ADVERTISEMENT

அந்த அச்சம் இருக்கும்வரையில், அண்ணாதான் ஆளுகிறார்... இதுவே சாட்சி!!!

12:01 PM Jun 07, 2019 | kamalkumar

1968ல் நடந்த தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவில் அண்ணா சொன்னார்... என்னை மருத்துவர்கள் தடுத்தார்கள்; என் தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதைவிட, நான் வீட்டிலிருந்து என்ன பயன்? இந்த உடல் இருந்து என்ன பயன்? மூன்று பெரும் சாதனைகளை எங்களுடைய அரசு - திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கிறது.

ADVERTISEMENT



*தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.

*சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம்.

*இருமொழிக் கொள்கை - தமிழ் - ஆங்கிலம் மட்டும்தான் மும்மொழிக்கு இடமில்லை.


இந்த மூன்றும் மிக முக்கியமானது. எங்கள் ஆட்சியையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது. அவர்களால் முடியுமா? என்று நான் சவால் விடமாட்டேன். இன்றைய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால், அப்படியே வேறு யார் வந்து உட்கார்ந்தாலும், நாங்கள் செய்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, அந்த நேரத்தில் அதை மாற்றினாலோ, மக்கள் நிலை என்னாகும்? தமிழ்நாடு எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்று.

ADVERTISEMENT

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததுமுதலே தமிழ்நாட்டிற்கு சோதனைகாலம் ஆரம்பித்துவிட்டது எனக்கூற தொடங்கிவிட்டனர் மக்கள். அதைப்போலவே புதிய கல்விக்கொள்கை வெளியானது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் அதனுடன் ஒரு விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மும்மொழிக்கொள்கை இந்தியைத் திணிப்பதாகவே இருக்கிறது. இந்தியை திணிப்பதற்காகவே இதையெல்லாம் செய்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் விமர்சித்தனர், கண்டனங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அந்த கல்விக்கொள்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நேற்றுமுன்தினம் முதல்வர் மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யவேண்டுமென ட்விட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்தார். இது மறைமுகமாக மும்மொழிக்கொள்கையை ஆதரிப்பதாக உள்ளது என கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக்கொள்கைதான், மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை எனவும் முதல்வர் நேற்று தெரிவித்தார். இப்படியாக இந்தி திணிப்பிற்கு ஒரு சிறு வழிகூட விடாமல் மக்களும், எதிர்கட்சிகளும் செய்தனர். ஆட்சியாளர்களாலும் அதை தொடரமுடியாமல் கைவிட்டனர்.


இன்று மத்தியில் தனிப்பெரும்பான்மையில் பாஜக இருக்கின்றபொழுதும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இருக்கின்ற பொழுதும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியவில்லை, மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. அண்ணா அன்று சொன்னது இன்றும் நிகழ்வாகியிருக்கிறது. ஆம் தற்போதும் அண்ணாதான் ஆளுகிறார். என்றும் அண்ணாதான் ஆள்வார். தமிழ்நாட்டு மக்கள் இதை ஏற்பார்களா என்ற பயத்தின் வழியாக அண்ணா நாட்டை ஆள்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT