ADVERTISEMENT

"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்!

01:35 PM Oct 21, 2019 | Anonymous (not verified)

300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-த்திற்கும் மேலான அப்பாவி மனிதர்கள் பத்தாண்டு காலமாக பொள்ளாச்சி-வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குள் வரும் காளியப்ப கவுண்டன்புதூர் சாலை, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம், கோவை கலெக்டர் அலுவலகம் என ஏக்கத்தோடு எங்கும் திரண்டு நிற்கிறார்கள்.

காளியப்ப கவுண்டன்புதூர் மக்களில் ஒருவராய் போராடிக் கொண்டிருக்கும் 70 வயதான மாரியப்பனிடம் "என்ன காரியத்திற்காக உங்கள் போராட்டம்?' என கேட்டோம். "இந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் இருக்கறாங்க சாமீ. சுமார் நாப்பது வருஷங்களுக்கு முன்னால ஆதி திராவிடர் நலத்துறை சார்பா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு மனைப்பகுதி குடுத்தாங்க. அதோடு சுமார் 15 சென்ட் நிலத்தை பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கினாங்க.

ADVERTISEMENT



இங்குள்ள ஆதிக்க சாதிக்காரங்க 1990-ல எங்ககிட்ட வந்து "ஊர் பொதுக்கோவில்கள் புதுப்பிக்கப்படவிருக்கு. விநாயகர் நல்லாயன் கோவில்களுக்கு இடையில் இருக்கற புறம்போக்கு நிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் குடும்பமா குடியிருக்கறாங்க. குடமுழுக்கு நேரத்துல விழா நடத்த போதிய இடமில்லை. அதுனால அந்த கூலித்தொழிலாளர்கள் குடும்பங்களை உங்க சமுதாய மக்களுக்கு சொந்தமாய் இருக்கும் இந்த 15 சென்ட் நிலத்துல குடி வைக்கலாம்னு இருக்கறோம். அதுக்கு பதிலா உங்க பொதுப்பயன்பாட்டிற்கு சென்னியாண்டவர் கோவிலுக்கு வடபுறத்தில் உள்ள நிலத்தில் சமுதாய நலக் கூடம் கட்டிக்கோங்க' என ஊர் பெரி யவர்கள் கிருஷ்ணசாமி கவுண்டர், பொன்னுச்சாமி கவுண்டர், வரதராஜ் கவுண்டர் உள்ளிட்டவர்கள் சொல்லி வாக்குறுதியும் கொடுத்தாங்க.

ADVERTISEMENT



அதுனால எங்க சமுதாயத்திற்கு சொந்தமான அந்த 15 சென்ட் நிலத்தை கொடுத்துட்டோம். அவங்களும் அவங்களை குடி வச்சுட்டாங்க. அதுக்குப் பின்னால வாக்குறுதி கொடுத்த ஊர் பெரியவர்கள் சென்னியாண்டவர் கோவிலுக்கு பக்கத்துல இருக்கற நிலத்தை கொடுத்துரலாம்னு பேசுவதை அந்த சமுதாய மக்கள் ஏத்துக்கலை. வருஷங்கள் ஓடிக்கொண்டேயிருக்க... ஒரு தலைக்கட்டு ஆட்கள் இறந்தே போயிட்டாங்க. ஊர்ப் பெரியவர்கள் கிருஷ்ணசாமி, பொன்னுச்சாமி கவுண்டர்களும் இறந்தே போயிட் டாங்க. வரதராஜ் கவுண்டர் மட்டும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தணும்னு அவுங்க சமுதாய மக்கள்கிட்ட இப்பவும் பேசிக்கிட்டு தான் இருக்கறாரு.


ஆனா அந்த மக்களோ... "அது சென்னியாண்டவர் கோவிலுக்கு சொந்தமான இடம்'னு சொல்றாங்க. அது மிகப்பெரிய பொய்ங்க. எங்க சாதி மக்களுக்கு காதுகுத்து, கல்யாணங் காட்சின்னா எங்க சாமீ நடத்துறது? பொண்ணுக பெரியமனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது? அன்னாடங்காய்ச்சிக நாங்க எங்க சாமீ போறது? இப்ப நாங்க ரோட்டுலதான் நல்ல காரியங்களை நடத்திக்குறோம்'' என்கிறார் ஒருவித ஏக்கத்தோடு.

ஊர் பிரச்சனைகளுக்கு முன்னின்று போராடும் காசு.நாகராசன், பிரபாகரன் உள்ளிட்டவர்களிடம் பேசினோம். "சார்... கோவிலுக்கு பக்கத்துல ஊர்ப் பெரியவர்கள் கொடுக்கறதா சொன்ன நிலம் க.ச.எண்: (1052/20) நத்தம் புறம்போக்கு நிலம்தான். கோவிலுக்கு சொந்தமான இடம் அல்ல. இந்த நிலத்தை இந்த மக்களுக்கு சமுதாயநலக் கூடம் கட்ட கொடுக்க வேணும்னு எங்கள் வால்பாறைத் தொகுதி எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசுவிடம் சொன்னோம். அவர் ஆதி திராவிட நலத்துறையின் தனி வட்டாட்சியரால் புலத்தணிக்கை செய்ததில் நத்தம் வீதின்னு உறுதியானது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் "ஆதி திராவிடர் நிலம்' என வகைப்பாடு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சொல்லி சமூதாயக்கூடம் கட்டித்தரச் சொல்லிக் கேட்டோம். அவரும் சட்டமன்றத்திலேயே "காளியப்ப கவுண்டன் புதூர் மக்களுக்கு சமுதாயநலக்கூடம் கட்ட 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது' என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கச் செய்தார். ஜி.ஓ. பாஸாகி நிதியும் வந்துருச்சு. ஆனா சமுதாயநலக் கூடம் கட்ட இடத்தை கொடுக்க முடியாதுன்னு இங்கயிருந்து கேரளாவுல செட்டிலாகிவிட்ட காளீஸ்வரன்ங்கற கேரளா காங்கிரஸ்காரரை வச்சு "சமுதாயக்கூடம் கட்ட நிலத்தை கொடுக்க மாட்டோம்'னு ஹைகோர்ட்ல கேஸ் போட வச்சிருக்கறது யார் தெரியுங்களா? அ.தி.மு.க.வின் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின் மேற்கு பகுதி ஒன்றிய செயலாளராய் இருக்கும் சக்திவேல்தான். அந்த காளீஸ்வரன், இந்த சக்திவேலுவுக்கு மச்சான் உறவு முறை. அதோடு சக்திவேலு பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர். அ.தி.மு.க. அரசாங்கம் கொண்டுவந்த திட்டத்தையே முடக்கறது எப்படி இருக்குதுன்னு பாருங்க?


இப்ப இந்த இடம் கோவில் நிலம்னு சொல்லிட்டு திரியறதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. அதுல ஒண்ணு சாதி. இந்த சென்னியாண்டவர் கோவிலை அடுத்தே இந்த நிலம் இருப்பதால், அங்கே சமுதாயநலக் கூடம் கட்டினால்... இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த கோவில் வழியேதான் வருவார்கள். அப்படி வந்தால் தீட்டுப் பட்டுவிடுமாம். அதுபோக கோவிலுக்கு எதிர்த்தாப்ல உள்ள ஆத்துக் கரையோரம் உள்ள ஒரு கோவில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தின் குலதெய்வக் கோவில். அவுங்களும் இதுக்கு வேண்டியே இந்த மக்களுக்கு இடத்தை தர எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. அவங்களுக்கு இந்த விசயத்துல பொள்ளாச்சி ஜெயராமன் உதவியா இருக்கறாரு. இதன்மூலமா வேலுமணி இமேஜை டேமேஜ் பண்ணுறதுன்னு உள்கட்சி பாலிடிக்ஸும் ஓடுது. இவர்களின் சாதி வெறி, அரசியல் தந்திரத்தால இந்த ஊர் மக்களான நாங்கள் எந்த வசதியும் கிடைக்காம அல்லல் படறோம்'' என்கிறார்கள் கோபமாய்.

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூர் பெண்கள் புவனேஸ்வரி, மல்லிகா, சரஸ்வதி, தனலட்சுமி, சாந்தி, மகேஸ்வரி உள்ளிட்ட பெண்கள்... "இந்தக் கிராமமே ரெட்டலை கிராமங்க தம்பி. இந்த பத்து வருஷமா எங்க ஊருக்கு ஒரு நல்லது நடக்க இருக்கறதை ரெட்டலை சக்திவேலே தடுக்கறதை தாங்க முடியாமத்தான் வந்த எம்.பி. தேர்தல்ல எங்க மக்க எல்லாமே சேர்ந்து உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டோம்'' என்கிறார்கள் உணர்ச்சியாய். ஊர்ப் பெரியவரான முதியவர் வரதராஜிடம் பேசினோம். "முப்பது வருஷங்களுக்கு முன்னால இந்த அப்பாவி மக்களுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேத்த முடியாமப் போயிருமோங்கற பயம் குண்டூசியால குத்துற மாதிரி நெஞ்சை குத்திக்கிட்டே இருக்குது தம்பி. இந்த மக்களை அழைச்சுட்டுப்போயி கலெக்டர் கிட்ட மனு கொடுத்துட்டு இருக்கேன். விடிவுதான் வரமாட்டேங்குது. இந்த உசுரு என் உடம்பவிட்டுப் போறதுக்குள்ள சென்னியாண்டவர் கோவிலை ஒட்டி இருக்கற அந்த இடத்துல சமுதாயநலக் கூடம் கட்டுவதை பார்ப்பேனுங்க தம்பி'' என்கிறார்.

இதுபற்றி அ.தி.மு.க. ஒ.செ. சக்திவேலிடம் கேட்டதற்கு...

"எனக்கும், அந்த சமுதாயநலக் கூடத்திற்கும் சம்பந்தமில்லை. காளீஸ்வரன்தான் கோர்ட்ல கேஸ் போட்ருக்காப்டியா? அவருகிட்ட வேணா நான் கேட்டு சொல்லுறேன். எனக்கு எதிரா போராட்டம் பண்றாங்களா? எனக்கு அது தெரியாது. நான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்துல இருக்கேன்... அப்புறமா வந்து பேசிக்கலாம்'' என முடித்துக்கொண்டார்.

"தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், சமுதாயநலக் கூடத்தை கட்ட விடாமல் தடுக்கும் ஆளுங்கட்சி ஒ.செ. மீது நடவடிக்கை எடுங்கள். தடைகளை தடுத்து சமுதாயநலக் கூடத்தை கட்டித் தரவேண்டும்...' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 19-ந் தேதி பொள்ளாச்சியிலிருந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் இல்லம்வரை நடைபயணம் என கா.கவுண்டன்புதூர் மக்கள் அறிவித்திருப்பது எதிர் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கலெக்டர் ராஜாமணி தலையிட்டு சமாதானம் பேசினாலும் மக்களின் கோபமும் உரிமைக்குரலும் தணியவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT