ADVERTISEMENT

விஷ்ணு, ரெஜினா ஓகே... ஓவியா ஆர்மி பாவம் - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் 

08:50 AM Dec 21, 2018 | vasanthbalakrishnan

விஷ்ணு விஷால் கரியரில் வெற்றிப் படங்களில் ஒன்றான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் எழுத்தாளரும், இயக்குனர் எழிலின் உதவி இயக்குனருமான செல்லா அய்யாவு இயக்கத்தில் காமெடி மசாலா படமாக வந்துள்ளது இந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.

ADVERTISEMENT



பயந்தாங்கோலி போலீஸ் சக்தியாக வரும் விஷ்ணு விஷால் காவல் நிலையத்தில் எடுபிடி வேலை செய்து வருகிறார். அதேநேரம் சென்னையின் பெரிய தாதாவும், பயங்கர கொலைகாரனுமான ரவுடி 'சைக்கிள் சங்கர்' என்ற பாத்திரத்தில் சாய் ரவி. அவர், அரசியல்வாதியான நிலக்கோட்டை நாராயனான மன்சூர் அலிகானை கொலை செய்ய சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். போலீசார் வலைவீசி தேடி வரும் இவர் ஒரு பாரில் சாய் ரவி குடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. இதைத் தடுக்க அங்கு வரும் விஷ்ணு விஷால், தவறுதலாக கூட்டத்தோடு கூட்டமாக அவரை அடித்துக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். சைக்கிள் சங்கர் பெரிய தாதா என்று தெரியாமலேயே அவரை சித்திரவதை செய்கிறார். ஒரு கட்டத்தில் சிறையிலிருந்து சைக்கிள் சங்கர் தப்பி, விஷ்ணு விஷாலை எப்படியாவது கொலை செய்வேன் என சபதம் எடுத்துச் செல்கிறார். இதனை அறிந்த விஷ்ணு விஷால் தலைமறைவாகி விடுகிறார். சிறுவயதிலிருந்து விஷ்ணு விஷாலும் நாயகி ரெஜினா கஸன்ட்ராவும் காதலிக்கின்றனர். அது ரெஜினாவின் தந்தைக்கு பிடிக்காததால் ரெஜினாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார். விஷ்ணு விஷால் ரவுடியிடமிருந்து தப்பித்தாரா, நாயகி ரெஜினா கெஸான்ட்ராவின் திருமணம் என்னவானது என்பதை 'கலகலப்பு'டன் சொல்லியுள்ளார் இயக்குனர் செல்லா அய்யாவு.

ADVERTISEMENT



முழுக்க முழுக்க காமெடி பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் பயந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்குப் பொருத்தமாக இருக்கிறார். ராட்சசனுக்குப் பிறகு ஒரு ரிலாக்ஸான படம் அவருக்கு. அவர் அவ்வாறு திட்டமிடவில்லையென்றாலும் கூட அவரது கரியர் அப்படி அமைவது நல்லதுதான். கதைத் தேர்வில் கவனமாக இருக்கும் விஷ்ணு நடிப்பில் இன்னும் தூரம் செல்லவேண்டியிருக்கிறது. சிரிக்கவைக்கும் நகைச்சுவையில் அவரது பங்கு என்று பார்த்தால் குறைவாகவே இருக்கிறது. நாயகி ரெஜினா கெஸான்ட்ராவிடம் 'நீங்க வந்தா மட்டும் போதுமென்று இயக்குனர் சொல்லிவிட்டார் போல... வந்து வந்து செல்கிறார், அழகாக. பிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்து வெளியாகும் முதல் படம். நடன அழகியாக வந்து போகிறார். ஓவியா ஆர்மி காரர்கள் பாவம்.

முதல் பாதி சற்று மெதுவாக ஆரம்பித்து, பாத்திரங்களை அறிமுகம் செய்து, இரண்டு மூன்று டிராக்குகள் செட் ஆகி என நாம் சிரிக்கத் தொடங்க சற்று நேரம் எடுக்கிறது. அதன்பிறகு வேகமெடுத்து, இரண்டாவது பாதியில் ஜனரஞ்சகமாகவும் கலகலப்பாகவும் பயணிக்கும்படியான திரைக்கதையை அமைத்து பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. ஏற்கனவே நாம் பலமுறை பார்த்துப் பழகிய காமெடி டெம்ப்ளேட் என்றாலும் அதை ரசிக்கும்படி கொடுத்து பழையதை எல்லாம் மறக்கச் செய்து சிரிக்க வைத்துள்ளார். ஆரம்ப கட்ட காட்சிகள் சற்று அயர்ச்சி, பின்னர் சில நல்ல காமெடி காட்சிகள், இரண்டாம் பாதியில் நாம் பார்த்துப்பழகிய வகை காமெடிகள்... இதுதான் சிலுக்குவார்பட்டி சிங்கம்.



படத்தின் குறைகளை மறைப்பது மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம். யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ஓவியா, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் ஆகியோர் அவரவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்து தியேட்டர்களில் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர். காட்சிக்குக் காட்சி தொய்வு ஏற்படும் இடங்களில் எல்லாம் ஒவ்வொருவராக அதை சரி செய்கின்றனர். இந்தக் கூட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் யோகிபாபு, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர். அதிலும் யோகிபாபுவின் டீ-ஷர்ட்களும் கவனிக்கவைக்கின்றன. கிளைமாக்சில் ஆனந்த் ராஜ் பாத்திரத்துக்குக் கொடுக்கும் ஃபிளாஷ்பேக் செம்ம ஐடியா. பல வருடங்களுக்குப் பிறகு பாட்டியாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்.

பல தனிப்படைகள் தேடும் ரௌடியை ஒரு போலீஸ் ஸ்டேஷனில் யாருக்குமே தெரியாமல் இருப்பது, காமெடி செய்யும் யோகிபாபு டீம் திடீரென ரௌத்திரமாகி போலீஸ் ஸ்டேஷனை துவம்சம் செய்வது, அரதப்பழசான விஷ்ணு விஷாலின் மாறுவேட கான்செப்ட், சைக்கிளை துரத்தும் ஜீப், ஜீப்பைத் துரத்தும் ஆட்டோ, ஆட்டோவைத் துரத்தும் இன்னொரு வண்டி என பார்த்துப் பழகிய துரத்தல்கள்... இப்படி எக்கச்சக்க ஓட்டைகள், குறைகள் இருக்கின்றன. இருந்தாலும் சிரிக்கவைக்கும் சில செம்ம காமெடிகளின் தொகுப்பாக ஜெயிக்கிறது சிலுக்குவார்பட்டி சிங்கம்.



லியோன் ஜேம்ஸ்ஸின் பின்னணி இசை தனித்து கவனத்தை ஈர்க்கவில்லை. காட்சியோடு கடந்துபோகிறது. லட்சுமணனின் ஒளிப்பதிவு கலகலப்பான காட்சிகளை கலர்ஃபுல்லாகக் காட்டுகிறது. சிரத்தை எடுக்கவேண்டிய தேவை அவருக்கும் இல்லை.

காமெடி படங்கள் பார்க்கப்போனால் மூளையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும், லாஜிக் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. காமெடி படங்களிலும் கிளாஸிக் படங்கள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது கிளாசிக் காமெடி அல்ல, பேஸிக் காமெடி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT