல்லது சொற்ப விலைகொடுத்து கூடுதலான எண்ணிக்கையில் வாங்கப்படுகின்றன. ஒருவேளை வாடிக்கையாளரின் கேமரா பழுதாகிவிட்டால் அதில் இந்த


பாகங்களை பொருத்தி, அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். இதுதான் ரொம்ப நாளாக நடக்கிறது. அரசும் இந்த முறைகேடுகளைக் கண்டுகொள்வதில்லை. குப்பைகளைக் கொட்டும் சந்தையாகவே இந்தியா இருக்கிறது. வெறும் கேமராவை மட்டும் வாங்கி வைத்துவிட்டு, அது பலனளிக்கும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையான விஷயம்''’என்றார்.


தமிழக காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தக்கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்து, அது நடைமுறைக்கு வரக்காரணமாக இருந்த பாடம் நாராயணன் நம்மிடம், "மேலைநாடுகளில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்ப தணிக்கை மூலம், ஒரு திட்டத்தின் வாழ்நாள் பலன்கள் மதிப்பிடப்படுகின்றன. நம் அரசுத்துறைகளில் தொழில்நுட்பப் பிரிவுகள் இருப்பதில்லை. இருந்தாலும், அதற்கான வல்லுநர்களை நியமிப்பதில்லை. சமீபத்தில்கூட சாலைப் பாதுகாப்புக்காக பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டதாகச் சொன்னார்கள். அவற்றில் தரமானவை எத்தனை என்பது யாருக்குத் தெரியும்? டெண்டர் விட்டு வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்பாகத்தான் இதைப் பயன்படுத்துகின்றனர். எனவே, கொள்முதல் செய்யப்படும் கேமராக்களின் தரத்தை உறுதிசெய்வதற்கான ஆய்வுக்கூடங்கள் இங்கு இருக்கவேண்டும்'' என்றார் அழுத்தமாக.


சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சி.சி.டி.வி. கேமராக்களின் உதவியால் குற்றச்சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அவற்றைப் பொருத்துமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளிக்கும் ஒரு சி.சி.டி.வி. கேமரா வீதம் 2019ஆம் ஆண்டுக்குள் சென்னையில் மட்டும் 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என அவர் கூறியிருந்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கியமான சாலைகளில் 15,345 சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தி, அவற்றின் மூலம் சாலைவிதிகளை மீறுபவர்களை எளிதில் அடையாளம் காணும் முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது போக்குவரத்து காவல்துறை.


இது நல்லமுயற்சி என்றாலும், சி.சி.டி.வி. கேமராக்களின் தரம்குறித்த கேள்விகளைத் தவிர்க்க முடியாத நிலையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தன்னனிடம் இதுபற்றி கேட்டோம், "வெளிநாடுகளில் குற்றச் சம்பவங்களைக் கண்காணித்து, குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காணும் கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், நம்மூரில் பயன்படுத்தப்படும் கேமராக்கள் ஆவிகள் நடப்பதுபோன்ற காட்சியையே தருகின்றன. சென்னை போன்ற பெருமாநகராட்சிகளில் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது குறிப்பிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களைப் பொருத்தினால்தான் அனுமதி என்ற முடிவுக்கான வரைவுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கூடியவிரைவில் நடைமுறைக்கு வரலாம். குற்றம் செய்பவர் முகமூடி அணிந்துகொண்டு கண்காணிப்புக் கேமராவை உடைத்தாலும்கூட, அதே பகுதியில் இருக்கும் மற்ற கேமராக்களின் மூலம் கண்டுபிடித்துவிட முடிகிறது.


சி.சி.டி.வி. கேமராக்களின் பயன்பாடு இனிவரும் காலங்களில் அத்தியாவசியமானதாக மாறும். அதேசமயம், தரக்கட்டுப்பாடு, தர மதிப்பீடு உள்ளிட்டவற்றில் சட்டப்பூர்வமான மாற்றங்கள் நிகழவேண்டும். மேலும், அவற்றின் குறைந்தபட்ச தரம் நிர்ணயிக்கப்படும் போதுதான் முழுமையான பலன்களை அனுபவிக்க முடியும்''’என்றார்.


சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குற்றங்களைக் கண்காணிப்பது இருக்கட்டும். கேமராக்களின் தரத்தை கண்காணிக்கப் போவது யார்?

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT