ADVERTISEMENT

"என்ன பன்னீர்செல்வம் நாம 35 சீட்டுதான் ஜெயிப்போமாம்" விரட்டிய ஜெயலலிதா... நடுங்கிய ஓபிஎஸ் - நினைவுகளை பகிரும் அஸ்பியர் சுவாமிநாதன்!

06:41 PM Nov 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதில் முதன்மையாக பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில் அவரின் விலகளுக்கு என்ன காரணம், ஜெயலலிதாவுடனான அவரின் சந்திப்பு குறித்த கேள்விகளை நாம் அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT

அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் முதல் செயலாளராக உங்களை நியமித்தது அதிமுக தலைமை. ஜெயலலிதா இருந்தவரை அந்த பொறுப்பில் ஆக்டிவாக இருந்தீர்கள், பிறகு பன்னீர்செல்வத்துடன் நல்ல தொடர்பில் இருந்த நீங்கள் என்ன காரணத்துக்காக அதிமுகவில் இருந்து விலக நேர்ந்தது?

2014ம் ஆண்டு இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் நினைத்து பார்க்காத வகையில் அதிமுகவில் கட்சிக்குள் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் என்னை நியமித்தார். அப்போது அவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நியமனத்தை அவர் எவ்வாறு செய்தார் என்பதை கூற விரும்புகிறேன். நான் அவரிடம் தகவல் தொழில்நுட்ப தொடர்பாக 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்று முன் அனுமதி வாங்கி இருந்தேன். அவர் எனக்கு மதியம் 2 மணி வாக்கில் அனுமதி அளித்தார்கள். நான்கு நிமிடங்கள் நான் தகவல்களை அவருக்கு சொல்லலாம் என்றும், ஒரு நிமிடம் அவர் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லலாம் என்றும் திட்டம் வைத்திருந்தேன். ஆனால் நான் கிட்டதட்ட 1.56 மணி நேரம் தொடர்ந்து நான் பேசுவதை அவர்கள் கேட்டார்கள். பல தகவல்களை என்னிடம் கேட்ட அவர்கள், இறுதியாக இந்த தேர்தலில் நாம் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கேட்டார்கள். நான் 35 தொகுதியில் வெற்றி பெற சாத்தியம் உள்ளது. இரண்டு தொகுதியில் வெற்றி கடினம், இரண்டு தொகுதியில் முடிவை நாம் கடினமாக உழைத்தால் மாற்றலாம் என்று கூறினேன்.

அமைதியாக இருந்த அம்மா, எந்த தொகுதியில் நாம் தோல்வி அடைவோம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார், நான் தர்மபுரி, கன்னியாகுமரி என்றேன், எந்த தொகுதியில் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார், நான் மத்திய சென்னை, கோவை என்றேன். சிறிது நேரத்தில் பன்னீர்செல்வத்திடம் நாம் இரண்டு தொகுதியில் தோற்போம் என்கிறார் என்று சொன்னார். உடனே இல்லை அம்மா, நாம் கடினமாக உழைத்திருக்கிறோம், பாண்டியை சேர்ந்து 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறுவோம் என்று கூறினார். அம்மா அவர்கள் என்னிடம் நீங்கள் போகலாம் என்று கூறினார். உடனே நான் நன்றி என்று கூறிவிட்டு, அம்மா நீங்கள் உலக தலைவர்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் பிரபலம், உங்கள் முன்பு என்னால் பொய் கூற முடியாது. அதனால் தான் உண்மையைக் கூறினேன். நன்றி என்று கூறிவிட்டு தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியே வந்தேன்.

வெளியே வந்த நான் கார் பார்க்கிங் செல்வதற்காகச் சென்ற நிலையில், திடீரென போயஸ் கார்டனில் இருந்து கால் வந்தது. நாளை காலை அம்மா அவர்கள் உங்களை 9 மணிக்கு வந்து பார்க்கச் சொல்கிறார்கள். நான் என்னிடம் பேசியவரிடம் இப்போதுதான் என்னை வெளியே போ என்று கூறினார்கள், நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். அவர், வெயிட் பண்ணுங்கள், உறுதி செய்துவிட்டு மறுபடியும் அழைக்கிறேன் என்றார். மீண்டும் அவர் அழைத்து நீங்கள் அவரிடம் உண்மையைப் பேசியது அவருக்குப் பிடித்துள்ளது. உங்களை நாளைக்கு வர சொல்கிறார்கள் என்றார்.

நான் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். முதல்நாள் கோட் போட்டு போயிருந்த நிலையில், அன்று காலை சாதாரண சட்டை, பேண்ட் அணிந்து சென்றேன். சரியாக 9 மணிக்கு வந்த அவர், என்னிடம் உங்களுக்கு அதிமுக உறுப்பினர் கார்டு தர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அதிர்ச்சி அடைந்தேன், என்னம்மா உங்களிடம் உறுப்பினர் கார்டு வாங்க ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கும் போது எனக்கு நீங்கள் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறுவது பெருமையாக இருக்கிறது என்று என்னை கிள்ளிப் பார்த்தேன். பிறகு அவரே ஒரு அறிக்கை வெளியிடுமாறு பூங்குன்றனிடம் தெரிவித்தார். அதில் சில திருத்தத்தைக் கூறி, கழகத்தில் புதிதாக ஐ.டி விங்க் ஏற்படுத்தப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

பிறகு 2016ம் ஆண்டு தேர்தலின் போது ஆலோசனைக் கூட்டத்தில் என்னிடம் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டார்கள். நான் 1 முதல் 2 சதவீதத்தில் நாம் வெற்றிபெறுவோம் அல்லது தோல்வி அடைவோம் என்று கூறினேன். அன்றைக்கு சாய்ந்திரமே என்னைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள். சில நாட்கள் கழித்து அவரே என்னிடம் கட்சி வேலையைப் பாருங்கள், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்றார். அதன் பிறகு முழு மூச்சாக கட்சியில் பணியாற்றினோம். நான் கூறிய வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றிபெற்றது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற வார்த்தை நான் உருவாக்கியதுதான், அது நல்ல முறையில் மக்களிடம் சென்றடைந்தது. அதிமுகவும் வெற்றிபெற்றது. பிறகு அம்மா மருத்துவமனைக்கு செல்கிறார்கள், பிறகு இறந்துவிடுகிறார்கள். அன்றைக்கு பொருளாளராகவும் முதல்வராகவும் இருந்த அண்ணன் பன்னீர்செல்வம் பின்னால் நாங்கள் சென்றோம். கூவத்துரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் போன் நம்பரை ஒரு 50 லட்சம் பேருக்கு ஷேர் செய்து, அவர்களின் போன் ஜாம் ஆகி அங்கிருந்த சிலர் இங்கே வந்த சம்பவங்களும் நடைபெற்றது. இது அனைத்தும் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். அந்த ஏழு மாதமும் பன்னீர்செல்வம் தொடர்பான அனைத்து மீடியா தொடர்புகளையும் நான்தான் பார்த்தேன்.

பிறகு இரண்டு அணிகளும் இணைந்தது. ஒருநாள் பன்னீர்செல்வம் நான் உள்ளிட்ட 5 முக்கிய நபர்களைக் கூப்பிட்டு இனி அதிமுக, இரட்டை இல்லை என்ற எண்ணம் தான் அவங்களுக்கு இருக்க வேண்டும், இபிஎஸ் , ஓபிஎஸ் அணி என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஆகையால் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை பாருங்கள் என்று கூறினார். நானும் அந்த மனநிலையில் தான் இருந்தேன். பிறகு 2020ம் ஆண்டு வாக்கில் 5 மண்டலமாக பிரித்து என்னை சென்னை மண்டலத்துக்கு செயலாளராக போட்டார்கள்.

நான் அவரிடம் மாநில பொறுப்பிலிருந்த என்னை மண்டலத்துக்கு செயலாளராக போடுகிறீர்களே என்று கேட்டேன். அவர், வேலையை பாருங்கள், இதை பெரிதுபடுத்த தேவையில்லை என்று கூறினார். நானும் சரி, அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்து அதை ஏற்றுக்கொண்டேன். பிறகு சில மாதங்களுக்கு பிறகு சென்னை மண்டலத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களை கோவை மண்டலத்துடன் இணைத்தார்கள். எதற்காக இந்த மாற்றம் என்று நான் கேட்டபோது யாரும் தெரியாத மாதிரி பதில் அளித்தார்கள்.

சரி, இதற்கு மேலும் நான் கட்சியில் நாம் பணியாற்ற கூடாது என்று முடிவெடுத்து ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வந்தேன். இதற்காக அவர்கள் இருவரையும் சந்திக்க நேரம் கேட்டேன். அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதால் கூட்டத்தொடர் முடிந்த உடன் அன்று மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள் என்று கூறினார்கள். நானும் ஒரு வாரம் தானே என்று காத்திருந்த போது, திடீரென தமிழக தேர்தல் தேதியை அறிவித்தார்கள். இப்போது போய் ராஜினாமா கொடுத்தால் நன்றாக இருக்காதே என்று நினைத்து நான் என் வழக்கமான பணியை பார்க்க துவங்கினேன். குறிப்பாக 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்த போதே இது நிற்காது என்று இருவருக்கும் நோட் அனுப்பினேன். இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அதனை நிறைவேற்றினார்கள். பிரச்சாரத்தில் இபிஎஸ் இது உறுதியானது என்று பேசுகிறார், தென் மாவட்டங்களில் பன்னீர் செல்வம் பேசும் போது இது தற்காலிகமானது என்று கூறுகிறார். இதில் என்ன ஸ்டேண்ட் எடுத்து நான் பணியாற்ற முடியும். பிறகு சில மாதங்களுக்கு பிறகு என்னுடைய ராஜினாமா கடிதத்தை இருவருக்கும் அனுப்பினேன். 10 நாட்களுக்கு பிறகும் அதுதொடர்பாக எந்த தகவலும் என்னிடம் கூறவுமில்லை. இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நானே விலகினேன். 7 ஆண்டு கால அதிமுகவில் இருந்து நான் இவ்வாறு தான் வெளியேறினேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT