Skip to main content

பிரதமர் மோடி தமிழகம் வருகை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Prime Minister Modi's visit to Tamil Nadu

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6 வது முறையாக  பிரதமர் மோடி நாளை (09.04.2024) தமிழகம் வரவுள்ளார். 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை, வேலூர் மற்றும் நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு நாளை மாலை சென்னை வருகிறார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி மேற்கொள்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

அதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (10.04.2024) காலை 10.30 மணிக்கு வேலூர் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பாஜக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் 01.45 மணிக்குக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து மகாராஷ்டிரா புறப்பட்டுச் செல்கிறார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரு தரப்பினரிடையே மோதல்; ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கத்தி குத்து!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
conflict between two parties in the Adal Padal program

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சீதாராமன் பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இரு தரப்பினரிடையே திடீரென கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடுத்து ஓடினர். 

இந்த மோதலில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, குமார் மற்றும் புருஷோத்தமன் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கத்தி குத்துக்கு ஆளாகி காயம் பட்டவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து  DSP ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி?

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Armstrong wife to petition the governor

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

அதே சமயம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டுள்ளார். இதற்காக பகுஜன் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ஆளுநர் ரவியிடம் மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.