ADVERTISEMENT

சூறாவளி சுற்றுப் பயணம்... ஆட்சியைப் பிடித்தவுடன் அதிரடி - ஸ்டாலின் பேச்சு!

05:26 PM Jan 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

அவர் பேசியதாவது, "என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முறைகளில் நாங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், வரும் 29ம் தேதி முதல், நான் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளேன். அதைப்பற்றி தெரிவிப்பதற்காக உங்களை எல்லாம் இங்கே அழைத்துள்ளேன். என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் கெட்டு குட்டிச்சுவராகியுள்ளது. அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்ல வேண்டுமானால், தமிழகத்தின் கடன்சுமை 5 லட்சம் கோடி, எல்லாத் துறைகளிலும் பல்லாயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்கும் தன்மையில்லாத வகையில் மாநிலத்தை மாற்றியது, வேலை வாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக வைத்திருப்பது, விஷம் போல விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த பழனிசாமி ஆட்சி. இருந்த நிம்மதியைக் கூட கூட தற்போது இழந்து தமிழக மக்கள் தவித்து வருகிறார்கள்.

கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிம்மதி இழந்து காணப்படுகிறார்கள். எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் என்பது சுத்தமாகக் கிடையாது. செய்யும் திட்டங்களிலும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதல்வர் தொகுதியாக இருந்தாலும் அமைச்சர்கள் தொகுதியாக இருந்தாலும் எந்த ஒரு தொகுதியிலும் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாதபடி இந்த ஆட்சி இருந்துவருகிறது. அதுவும் இந்த கரோனா காலத்தில் மக்களை இந்த அரசு கடுமையாகச் சோதித்துவிட்டது. தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தற்போது மக்களுக்குப் பணம் கொடுத்துவருகிறது. ஆனால் திமுக மக்களைக் கைவிடவில்லை. 'ஒன்றிணைவோம் வா' என்பதன் மூலம் மக்களுக்கு சேவை செய்தது. பிறகு, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' மூலம் நாம் தமிழகம் முழுவதும் சூறாவளி பயணத்தை கட்சி முன்னணியினர் செய்தார்கள்.

நம் பொதுச் செயலாளர் அறிவித்தபடி கிராம சபைக் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற உறுதிமொழியை எடுத்துள்ளனர். இது எதைக் காட்டுகிறது என்றால், அதிமுகவை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்டுவதாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு தற்போது மிக முக்கியமான ஒன்று தேவைப்படுகிறது. அந்த வகையில் மு.க ஸ்டாலின் ஆகிய நான் உங்கள் முன்னிலையில் ஒரு உறுதி மொழி எடுக்கிறேன். உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. என்னுடைய அரசின் முதல் 100 நாட்கள் உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் உறுதி மொழி.

அதன் அடிப்படையில் வரும் 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன். அப்போது மக்கள் தங்களுடைய குறைகளைச் சொல்லும் வகையில் அட்டை ஒன்று வழங்கப்பட்டு அதில் குறைகளைத் தெரிவித்த பிறகு, நானே பூட்டி சீல் வைப்பேன். ஆட்சி அமைந்ததும் முதல் நூறு நாட்களில் அந்த குறைகள் எல்லாம் கூடுமான அளவிற்குத் தீர்த்து வைக்கப்படும்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT