Skip to main content

செயல் வேகத்தில் ஓ.பி.எஸ்-ஐ விஞ்சிய இ.பி.எஸ்.! 

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

EPS as General Secretary. Inauguration
கோப்புப் படம் 

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதில், வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும், மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு, மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், 18ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த இ.பி.எஸ். 11.05 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல்கள் எழுந்து வந்த நிலையில், இ.பி.எஸ். சார்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள், அப்படி யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில் இ.பி.எஸ். ஒருமனதாக அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்ததும், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அந்த வழக்குடன் சேர்த்து பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டது.

 

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது. 

 

அதனைவிடத் துரிதமாகச் செயல்பட்ட இ.பி.எஸ். தீர்ப்பு வந்ததும் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இ.பி.எஸ்.-ஐ பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். 

 

ஓ.பி.எஸ். மேல்முறையீடு தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட இருக்கும் நிலையில், ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து மீண்டும் இடைக்காலத் தடை வாங்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இ.பி.எஸ். தீர்ப்பு வந்ததும் பொதுச்செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டதால், நாளை நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம் அனைவராலும் கவனிக்கப்படும். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

‘சிபிஐ விசாரணை வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'CBI should investigate' - Edappadi Palaniswami

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதன்படி மூன்றாம் நாளான இன்று (22.06.2024) பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

'CBI should investigate' - Edappadi Palaniswami

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?. 

'CBI should investigate' - Edappadi Palaniswami

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர்  ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது.

சாராய விஷ முறிவுக்கு செலுத்தும் மருந்தின் பெயரை மாற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தடை செய்யப்பட்டுள்ள அந்த மருந்தை ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டு பேசி உள்ளார். அரசு மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது; துரிதமாக செயல்பட்டு இருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.