Skip to main content

“மோடி வெளிநாட்டிற்கு விமானி இல்லாமல்கூட செல்வார்... அதானி இல்லாமல் செல்லமாட்டார்” - அமைச்சர் உதயநிதி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Modi will go abroad even without a pilot, not without Adani says Minister Udhayanidhi

 

“பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டிற்கு விமானி இல்லாமல் கூட செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்லவேமாட்டார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

திருவாரூரில் கலைஞருக்கு அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் கோட்டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நான்கு நாள் பயணமாக டெல்டா மாவட்டத்திற்கு வந்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார். 20 ஆம் தேதி கலைஞர் கோட்ட நிகழ்வில் கலந்துகொண்டார். 21 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தார்.

 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திறந்து வைத்தார். பிறகு பூம்புகார் தொகுதியில் பழம்பெரும் திமுக தொண்டராக இருந்து, மிசா காலத்தில் சிறைச் சென்ற ‘மிசா மதிவாணன்’ சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் காரணமாக இறந்தார். அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். 

 

Modi will go abroad even without a pilot, not without Adani says Minister Udhayanidhi

 

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் திமுக முன்னாள் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழிகள், 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு பேசியவர், “பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு விமானி இல்லாமல் கூட செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்லவேமாட்டார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் ஒன்றிய அரசு திமுகவை எதிர்க்கிறது. திமுகவில் உள்ள சாதாரண கிளை செயலாளரை கூட பாஜக அரசால் ஒன்றும் செய்ய முடியாது. நமது முதலமைச்சர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனை கண்டு பாஜக அஞ்சுகிறது. அதனாலேயே மத்திய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவைகளை கொண்டு சோதனைகளை மேற்கொண்டு திமுக அரசை அச்சுறுத்த நினைக்கிறது." என்றார்.

 

மேலும் பேசியவர், "திமுக தொண்டர்களான உங்களுக்கும், மூத்த முன்னோடிகளான உங்களுக்கும் ஒரு வேண்டுகோள், என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள். தலைவர் கலைஞர் வைத்த அழகான பெயர் உதயநிதி. அந்த பெயரை சொல்லி அழைத்தாலே போதும். நான் உண்மையாகவே அரசியல் அனுபவத்தை வைத்து பார்க்கும்போது சின்னவன் தான் இனி என்னை அப்படி அழைக்காதீர்கள்." என்று  முடித்தார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏவுமான நிவேதா முருகன், சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்