ADVERTISEMENT

"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க...?" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்! 

10:55 AM Sep 07, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலை, இலக்கியம், தமிழர்கள் வாழ்வியல், ஆன்மீகம், திரைப்பிரபலங்களின் அறியாத பக்கம், அவர்களுடனான தன்னுடைய நெருக்கம் என பல்வேறு தலைப்புகளில் நடிகர் ராஜேஷ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்வு குறித்து பேசுகையில் அதில் முக்கிய சம்பவமான எம்.ஜி.ஆர். மீதான துப்பாக்கிச்சூடு குறித்து பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம்.

"திராவிடர் கழக தொண்டர்கள், நெருங்கிய நண்பர்கள் என யார் பண உதவி கேட்டு கடிதம் எழுதினாலும் தயங்காமல் மணி ஆர்டர் அனுப்புவார் எம்.ஆர்.ராதா உதவி என்று வீட்டிற்கு தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறவே மாட்டார். அவருடைய தோட்டம் ராமாவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டிற்கு எதிரே இருந்தது. அங்கே மாமரம், தென்னை மரம் நிறைய இருக்கும். அங்கே காய் பறிக்கிற நாளில் பறித்து முடித்தவுடன் வேலை பார்த்தவர்களை எல்லாம் அழைத்து பை நிறைய காய்களை அள்ளிக் கொடுப்பார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கெல்லாம் தனித்தனியே ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எம்.ஆர்.ராதாவுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அனைவரையுமே நையாண்டி செய்வார். பக்திமான், பணக்காரன் என பாரபட்சமே பார்க்க மாட்டார்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுடக்கூடிய மனப்பான்மை எப்படி வந்தது என்பதை அறிய அவரது வாழ்க்கையை நான் பல்வேறு கோணங்களில் ஆய்வுபடுத்தி பார்த்தேன். இந்த சம்பவத்துக்கு முன்பே ஒரு முறை கிட்டு என்ற ஒரு நாடக நடிகருடன் எம்.ஆர்.ராதாவுக்கு முரண் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரின் உடைகள் இருந்த பெட்டியினுள் ஆசிட்டை ஊற்றி விட்டார். அன்று அவரால் நாடகத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்த முறை அவருடன் பிரச்சனை வந்தவுடன் அவரது முகத்திலேயே ஆசிட்டை ஊற்றி விட்டார். அதைப் பிரதிபலிப்பது போலத்தான் பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.

இதே போல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு உளுந்தூர்பேட்டையில் சென்று துப்பாக்கி வாங்கி வந்து அவரை சுடச் சென்றார். 'நீ சுட்டால் நல்லது தான்.. வாடா..' என என்.எஸ்.கிருஷ்ணன் நெஞ்சை நிமிர்த்தி காட்டினார். பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர். நடிப்புக்கும், வாழ்வுக்கும் வித்தியாசம் உண்டு. பலர் அதை புரிந்துகொள்வார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் பாத்திரத்திலிருந்து வெளியே வராமல் ஊறிப்போய்விடுவார்கள். எம்.ஆர்.ராதா அண்ணன் நடித்த பல பாத்திரங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்து அவரை இது போன்ற செயல்களைச் செய்யத் தூண்டியிருக்கலாம்.

'நமக்கு எதிராக ஒருவன் இருக்கிறான். அவனால்தான் நம் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது' என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் கண்களுக்கு அவர் எதிரியாகத்தான் தெரிவார். அதைத்தான் காமாலைக்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் மஞ்சள் என்பார்கள். தன்னுடைய மன உலகத்திலும், சினிமா உலகத்திலும் எம்.ஜி.ஆரை ஒரு வில்லனாக நினைத்து கொண்டதால் அவரை சுடும் அளவுக்கு செல்லும் நிலை வந்து விட்டது என்று நினைக்கிறேன். 'பெற்றால் தான் பிள்ளையா' படம் தொடர்பான பண விஷயங்களும் காரணம் என சொல்வார்கள். ஆனால் உளவியல் அடிப்படையான காரணம் இதுதான்.

எம்.ஜி.ஆர். வீட்டிற்கு எதிரேதான் இவரது தோட்டம் இருக்கும். துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அங்கேயே காத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். கார் வீட்டிற்குள் போனதும் சிறிது நேரம் கழித்து இவர் போயிருக்கிறார். எம்.ஜி.ஆர். யார் வந்தாலும் நான் இல்லையென்று சொல்... நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனதால் காவலாளி அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். 'இப்போது உள்ளே போனதை நான் பார்த்தேனே... ஒரு முக்கியமான விஷயம்' என்று கூறி விட்டு உள்ளே சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து சுட முயலும் போது சுதாரித்து விலகி விடுகிறார். அதனால் அது காயத்தோடு போனது. திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகளில் நடித்திருந்ததால் அது எம்.ஜி.ஆருக்கு ஒரு அனிச்சை செயலாகவே பழகிப்போனது. அவர் சுட்டவுடன் எம்.ஜி.ஆர் வழியும் ரத்தத்தை கையில் பிடித்துக்கொண்டே "என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க?" என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்பு அந்த வழக்கு நீண்ட நாள் நடந்தது.

எம்.ஆர்.ராதாவிற்காக என்.டி.வானமாமலை என்ற வழக்கறிஞர்தான் வழக்கு நடத்தினார். ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவரை தன்னுடைய ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்று இது போன்றுதான் எம்.ஆர்.ராதா என்னை சுட்டார் என தத்ரூபமாக விளக்கி இருக்கிறார். ஒரு விழாவில் என்.டி.வானமாமலை அவர்களை நான் சந்திக்க நேர்ந்த போது அவர் இதை என்னிடம் கூறினார்."

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT