ADVERTISEMENT

முதல்வராக கனவு கண்டவர் ஜெயக்குமார்... வாய் திறக்க முடியாத OPS-EPS -எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து

04:07 PM Aug 13, 2020 | rajavel

ADVERTISEMENT

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி. சண்முகம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலைச் சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அப்போது அவர், இரண்டு நாட்களாகவே அ.தி.மு.க அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, கரோனா நிவாரணப் பணி என நினைத்து விட வேண்டாம். மைக் மன்னர்களாக மாறி, யார் முதல்வர் வேட்பாளர் என மைக்கை உடைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டைத் துவக்கி வைத்தவர், பிரபல அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யாரோ ஒரு புண்ணியவான் "வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர்?", எனக் கேட்டுவிட்டார். அண்ணன் செல்லூர் ராஜு, அரசியலமைப்பு வல்லுநர் ஆகிவிட்டார். "வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்", என புதிய அரசியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

உடன் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. "எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்", என அழுத்தமாக அறிவித்தார். அவர் பாவம், இப்போது தான் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை அடித்து, பிடித்துத் திரும்ப வாங்கினார். அதைத் தக்க வைக்க, எடப்பாடி உதவி வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

அடுத்து மைக் முன் வந்தார் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார். "எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து வெற்றியைப் பெறுவார்கள். எடப்பாடி தான் முதல்வர்", என்று அறிவித்தார். அப்புறம் வழக்கம் போல், வத, வதவென பேசிக் கொண்டே போனார். அவருக்கு எடப்பாடி முதல்வராக இருந்தால் தான், 'தான்' மதுரையை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம்.

அடுத்து பதினோரு மணி அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவர் அனைவரையும் கண்டித்தார். "யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக் கூடாது", என்று அறிவுரை வழங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருக்கும் போதே முதல்வராக கனவு கண்டவர் இந்த ஜெயக்குமார். அவர் கனவு அவருக்கு.

கடைசியாக இன்று கே.பி.முனுசாமி மொத்தமாக சீல் வைத்தார். "அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம்". இவ்வளவு தான் மேட்டர். அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் கே.பி.முனுசாமி.

வெற்றி பெற்ற பிறகு தானே, முதல்வர் வேட்பாளர் எல்லாம். வெற்றிபெற்றால், பார்த்துக் கொள்ளலாம் என முனுசாமி சொல்லி விட்டார். இதைச் சொல்ல அவர் தான் அத்தாரிட்டி.



அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் முதல்வர் வேட்பாளர் கணக்கில் இருப்பவர்கள். எனவே இவர்கள் இருவரும் வாயைத் திறக்க முடியாது.

அதனால், மூத்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தான் அத்தாரிட்டி. அவர் முடிவை சொல்லியும் விட்டார்.

இவர்கள் எல்லோரும் மைக்கை கண்டால் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னாலும் டெல்லியிருந்து, "என்ன அங்க சத்தம்", என்ற அதட்டல் வந்தால், "சும்மா பேசிக்கிட்டிருந்தோம் டாடி", என அந்தத் திசை நோக்கி விழுந்து விடுவார்கள், கடந்த காலங்களில் டயர் முன் விழுந்ததைப் போல.

கிராமத்தில் சொல்வார்கள், "அறுக்க மாட்டாதவன் இடுப்ப சுத்தி அம்பத்தெட்டு அருவாளாம்". இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT