kapil returns review

இளம் வயதில் சாதிக்க நினைத்ததை காலச் சூழலால் தவறவிட்டவனுக்கு, அதையே நடுத்தர வயதில் சாதிக்க அதே காலச்சூழல் களம் அமைத்துக் கொடுக்கிற கதை. கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கபில் ரிட்டன்ஸ்.'

Advertisment

ஐடியில் வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த நடுத்தர வயது நபர் அசோக், தன் மகனிடம் ‘நீ இன்ஜினியர் ஆகணும்,' ‘நீ இன்ஜினியர் ஆகணும்' என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். அவரது மனைவிக்கு தன் மகன் டாக்டராக வேண்டும் என்பது விருப்பம். அந்த பையனின் தாத்தாவுக்கு பேரனை கலெக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தங்கள் விருப்பத்தை தன் மீது திணிக்கிற மூவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற அந்த பையனுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது. மகனது விருப்பத்தை அசோக் கடுமையாக எதிர்க்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதும், அந்த மகனின் விருப்பம் நிறைவேறியதா இல்லையா என்பதுமே படத்தின் கதை.

Advertisment

படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டாக்டர் ஸ்ரீனி சௌந்தரராஜன். தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருப்பதாகட்டும், தன் மகனுக்கு ஆபத்து ஏற்படும்போது புது அவதாரம் எடுத்து எதிராளிகளைப் பந்தாடுவதாகட்டும், தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான தகுதிகளுடன் இருக்கிற தன் மகன் நிராகரிக்கப்படும்போது கிரிக்கெட் தேர்வுக் குழுவிடம் கெஞ்சுவதாகட்டும், 40வது வயதில் கிரிக்கெட் களத்தில் கபில்தேவாக இறங்கி பொளலிங் போடுவதில் சாதனை செய்வதாகட்டும் அத்தனையிலும் எளிமையான நடிப்பால் மனதைக் கவர்கிறார்.

கணவனிடம் பிரியமாக இருப்பது, அவன் கலங்கும்போது தோள் கொடுத்து தேற்றுவது, மகனிடம் பாசம் காட்டி ஊக்குவிப்பது என இயல்பான நடிப்பால் தனது பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் நிமிஷா. கிரிக்கெட் பயிற்சியாளராக வருகிற ரியாஸ்கான், தனக்கெதிராக ஒருசில வார்த்தைகள் பேசிய கதாநாயகனை பழிவாங்க திட்டம் தீட்டி செயல்படுத்துவதில் காட்டியிருக்கும் மிதமான வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது.

கதாநாயகனின் இளம்பருவ கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற இளைஞன், கதாநாயகனின் மகனாக வருகிற மாஸ்டர் பரத், வில்லன் போல் என்ட்ரி கொடுத்து பின்னர் அநியாயத்துக்கு நல்லவனாக மாறுகிற பருத்தி வீரன் சரவணன், ஹீரோவுக்கு நண்பனாக தேவையான இடத்தில் ஆதரவாக நிற்கிற வையாபுரி என படத்தின் மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு கச்சிதம்!

ஆர்.எஸ். ராஜ் பிரதாப் இசையில் ‘ஹேப்பி மார்னிங்' பாடலின் துள்ளலிசை மனதுக்கு புத்துணர்வூட்ட, ‘டியா டியா டீலு' பாடல் உற்சாகமாய் கடந்துபோகிறது. கதையின் போக்கை எடுத்துச் சொல்லும் ‘கனிந்ததே காலம் கனிந்ததே' பாடலின் இசை இதம் தருகிறது. பின்னணி இசை காட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ஒளிப்பதிவின் நேர்த்திக்காக உரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஷியாம் ராஜ்.

படத்தின் முன்பாதி பெரிதாய் சுவாரஸ்யமில்லாத காட்சிகளுடன் கடந்தாலும் பின் பாதியில் கதாநாயகனின் இளம்பருவத்தில் நடந்த சம்பவங்கள், கொலைப்பழி, போலீஸ் விசாரணை, கதாநாயகன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம், சின்னதாய் ஒரு திருப்பம் என பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருக்கிறது. கத்தி, ரத்தம், வன்முறை, துப்பாக்கிச் சூடு, ஆபாசம், அருவருப்பு என எதுவும் கலக்காமல், தன் முன்னேற்ற சிந்தனையைத் தூண்டும் விதத்திலான கதைக்களம் அமைத்து எளிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தந்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீனி சௌந்தரராஜனை பாராட்டலாம்!