ADVERTISEMENT

எடப்பாடியை நெருக்கும் மாவட்டச் செயலாளர்கள்! கூட்டு சேரும் ஓ.பி.எஸ். சசிகலா! 

12:49 PM Jul 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார்.

மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது. மீதம் பிறகு தருகிறோம் என தவணை கூறப்பட்டது. இப்போது மீண்டும் பொதுக்குழு கூடுவதால் மீதம் தரவேண்டிய 2 கோடியுடன் மூன்று கோடி சேர்த்து ரவுண்ட்டாக ஐந்து கோடி கொடுங்கள் என மா.செ.க்கள் தரப்பிலிருந்து டிமாண்ட் வந்திருக்கிறது.

எடப்பாடிக்கு இந்த பொதுக் குழுவை நடத்துவதற்கு விஜயபாஸ்கர் பெரிய தொகை கொடுத்துள்ளார். அது தவிர கொங்கு மண்டல தொழிலதிபர்களிடம் பெரும் நிதி வசூல் செய்யப்பட்டது. 23-ஆம் தேதியே எடப்பாடி தான் ஒற்றைத் தலைமை. அவர்தான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் என நிரூபிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் பொதுக்குழு கூட்ட எதற்கு மீண்டும் செலவு செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் தயக்கம் காட்டியிருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பினர், "நடைபெற்றது பொதுக்குழு அல்ல. காலை பத்து மணிக்கு நடை பெறும் பொதுக்குழுவுக்கு அதிகாலை 5:00 மணிக்கே திருமண மண்டபத்தில் கொங்குமண்டலத்தில் இருந்து ஆட்களை கொண்டு போய் நிரப்பினார்கள். காலை 6:30 மணிக்கு லைவ் ரிலே எடுத்த தொலைக்காட்சிகளில் ஒற்றைத் தலைமை எடப்பாடி என கொங்கு பாஷையில் மண்டபத்தில் இருந்தவர்கள் பேசினார்கள். செயற்குழு, பொதுக்குழு என்றார்கள்.

ஜெ. காலத்தில் செயற்குழு கூட்டம், பொதுக்குழுவுக்கு முன்பு ஐந்து நிமிடம் டிராமா போல நடத்துவார்கள். இந்தமுறை அதெல்லாம் நடத்தவில்லை. நேரடியாக பொதுக்குழு நடத்தப்பட்டது. அதில் ஒருமாதம் கஷ்டப்பட்டு நடத்திய கட்சித் தேர்தலுக்கு அங்கீகாரம் பெற வேண்டிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுது கட்சி என்பதே இல்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட யார் பெயரும் இல்லை. ஓ.பி.எஸ். பெயரை நீக்குகிறோம் என ஆரம்பித்து, எல்லோர் பெயரையும் நீக்கிவிட்டார்கள். எனவே இந்த முறை மறுபடியும் பொதுக்குழு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க. என்கிற கட்சியே இருக்காது என பதில் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டது.

கடந்த முறை காசு கொடுக்க மந்திரிகளிடம் எடப்பாடி அதட்டி, உருட்டி பணம் கேட்டிருக்கிறார். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மறுபடியும் கோடிகளில் செலவு செய்து பொதுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள்.

இதற்கிடையே இந்தக் குழப்பத்தில் குளிர் காய்வதற்கு பா.ஜ.க.வும் களமிறங்கிவிட்டது. பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான நிதி திரட்டித் தருபவரும் மோடியின் வலதுகரமான மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், கோவைக்கு வந்திருக்கிறார். பியூஷ்கோயல், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் அதிகபட்ச மரியாதையும் பணிவும் காட்டினார். கோவை வந்த பியூஷ்கோயலை எடப்பாடிக்காக பண உதவிகள் வழங்கும் திரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் சந்தித்தார்கள். அவர்களோடு கோவையில் எடப்பாடிக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும் சந்தித்தனர். ஒரு பெரிய தொகை அங்கே பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பியூஷ்கோயல் மிகவும் பணிவுடன் வேலுமணியிடம் நடந்துகொண்டார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இப்படி எல்லா வகையிலும் அடுத்த பொதுக்குழுவுக்காக தயாராகி வரும் எடப்பாடி, அ.தி.மு.க.விற்கு புதிய நிர்வாகிகளையும் நியமிக்கவுள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி, துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளராக ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என லிஸ்ட் தயாராகி வருகிறது என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரங்கள்.

ஆனால் கேம் இப்படி ஒன் சைடாகவே இருந்துவிடவில்லை. எப்பொழுதும் அ.தி.மு.க.வில் குறுக்குசால் ஒன்று ஓடும். இந்த முறையும் அந்த குறுக்குசாலை ஓட்டுபவர் சசிகலாவாகத்தான் இருக்கிறார். ஒரு கல்யாண மண்டபத்தில் பத்துபேர் கூடி எடுக்கிறது எல்லாம் ஒரு முடிவா? என நடைபெற்ற பொதுக்குழுவை சசிகலா கிண்டலடித்திருக்கிறார்.

அவர் அப்படிப் பேசுவதற்கு காரணம் இந்த பொதுக் குழுவிற்குப் பிறகு எடப்பாடி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் தவிர மற்ற அனைவரும் சசிகலாவிடம் பேச ஆரம்பித்திருப்பது தான். ஜெயக்குமார்கூட சசிகலாவின் சகோதரர் திவாகரனிடம் பேசுகிறார். ஓ.பி.எஸ். நேரடியாக சசிகலாவிடமும், டி.டி.வி.தினகரனிடமும் தினமும் பேசுகிறார். அந்த உற்சாகத்தில்தான் "நான் மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவேன். ஒற்றைத் தலைமையாக என்னை அமரைவைக்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்' என திருத்தணி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வட மாவட்டங்களில் நடக்கும் அரசியல் யாத்திரையின்போது சசிகலா பேசி வருகிறார். அத்துடன் தொண்டர்களும் வாக்காளர்களும் முடிவு செய்வதுதான் கட்சி என எடப்பாடி நடத்தும் கூட்ட வைபவங்களை சசிகலா நக்கலடிப்பது எடப்பாடி தரப்பை டென்ஷன் அடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில், இதேபோல ஒரு பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய நிகழ்வை எதிர்த்து இப்பொழுது ஓ.பி.எஸ். நடத்தும் சட்டப் போராட்டத்தில் சசிகலாவும் இணைந்து போராட திட்டமிட்டிருக்கிறார் என்கிறது சசிகலா வட்டாரங்கள்.

இந்நிலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி. கட்சியின் உயர்ந்தபட்ச அரசியல் முடிவுகளை எடுக்கும் வலிமை பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பொதுச்செயலாளராவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்தப் பதவிக்கு கிளைக் கழகங்களில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவையும் பெறவேண்டும். அதனால் பொதுச்செயலாளராக பதவியைப் பெற்றவுடன் அனைத்து கிளைக் கழகங்களையும் கூட்டி பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும். தேர்தல் கமிஷன் அதை ஏற்றுக்கொள்ளும் என சட்ட வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.


ஆனால் கடந்தமுறை சசிகலாவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தேர்தல் கமிஷனில் உத்தரவு பெற்றதற்குக் காரணம் பா.ஜ.க. அந்த பா.ஜ.க. இந்தமுறை எப்படியிருக்கும் என டெல்லி சென்ற ஓ.பி.எஸ்., பா.ஜ.க.. வட்டாரங்களில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ள தனது மகன் ரவீந்திரநாத் மூலம் முயற்சி செய்துவருகிறார்.


எடப்பாடிக்கு கோவை ஆர்.எஸ்.எஸ். டீம் ஆதரவு தருவதுபோல கடந்த முறை ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக களம் கண்ட பா.ஜ.க.வினரை ஓ.பி.எஸ். தொடர்புகொண்டார். அதில் குருமூர்த்தி தரப்பினரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக இயங்குகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில், குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு பெறுவது, ஜனாதிபதி தேர்தல், ஜெர்மன் பயணம் என பிஸியாக இருந்த மோடி, ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ளவில்லை, அதனால் நிர்மலா சீதாராமனும், ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க விரும்பவில்லை. இருந்தாலும் பா.ஜ.க. பிரமுகர்களை மட்டும் சந்தித்துவிட்டு வந்தார் ஓ.பி.எஸ். என்கிறது டெல்லி வட்டாரங்கள்.


இதற்கிடையே மதுரையிலிருந்து தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு பொதுக்குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்கிற கோஷத்தை முன் வைத்து களமிறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவருக்கு இணையாக சசிகலா, வட மாவட்ட டூர் தொடங்கியுள்ளார். எடப்பாடி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த பொதுக் குழுவுக்கு தயாராகி வருகிறார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT