ADVERTISEMENT

“ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கிய ஒரு லட்சம் கோடி எங்கே” - ஆண்டாள் பிரியதர்ஷினி கேள்வி

05:17 PM Jul 22, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி ஆகியோர் கூறியது தொடர்பாக தி.மு.க மாநில செய்தித் தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி நமக்கு அளித்த பேட்டி;

தி.மு.க அமைச்சர்கள் எல்லாரும் தூக்கத்தை இழந்துவிட்டார்கள் என்று ஜெயக்குமார் சொல்கிறாரே?

அவர்களும் இழக்கப் போகிறார்கள். அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத்தான் நம்முடைய ஆளுநர் பல மாதங்களாக கீழே போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் மட்டும் நீதிமான்களாக இருக்கிறார்களா?. நம்முடைய முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்த போது அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து ஆளுநரிடம் ஒப்படைத்தார். ஆனால், அதை ஆளுநர் எடுக்கவே இல்லை. நாம் பொது வெளியில் இப்படி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பொதுமக்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

எதிர்க்கட்சி சார்பில் 26 கட்சிகள் தான் இருக்கின்றன. ஆனால், ஆளும் ஒன்றிய அரசு பா.ஜ.க தலைமையில் 38 கட்சிகளைக் கூட்டியிருப்பதால் பலமாக இருப்பதாகக் கூறுகிறார்களே?

எண்ணிக்கை பலம் என்றால் பன்றிகள் கூட்டம் கூட அதிகமாகத் தான் இருக்கும். சிங்கம் தனித்து தான் இருக்கும். பலமாக இருக்கிறார்கள் என்றால் 26 கட்சிகளைப் பார்த்து ஏன் பயப்படுகிறது. வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்துத் தொடங்கி வைக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒன்றிய தலைவர் சென்று கொண்டிருந்தார். ஆனால், அன்றைக்கு தன்னுடைய நண்பருக்காக தொடங்கி வைக்கப்பட்ட வீர் சாவர்க்கர் விமான நிலையத்தின் திறப்புக்கு நேரில் செல்லாமல் பயந்து கொண்டு காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 26 என்ற எண் அவர் வயிற்றில் புளியைக் கரைத்ததா?

தி.மு.க.வில் ஊழல் இருக்கிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எல்லாரும் ஆதரவு தருகிறார்கள் என்று மோடி பேசுகிறாரே?

ஆர்.எஸ்.எஸின் 32 பக்க கொள்கை ஒன்று இருக்கிறது. அதில், எப்போதுமே ஆட்சிக்கு வந்த பின்பு நீ நேரடியாக ஊழலில் ஈடுபடாதே. உனக்கு கீழ் நான்கைந்து குடும்பங்களைத் தயார் செய்து கொள். அவர்களுக்கு வேண்டிய சகாயங்களை நீ செய்தால், அதன் பின்பு அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று இருக்கிறது. அதைத்தான் அப்படியே அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்கள் நேரடியாக ஊழல் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஒன்றியத் தலைவர் அனைத்து நாடுகளுக்கும் சென்று அங்குள்ள ஒப்பந்தங்களை எல்லாம் அவருடைய நண்பர்களுக்கு தானே எடுத்துக் கொடுத்து வருகிறார். இது தான் அவர்களுடைய கொள்கை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழல் என்பது பண மோசடி என்பதைத் தாண்டி இந்த மாதிரி கொள்கையை விற்று, அறத்தை விற்கிறார்களே இதுவும் ஊழல் தான். அப்படி பார்த்தால் இவர் செய்வது மகாபெரிய ஊழல். தன்னை தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றிவிட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே தன்னுடைய நண்பர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் கூட அதானிக்காகத் தான் பற்றி எரிகிறது. அதேபோல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தாராவியில் வாழ்ந்த தமிழர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப் போகிறார்கள். தாராவியையே அதானிக்காக எழுதி கொடுத்துவிட்டார்கள். ஏன் பிரித்து பிரித்து எழுதி கொடுக்க வேண்டும். மொத்தமாக அதானிக்காக இந்தியா என்று எழுதி கொடுக்க வேண்டியதுதானே. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளே அதை செய்து விடுவார்கள். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஊழலைப் பற்றி பேசுவது என்பது நூற்றாண்டின் நகைச்சுவையாக தான் இருக்கிறது. நம்முடைய திரைப்படங்களில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் சொல்லக்கூடிய வசனங்களை விட நம்முடைய பிரதமர் நகைச்சுவை வசனங்களைப் பேசுவார்.

எல்.ஐ.சியில் இருந்து லட்சம் கோடிகள் கடன் வாங்கினார்கள். அந்த பணத்தை என்ன செய்தார்கள். ரிசர்வ் வங்கியில் இருந்தும் லட்சம் கோடிகள் வாங்கினார்கள். அதை என்ன செய்தார்கள். அவருடைய நண்பரை பற்றி ஹிண்டன்பர்க்கில் அறிக்கை ஒன்று வந்தது. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இதே அறிக்கை வெளிநாட்டில் வந்திருந்தால், அந்த அரசு கவிழ்ந்திருக்கும். குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறையில் இருந்திருப்பார். ஆனால், இங்கு எதுவுமே நடக்கவில்லை. நம்முடைய நிதி அமைச்சரிடம் இது பற்றி கேட்கும் போது அதை செபி விசாரிக்கும் என்று கூறுகிறார். அதானியுடைய சம்மந்தி தான் செபி. இதை எப்படி விசாரிக்கும் என்பது நமக்கு தெரியும்.

உச்சநீதிமன்றம் கேட்ட அந்த கேள்வியால், ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். எனவே, மிகப்பெரிய ஊழலாக இந்த மூன்றை சொல்லலாம். அதைத் தாண்டி பிரதமர் கவனிப்பு நிதி ஊழல். அது எப்படி ஒரு நிதி ஆதாரமுள்ள அமைப்பு எந்த விதமான கணக்கு வழக்குகளுக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம், எந்த விதமான ஆடிட்டிங் செய்யமாட்டோம் என்று கோரிக்கை வைக்க முடியும். அப்படிப் பார்த்தால், இவர் உச்சநீதிமன்றத்திற்கெல்லாம் மேலானவரா.

என்.டி.ஏ. கூட்டத்தில், நான் தெரிந்தே தவறுகள் செய்திருக்க மாட்டேன் என அழுதார். இனிமேல் ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் அழுவதை நாம் பார்க்கலாம். சிவாஜி கணேசன் தோற்கிற அளவுக்கு அங்கு நாடகம் நடக்கும். ஆஸ்கர் விருதை தயார் செய்து விடலாம். உலக தலைவர்களிலே ஆஸ்கர் விருது வாங்கும் தகுதியுடைய ஒரே தலைவர் நம்முடைய பிரதமர் தான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT