ADVERTISEMENT

கர்நாடகாவில் பாஜகவுக்கு மரணக்குழியா?

04:54 PM May 07, 2018 | vasanthbalakrishnan

ஒரு மாநிலத் தேர்தலில் பிரதமராக இருப்பவர் இப்படி சுற்றிச்சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வரலாறே இல்லை என்கிறார்கள். அந்த அளவுக்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடிக்கு மானப்பிரச்சனையாகிவிட்டது.

ADVERTISEMENT

மானப்பிரச்சனை என்பதைக் காட்டிலும் எதிர்காலப் பிரச்சனை என்பதே பொருத்தமாக இருக்கும். நாடு முழுவதும் மோடியைப் பற்றி கட்டப்பட்ட பிம்பம் உடைந்து நொறுங்கிவருகிறது. கடைசியாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. இது பாஜகவின் இறங்குமுகத்தை உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT


மோடிக்கு எப்படியேனும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் முதல்வர் சித்தராமய்யா மிகப்பெரிய மரணக்குழியை பாஜகவுக்காக தோண்டி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

மோடியின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் கர்நாடகா தனது தனித்தன்மையை தக்கவைக்கும் நிலைக்கு சென்றது. அந்த மாநிலத்தில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது பாஜகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள், இந்தியை திணிக்கும் முயற்சி, மகதாயி நதிநீர் பிரச்சனையில் பாராமுகம், விவசாயக் கடன் தள்ளுபடியில் காட்டிய அலட்சியம் ஆகியவற்றை சித்தராமய்யா மிகத்திறமையாக கையாண்டார்.

கர்நாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். கன்னட மொழியை கட்டாயப்பாடமாக்கினார். பள்ளிக்குழந்தைகளுக்கு பால், சீருடை, காலணி வழங்கினார். ஏழைக்குடும்பங்களுக்கு 7 கிலோ இலவச அரிசி வழங்கியிருக்கிறார். அவருடைய சமூகநல திட்டங்களும், லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்கும் நடவடிக்கையும் மாநில மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை அதிகரித்துள்ளது.

பாஜகவில் எடியூரப்பாவை ஓரங்கட்டும் முயற்சிகளை கடந்தமுறையே தொடங்கியது. அவர்மீது ஊழல்புகார் கொடுக்கப்பட்டு அவர் சிறை செல்ல நேர்ந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. எனவே, அவர் கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். இதையடுத்து பாஜக பலமிழந்தது. அதனால் அவரை மீண்டும் பாஜகவில் சேர்த்தார்கள். லிங்காயத்துக்களின் வாக்குகள் எடியூரப்பாவுக்குத்தான் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது லிங்காயத்துகள் சித்தராமய்யா பக்கம் திரும்பிவிட்டார்கள்.

ஒருவேளை பாஜக ஜெயித்தாலும் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்று லிங்காய்த்துகள் சந்தேகப்படுகிறார்கள். அந்த அளவுக்கு பார்ப்பனரான ஆனந்தக்குமாரின் சதிகள் வெளிப்படையாகவே தெரிகிறது என்கிறார்கள். எடியூரப்பாவின் மகனுக்கு சீட் மறுக்கப்பட்டதே அவருடைய சதிதான் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில்தான் கடந்தமுறை அவருக்கு பதவி மறுக்கப்பட்டதற்கு காரணம் யார் என்று பேசிய விடியோ வாட்ஸாப்பில் வைரலாகிவருகிறது. எடியூரப்பாவை முதல்வராக முடியாமல் குமாரசாமி சதிசெய்தார் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், எடியூரப்பாவின் அந்த வீடியோவே, குமாரசாமிக்கு ஆதரவாக பயன்படுகிறது. பாஜக தலைவர்கள்தான் தனக்கு எதிராக சதிசெய்தார்கள் என்று எடியூரப்பா அதில் பேசுகிறார்.

பாஜகவுக்கு எதிராக பல பிரச்சனைகள் சுற்றியடிப்பதை மடை மாற்றுவதற்கு மோடி தரமிறங்கி தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறார். இதற்காக ராகுல்காந்தியே பகிரங்கமாக மோடியை கண்டித்தார். கர்நாடகா தேர்தலில் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு பாஜக சென்றுள்ளது. பாஜக வெற்றிபெற்றால் மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என்று இப்போது மோடி கூறுகிறார். தலித்துகள் வீடுகளில் பாஜகவினர் விருந்து சாப்பிட்டதை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.


ஆனால், தலித்துகளுக்கு எதிராக வட மாநிலங்களில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் நடத்திய வெறியாட்டங்களை வீடியோவாக தொகுத்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். அது பாஜகவை கலங்கடிக்கிறது. தனது பாரம்பரியமான தலித் வாக்குவங்கியை குறிவைத்து ராகுல் செயல்படத் தொடங்கியிருக்கிறார். இது கர்நாடகா தேர்தலுக்கு மட்டுமின்றி, விரைவில் நடைபெறவிருக்கும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலுக்கும் பயன்படும் என்று காங்கிரஸார் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் மிக முக்கியமான பாஜக வேட்பாளர்கள் பலரும் திணறுவதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பொதுவான வாக்காளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் மோடி, சித்தராமய்யா மதசார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.

மதசார்பற்ற ஜனதாதளத்திலிருந்து வெளியேறித்தான் சித்தராமய்யா காங்கிரஸில் சேர்ந்தார். தேவேகவுடாவுடன் ஏற்பட்ட மோதலில்தான் அவர் கட்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் காங்கிரஸுக்குள் கருத்துமோதலை ஏற்படுத்தும் முயற்சி இது என்று காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

தோல்வி பயத்தால்தான் சித்தராமய்யா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று மோடி சொன்னார். அந்த பிரச்சாரம் அவருக்கு எதிராகவே திரும்பியது. கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் வதோதரா, வாரணாசி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதை குறிப்பிட்டு காங்கிரஸார் பதிலடி கொடுக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே எல்லா கட்சிகளும் வாக்காளர்களுக்கு தர வேண்டிய சன்மானங்களை கொடுத்து முடித்துவிட்டதாகவும் ஒரு தகவல் உறுதிசெய்கிறது.

கையையும் காலையும் கட்டியாவது தூக்கிவந்து வாக்களிக்கச் செய்யுங்கள் என்று எடியூரப்பா கூறினார். அதாவது இந்த அடாவடியும், வாக்குப்பதிவு எந்திரமும் இருக்கும்வரை பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது என்று சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள். என்ன நடக்கிறது என்று 15 ஆம் தேதி தெரிந்துவிடும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT