ADVERTISEMENT

வேட்டையாடும் தீ! வெந்து கருகிய 50 கோடி உயிர்கள்! பருவநிலை மாற்றத்தின் கொடூரம்!

06:06 PM Jan 07, 2020 | Anonymous (not verified)

க்கிரமாக வேட்டையாடிய காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவிடும் முயற்சியில் தோல்வியுற்றதால் கம்பிவேலியை பிடித்த நிலையிலேயே கரிக்கட்டையாக நிற்கும் கங்காருவின் புகைப்படம் உலகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. இந்த ஒரு கங்காரு மட்டுமல்ல, ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 50 கோடி விலங்கினங்கள் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல்கள் பேரதிர்ச்சியை தருகின்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பருவநிலை மாற்றம் காரணமாக இப்பூமி மிகவும் கொடூரமான இயற்கை பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில் அமேசான், இந்தோனேசியா காடுகள் எரிந்த கவலையில் இருந்து மீள்வதற்குள் ஆஸ்திரேலிய காடுகள் எரிந்துகொண்டிருப்பது சூழலியல் ஆர்வலர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம். இக்காலங்களில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் கொடூரம் முகம் கொண்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ உண்டானதாக கூறப்படுகிறது. காற்று அடிக்கும் திசையெல்லாம் இத்தீ பரவியதை அடுத்து குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களிலும் பற்றி எரிகிறது. சிட்னி வரை காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தீயின் கோர நாக்குகளால் 15 மில்லியன் ஏக்கர் நிலங்கள் . நாசமாகியுள்ளன. 50 கோடி உயிரினங்கள் இறந்ததாகவும், 24 மனிதர்கள் பலியானதாகவும் வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கின்றன.

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன வாழ்ந்ததாக கணக்கில் கொண்டே 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆஸி’யின் பல்லுயிர் வல்லுநருமான கிறிஸ் டிக்மேன் தெரிவித்துள்ளார். ஆனால், ’’நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. காட்டுத்தீயோ நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து விக்டோரியா மாநிலத்திற்கும் பரவிவிட்டது. கிறிஸின் மதிப்பீட்டில் வெறும் மூன்று மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதி அதை எப்போதோ தாண்டிவிட்டது. அதனால், தற்போது வெளிவந்துள்ள மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான விலங்கினங்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது’’என்கிறார் யார்க் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் கொலின் பீல்.



கடந்த மூன்று மாதங்களாக எரியும் காட்டுத்தீயில் 400 வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 3000 துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தீயினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தினால் இந்த அசம்பாவீதம் நடந்திருப்பதாக கூறப்பட்டாலும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவீதம் ஏற்படாமல் தடுத்திருக்கலாம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் அமெரிக்காவைச்சேர்ந்த 20 வயதான இளம்பெண், காட்டுத்தீயினால் 50 கோடி உயிரினங்களை இழந்த ஆஸ்திரேலியாவிற்கு நிதி சேகரிப்பதாக கூறி, ஒவ்வொருவரும் 10 டாலர் தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பரிசாக டுவிட்டர் பக்கத்தில் தனது நிர்வாணப்படத்தை வெளியிடப்போவதாகவும், தெரிவித்திருந்தார். சொன்னது போலவே அப்பெண் டுவிட்டரில் நிர்வாணப்படத்தை வெளியிட்டார். எதிர்பார்த்ததுக்கும் மேலாக, 7 லட்சம் டாலர்கள் நிதி சேர்ந்தது. ஆனால், அதற்குள் அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுவிட்டது.


வெப்பத்தின் காரணமாக காடுகள் எரிந்துகொண்டிருக்கும் நிலையில், வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. நாட்டின் பல பகுதிகளில் சிகப்பு நிறமாகவும், புகை மண்டலமாகவும் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில். சிட்னியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் நிலையைத் தாண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது கோலாகலமாக நடக்கும் ஒரு விழா. ஆனால், இந்த ஆண்டு பல மாகாணங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் வெப்பநிலையால் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், பட்டாசுகள் வெடித்து மேலும் வெப்பத்தை உண்டாக்காமல் இருப்பதற்குத்தான் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.


காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தினால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து வருகின்றனர். கோடான கோடி விலங்குகளும், பறவைகளும், பூச்சி இனங்களும் இந்த காட்டுத்தீயில் வெந்து சாம்பல் ஆகிவிட்ட நிலையில், தீயணைப்பு படை வீரர்களாலும், தன்னார்வலர்களாலும் காப்பாற்றப்பட்ட சில கோலாகரடிகள், கங்காருவின் புகைப்படங்கள் வெளியாகி கொஞ்சம் ஆறுதலைத்தருகின்றன. பிரபல மாடலும், தீயணைப்பு வீராருமான சாம் மேக்லோன் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்த கங்காரு குட்டி ஒன்றை மீட்டு, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அப்படம் ஒரு பக்கம் ஆறுதலைத் தந்தாலும், மனசை பிசைகிறது.

கருகிக்கிடக்கும் உயிரினங்களும், சாம்பலாகிக்கிடக்கும் காடுகளும், உலகத்திற்கு பருவநிலை மாற்றத்தின் கொடூரத்தை காட்டி அபாய சங்கை ஊதி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT